கிளாமரைவிட குஜாலான மேட்டர்!



“தன் பெயருக்கு முன்னாடி டெர்ரராக ஓர் அடைமொழியை வைத்துக் கொண்டால், அதுதான் கெத்து என்று பலரும் நினைக்கிறார்கள். தன் பெயருக்கு முன்பாக ‘பிச்சுவா கத்தி’ என்று அடைமொழி சுமந்தவன், நிஜமாகவே கத்தியைத் தூக்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது என்பதுதான் என் படத்தின் கதை” என்று தன்னுடைய ‘பிச்சுவா கத்தி’ படத்துக்கு வாயாலேயே டீஸர் ஓட்டி பேட்டியை ஆரம்பித்தார் இயக்குநர் அய்யப்பன். சுந்தர்.சி பட்டறை யில் தயாராகி வந்திருக்கும் லேட்டஸ்ட் கத்தி.

“ஆக்‌ஷன் படமா?”“லைவ்வான ஸ்டோரி. இன்றைய பசங்களோட வாழ்க்கை முறைதான் கதை. டீனேஜில் தெரியாமல் செய்யும் தவறுகள், அவர்கள் நிஜமான வாழ்வை வாழத் தொடங்கும்போது எப்படியெல்லாம் ஸ்பீட் பிரேக்கர் ஆவுதுங்கிறதை காதல், காமெடியெல்லாம் கலந்து சொல்லியிருக்கேன்.”

“கதை?”“மூணு பசங்க. உணர்ச்சிவசப்பட்டு ஒரு தப்பு பண்ணிடறானுங்க. கோர்ட் வாசல் ஏறவேண்டியிருக்கு. அவனுங்க தலையிலே என்ன எழுதியிருக்குங்கிறதை சீன் பை சீனா விறுவிறுப்பு ஏத்தி சொல்லியிருக்கேன்.”

“நீண்ட இடைவெளிக்குப் பிறகு இனிகோ பிரபாகர்?”
“நல்ல நடிகர். ‘சுந்தர பாண்டியன்’ படத்துலே அமைதியா வந்து, கிளைமேக்ஸில் விஸ்வரூபம் எடுத்தவர். இவரோட ‘நண்பர்கள் நற்பணி மன்றம்’ படத்துலே நடிச்ச செங்குட்டுவன், இன்னொரு ஹீரோவா நடிக்கிறார். இவங்க ரெண்டு பேருமே தங்கள் கேரியரை ஸ்டெடி செஞ்சுக்கறதுக்காக வெறித்தனமா உழைச்சிருக்காங்க.”

“சுந்தர்.சி பாணியில் டபுள் ஹீரோயினா?”
“டபுள் ஹீரோன்னா, டபுள் ஹீரோயின் இருந்தாதானே ஈக்குவல் ஆவும். இனிகோ ஜோடியா ஸ்ரீபிரியங்கா. ‘வந்தா மல’ படத்துலே வெளுத்து வாங்கினவங்க இவங்க. செங்குட்டுவனுக்கு ஜோடியா நடிக்கிற அனிஷாவுக்கு இதுதான் ஃபர்ஸ்ட் மூவி. ரெண்டு ஹீரோயின் என்றதும் டபுள் கிளாமரான்னு கேட்காதீங்க. கிளாமரை விட குஜாலான விஷயத்தை படத்துலே புதைச்சு வெச்சிருக்கேன்”“உங்க குருநாதர் படத்துலே நட்சத்திரங்கள் நிறைஞ்சிருக்கும்...”

“ஆமாம். நம்ம பாணியும் அதுதான். யோகிபாபு, காளிவெங்கட், பால சரவணன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரமேஷ் திலக் கூட்டணி காமெடியில பின்னி பெடல் எடுத்திருக்காங்க. அவங்க காமெடிக்காகவே படத்தை நாலஞ்சு வாட்டி பார்ப்பீங்க. செங்குட்டுவன் அம்மாவா பருத்திவீரன் சுஜாதா வர்றாங்க. வில்லனா ‘ஈட்டி’ ஆர்.என்.ஆர்.மனோகர் பண்றார்”
“நீங்களும் காமெடிப்படம்தான் எடுப்பீங்களா?”

