முத்தம் முத்தம் முத்தமா?



தமிழிலும் இப்போது ஹாலிவுட் படங்களுக்கு நிகரான சண்டைக்காட்சிகள் இடம்பெறுகின்றன. ஆனால் இங்கிலீஷ் ஸ்டைல் கிஸ்ஸுக்கு மட்டும் சென்சார் கிடுக்கிப்பிடி போடுகிறது என்று இயக்குநர்கள் அங்கலாய்க்கிறார்கள். எனவே இலைமறை காய்மறையாக முத்தம் என்று தெரிவது மாதிரி லேசாக காட்சிகளை படமாக்க வேண்டியிருக்கிறதாம்.

முத்த மன்னன் கமல்ஹாசன், ‘புன்னகை மன்னன்’ படத்தில் ரேகாவுக்கும், ‘குருதிப்புனல்’ படத்தில் கவுதமிக்கும், ‘மகாநதி’ படத்தில் சுகன்யாவுக்கும் கொடுத்த அழுத்தமான முத்தங்களை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஆனால், இப்போதெல்லாம் அவரே முத்தக் காட்சிகளைத் தவிர்த்து வருகிறார்.

‘குஷி’யில் விஜய், ஜோதிகாவுக்கு கொடுத்த முத்தம், ‘லவ் பேர்ட்ஸ்’ படத்தில் பிரபுதேவா, நக்மாவுக்கு கொடுத்த முத்தங்களும் குறிப்பிடத்தக்கது. ‘வல்லவன்’ படத்துக்காக சிம்பு, நயன்தாராவுக்கு கொடுத்த (கடித்த) முத்தம், போஸ்டரில் இடம்பெற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

‘விரும்புகிறேன்’ படத்தில் பிரசாந்த், சினேகாவுக்கு கொடுத்தது, ‘குரு’வில் மாதவன், வித்யாபாலனுக்கு அளித்தது, ‘சர்வம்’ படத்தில் ஆர்யா - திரிஷா லிப்லாக், ‘கடல்’ படத்தில் கவுதம் கார்த்திக், துளசியை உறிஞ்சியது, ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷால், லட்சுமி மேனனுக்கு கொடுத்த சூடான முத்தம், ‘மரியான்’ படத்தில் தனுஷ் டூ பார்வதி, ‘தங்க மகன்’ படத்தில் அதே தனுஷ், எமி ஜாக்சனின் ஆப்பிள் உதடுகளை பதம் பார்த்தது என்று மறக்கவியலாத முத்தப் பட்டியல் நீளுகிறது. அட, மறந்துவிட்டோமே! ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் ஜி.வி.பிரகாஷ், மணிஷாவுக்கு தந்த நீண்ட உம்மாவை மறக்கவும், அது தமிழ் இளசுகளிடையே ஏற்படுத்திய சூட்டை மறுக்கவும்தான் முடியுமா?

நமக்கு இவ்வளவு நீளமான முத்தப் பாரம்பரியம் இருந்தாலும், இன்னும் ஹாலிவுட் பாணியில் அதிரடியாக நீண்ட நேரங்களுக்கு நீளும் வகையில் முத்தம் கொடுக்க சென்சார் முட்டுக்கட்டையாக இருக்கிறது. எதற்கு வம்பு என்று நம் ஹீரோக்கள் சும்மா உதட்டை ஒத்திவைத்து எடுத்துவிடுவதைப் போல படமெடுக்கிறார்கள்.

- தேவராஜ்