சேச்சி! ஆனால், தமிழச்சி!



அப்பா துரைப்பாண்டியன் சினிமா மக்கள் தொடர்பாளர் மற்றும் கலைஞர் தொலைக்காட்சியின் செய்தித்தொடர்பாளர் என்று வலம் வருவதால், சின்ன வயதிலேயே ஆராவுக்கு சினிமா மீது சினேகம் ஏற்பட்டுவிட்டது.

சகாக்கள் எல்லாம் தூரத்தில் நின்று பார்க்கும் நட்சத்திரங்களை, அவர்களது வீட்டுக்கே சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தபோது, தானும் சினிமாவில் இடம்பெறவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்.

பள்ளி மற்றும் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வாங்கிய கைதட்டல்களும் பரிசுகளும் இவரது ஆசையை பேராசையாக்கின. இப்போது சினிமா நாயகி என்கிற தகுதியைப் பெற்றுவிட்டார் ஆரா.“அதென்ன ஆரா?”

“ஒளிவட்டம்னு அர்த்தம்”
“சொந்த ஊர்?”
“திருச்செந்தூருக்குப் பக்கத்தில் உள்ள குரும்பூர். நான் பிறந்தது வளர்ந்தது உயர்ந்தது எல்லாம் சென்னையில்தான்.”
“பேச்சில் ஆப்பம், கப்பங்கிழங்கு, மீன் வாடை அடிக்கிறதே?”
“அம்மா சத்யப்ரியா மலையாளியாக்கும்.”
“முயற்சிக்கு பயிற்சி?”

“தினேஷ் மாஸ்டரிடம் நடனம், அம்மாவிடம் நடிப்பு.”
“அப்பிடி நில்லு, இப்பிடிப் பாருன்னு சொன்ன முதல் இயக்குநர்?”
“சுசீந்திரன். ‘ஜீவா’ படத்தில் விஷ்ணு விஷாலுக்கு தங்கையாக நடித்தேன். ‘எங்க அண்ணன் ஜெயிச்சுட்டான்’- இதுதான் முதல் வசனம்.”
“அடுத்தது?”

“ஹரி இயக்கத்தில் ‘பூஜை’ படத்தில் விஷால் தங்கையாக....”
“அப்புறம்?”
“நாயகியாகும் நாளுக்காக காத்திருந்தேன்.”
“அழைத்தது யாரோ?”

“இயக்குநர் மஜீத். ‘பைசா’ படத்தில் ‘பசங்க’ ராமின் நாயகியாக்கிவிட்டார்.”
“இப்போ?”
“வி.சி.குகநாதன் உதவியாளர் தேவராஜ் இயக்கத்தில் ‘பெப்பே’ மற்றும் இரண்டு மலையாளப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன்.”
“படிப்பு அவ்ளோதானா?”
“மீனாட்சி காலேஜ்ல வந்து கேட்டுப்பாருங்க. தமிழ் அப்பாவுக்கும் மலையாளி அம்மாவுக்கும் வாரிசாகப் பிறந்து, ஆங்கில இலக்கியத்தில் கலக்கிக்கொண்டிருக்கிறேன்.”

- நெல்பா