“சுந்தர்.சி மாதிரியே எடுப்பீங்களான்னு கேட்குறீங்க. சாரோட அடையாளம் காமெடிதான். நான் அவரிடமிருந்து கொஞ்சம் மாறுபட்டு எனக்குன்னு ஓர் அடையாளம் உருவாக்கிக்க நினைக்கிறேன். ஏதாவது புதுசா பண்ணாதான் ஃபீல்டில் நிக்க முடியும்”
“டெக்னிக்கல் டீம்?”

“மியூசிக்கை பொறுத்தவரை ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘மஞ்சப்பை’ போன்ற ஏராளமான படங்கள் பண்ணிய ரகுநந்தன் பார்த்துக்கறாரு. எக்ஸ்பீரியன்ஸ் ஹேண்ட் என்பதால் சாங் வாங்கும் விஷயத்தில் எனக்கு வேலையே வைக்கவில்லை. அனைத்துப் பாடல்களையும் யுகபாரதி எழுதியிருக்கிறார்.  ஒளிப்பதிவு கே.ஜி.வெங்கடேஷ். ஏற்கனவே ‘சதுரங்க வேட்டை’, ‘பாம்பு சட்டை’ போன்ற படங்கள் பண்ணியிருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்துக்கும் அவர்தான் கேமரா.

ரசிகர்களை ஸ்கிரீனோடு கட்டிப்போடுகிற ஜாலம் தெரிந்தவர். இந்தப் படத்திலும் அது ஒர்க் அவுட்டாகியிருக்கு. தளபதி தினேஷின் மகன் ஹரி தினேஷ் சண்டைக்காட்சிகள் பண்ணியிருக்கிறார்.

அப்பா மாதிரியே இவரும் ஆக்‌ஷன் காட்சிகளில் தெறிக்கவிட்டிருக்கிறார். ‘சதுரங்க வேட்டை’, ‘கோலிசோடா’ போன்ற படங்களுக்கு எடிட் பண்ணின ராஜா சேதுபதிதான் நமக்கு எடிட்டர். ஷெரீப், தினா கோரியோகிராபி பண்ணியிருக்கிறார்கள். தயாரிப்பாளர் மாதையன் சினிமா ஆர்வம் உள்ளவர் என்பதால் கதைக்கு என்ன தேவையோ அதை தயங்காமல் செய்துகொடுத்தார்.”“உங்களைப் பத்தி சொல்லவே இல்லையே?”

“சொந்த ஊர் தர்மபுரி. படிக்கும் போதே சினிமா மீது ஆர்வம். டெய்லி ஒரு சினிமாவது பார்ப்பேன். அதனாலேயே படிச்சி வேலைக்கு போகணும் என்று சிந்திக்காமல் சினிமாவுக்கு போகணும் என்று சிந்திப்பேன். சுந்தர்.சி சாரிடம் ‘கலகலப்பு’, ‘நகரம்’, ‘மதகஜராஜா’ படங்களில் வேலை பார்த்தேன்.  ஆடியோ ரிலீஸ் சமயத்துல சாரை இன்வைட் பண்ணினேன். அந்த சமயத்தில் அவர் ஐதராபாத்தில் அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் இருந்தார். ‘நல்லா பண்ணுங்க’ன்னு வாட்ஸப்பில் வாழ்த்தினார்.

படம் ரெடியானதும் அவருக்கு போட்டுக்காட்டப் போறேன். ஒரு சினிமாவை எவ்வளவு சீக்கிரமா எடுப்பது, தயாரிப்பாளருக்கு எப்படி செலவை மிச்சப்படுத்துவது, ப்ளானிங், ரசிகர்கள் ரசிக்கிற மாதிரி ஒரு கதையை எப்படி படமாக்குவது போன்ற விஷயங்களை சாரிடமிருந்து கற்றேன். அவரைப் பொறுத்தவரை எல்லாமே ஸ்பீட்தான்.

ஆனால் குவாலிட்டி பக்காவா இருக்கும். சொன்ன தேதியிலிருந்து ஐந்து நாளுக்கு முன்பே படத்தை எடுத்து முடிப்பார். இந்தப் படத்துக்காக அறுபது நாள் ஷெட்யூல் போட்டேன். ஐம்பத்தைந்து நாட்களில் முடிச்சேன்.”

- சுரேஷ்ராஜா