ஜெயிக்கிறகுதிர சக்தி சிதம்பரம்



டைட்டில்ஸ் டாக் 18

உலகத்தில் பிறந்த ஒவ்வொருத்தருக்கும் அவசியமான விஷயங்கள் உணவு, உடை, உைறவிடம் என்கிற மூணும்தான். இந்த அடிப்படைத் தேவைகளை நிறைவேத்திக்கவே ஆரம்பத்தில் ஓட ஆரம்பிக்கிறோம். இதெல்லாம் கிடைச்சப்புறமும் பந்தயத்துலே நாம ஓடிக்கிட்டேதான் இருக்க வேண்டியிருக்கு. எங்கேயாவது நின்னுட்டோம்னா, நமக்கு பின்னாடி வர்றவன் நம்பளை முந்திக்கிட்டு ஓடிடுறான்.

சாகுறவரைக்கும் நம்ம ஓட்டம் தொடர்ந்துக்கிட்டேதான் இருக்க வேண்டியிருக்கு. ஏன் இப்படி திரும்பிப் பார்க்காம நாம ஓடிக்கிட்டே இருக்க வேண்டியிருக்குன்னு கேட்டா, ‘ஜெயிக்கிற குதிர’தான் இங்கே சமூகத்தில் மதிக்கப்படுது. நிறுத்தி நிதானமா நடந்துக்கிட்டிருந்தோம்னா, நம்மளை நல்லவன்னு சொல்லிடுவாங்க. நல்லவனா இருக்குறதாலே நாலு பேரு நம்மை பரிதாபமாகப் பார்ப்பானே தவிர, மதிக்கக்கூட மாட்டான்.

ஜெயிக்கிறவனைத்தான் எல்லாரும் திரும்பிப் பார்க்கறாங்க. ‘தோல்வி வெற்றிக்கு முதல் படி’ன்னு தோத்தவங்களுக்கு நாம ஆறுதல் வேணும்னாலும் சொல்லலாம். ஆனா, ஜெயிச்சவனுக்குதானே மாலையை போடுறோம்?நீங்க வேணும்னா நல்லா கவனிச்சிப் பாருங்களேன். ஒருத்தன் பெருசா ஜெயிச்சிட்டான்னா போதும்.

அவன் நல்லவனா, கெட்டவனா என்றெல்லாம் யாரும் எடை போட்டு பார்க்குறது இல்லை. அவனோட வெற்றியை அவன் மட்டுமில்லாமே அவனை சுத்தி இருக்கிறவங்க அத்தனை பேரும் கொண்டாட ஆரம்பிச்சிடுறாங்க. தோத்தவனுக்கு சும்மா வாயாலே ஆறுதல் கொடுக்கிறதுதான் அதிகபட்ச நிவாரணமே.

இப்படியெல்லாம் பேசுறதாலே நான் இயக்கிய ‘மகாநடிகன்’ பாணியிலே வில்லத்தனமா பேசுறதா நீங்க நினைக்கக் கூடாது. முதல்லே எவன் அடிக்கிறானோ அவனுக்குதான் சண்டையிலே வெற்றி கிட்டும்னு சொல்லுவாங்க. நீங்க எடுத்ததுமே ஜெயிச்சிட்டீங்கன்னா போதும். அடுத்தடுத்து சின்ன சின்ன சறுக்கல் வந்தாலும்கூட, உலகம் உங்களை அவ்வளவா விமர்சிக்காது.

குதிரைப் பந்தயத்துலே ஜெயிக்கிற குதிரை மேலேதான் பந்தயம் கட்டுவாங்க. சினிமாவிலும் அப்படித்தான். அப்பப்போ குதிரைகள் மாறலாம். ஆனா, எந்த குதிரை வேகமா ஓடுதோ அதுக்குதான் மவுசு. இப்போ ‘பாகுபலி’ ஓடுது இல்லே? அந்தப் படத்துலே நடிச்சவங்களில் தொடங்கி லைட்பாய் வரைக்கும் கொஞ்சம் மெதப்பாதான் திரிவாங்க.

திடீர்னு கால் உடைஞ்சிடிச்சின்னா ஓட முடியாதுங்கிறதுதான் யதார்த்தம். ரொம்ப நாளா சினிமாவில் இருக்கிறவன் வெற்றியை காணும்போதும் சரி, தோல்வியை எதிர்கொள்ள நேரிடும்போதும் சரி நிதானமாதான் இருப்பான். அப்போதான் இங்கே நீடிக்க முடியும் என்கிற அனுபவ உண்மையை உணர்ந்தவன் அவன்.சினிமாவில் நான் ரசிச்ச ‘ஜெயிக்கிற குதிர’ பற்றி அடுத்த வாரம் சொல்றேன்.

எழுத்தாக்கம் : சுரேஷ்ராஜா

(தொடரும்)