பாக்யராஜ் கண்டெடுத்த பாடலாசிரியர்



தஞ்சை மாவட்டம் குருவிக்கரம்பை என்கிற குக்கிராமத்தில் பிறந்தவர் சண்முகம். இளம் வயதிலேயே இவருக்கு கவிதை எழுதும் ஆற்றல் கைக்கு வந்தது. பாரதிதாசன் மீது அளவு கடந்த பற்றுக் கொண்டிருந்த சண்முகம், அவரது மாணவர்களுள் ஒருவராக இருந்து கவிப்புலமையை மேம்படுத்தினார்.

1968 ஆம் ஆண்டு நடந்த உலகத்தமிழ் மாநாட்டு கவிதைப் போட்டியில் பங்கேற்று, ‘புகாரில் ஒருநாள்’ என்ற கவிதைக்கு முதல்பரிசு பெற்று, தமிழறிஞர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ஆரம்பத்தில் மரபுக்கவிதை, பின்னர் புதுக்கவிதை என பயணம் மாறிய கவிஞர்களுள் இவரும் ஒருவர். இவரது படைப்புகளில் ‘நினைவுச் சின்னம்’, ‘பாட்டுப் பறவை’, ‘ஒரு குயிலின் குரல்’, ‘செந்நெல் வயல்கள்’, ‘குருவிக்கரம்பை சண்முகம் கவிதைகள்’, ‘பூத்த வெள்ளி’, ‘கவிதை அரங்கேறும் நேரம்’, ‘விரல் விளக்குகள்’ ஆகியவை பரிசுகளையும் பலரது பாராட்டுகளையும் அள்ளி வந்தன.

முதுகலைத் தமிழ், முதுகலைத் தமிழ் இலக்கியம், முனைவர் பட்டம் என கல்வித்தகுதி கொண்ட சண்முகம், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

இத்தாலி நாட்டுப்புற இயல் அறிஞர்களுடன் இணைந்து, “Tamilnadu Folk Dance and Folk Music” என்ற தலைப்பில் இவர் எழுதிய ஆய்வு நூல் அகிலம் முழுக்க உள்ள தமிழறிஞர்களால் பாராட்டுப் பெற்றது. தமிழக அரசின் ‘பாரதிதாசன் விருது’ மற்றும் ‘கலைவித்தகர் விருது’ ஆகியவை இவரது இலக்கியப் பணியின் சிறப்புக்கு சிறப்புச் சேர்த்தன.

குருவிக்கரம்பை சண்முகம் சினிமா உலகில் வலம் வருவதற்கு இடமளித்தது 1981ல் கோவையில் நடந்த கவியரங்கம். அந்த கவியரங்கத்துக்கு இயக்குநர் கே. பாக்யராஜ் தலைமையேற்றிருந்தார். கவிஞரின் கவிதையாடல் பாக்யராஜைக் கவர்ந்து விட்டது. சண்முகத்தின் தமிழ்ப் புலமையைப் பெரிதும் பாராட்டிய இயக்குநர், சென்னைக்கு வந்தால், தன்னை சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார்.

ஒரு ஜூலை மாதத்து முதல் தேதியில் கே. பாக்யராஜை, அவரது வீட்டில் சந்தித்தார் சண்முகம்.“நீங்கள் ஏன் திரைப்படங்களில் பாட்டு எழுத முயற்சி செய்யவில்லை?” என்று கேட்டார் பாக்யராஜ். “சில ஆண்டுகளுக்கு முன்னர் என்னைப் பாட்டெழுத வைத்து, ஒருவர் பதிவு செய்தார். அந்தப்படம் வெளிவரவே இல்லை. அதிலிருந்து எனக்கு சினிமாப் பாடல் எழுதுவதில் ஆர்வம் இல்லை” என்றார் குருவிக்கரம்பை சண்முகம்.

“எனது படத்தில் பாட்டெழுத சம்மதமா?” என்ற கேள்விக்கு, உடனடியாக சம்மதம் சொன்ன சண்முகம், ஆர்மோனியம் கற்றுக் கொள்வதற்கு அவகாசம் கேட்டு, முறையாகப் பயிற்சி பெற்ற பிறகு, இயக்குநரைச் சந்தித்தார். “பாடல் எல்லோருக்கும் புரிய வேண்டும். எல்லோரையும் கவரவேண்டும். உங்கள் கவிதையை எளிமைப் படுத்துங்கள். நல்ல பாடலாகிவிடும்” என்று அறிவுரை சொல்லியிருக்கிறார் பாக்யராஜ்.

‘அந்த 7 நாட்கள்’ படத்துக்காக ஒரு டூயட் ட்யூன் கவிஞரிடம் கொடுக்கப்பட்டது. தனது கவிதைத் தொகுப்பின் தலைப்பான ‘கவிதை அரங்கேறும் நேரம்’ என்று வார்த்தைகளை அடுக்கி, ‘மலர்க்கணைகள் பரிமாறும் தேகம்......’ என ஒரு மணி நேரத்துக்குள் எழுதி முடித்தார்.

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கட்டிப்பிடித்துப் பாராட்டி, கவிஞரைப் பெருமைப்படுத்தினார். எழுதிய முதல் பாடலே மிகப்பெரும் புகழைப் பெற்றதில் மெய்சிலிர்த்துப் போனார் சண்முகம்.

போகுமிடங்களில் எல்லாம் ‘அந்தப் பாட்டை எழுதியது நீங்கள் தானே?’ என்று கேட்டு, ரசிகர்கள் உற்சாகப்படுத்தினார்கள். ஜெயச்சந்திரன் - ஜானகி குரலில் ஒலித்த அந்தப் பாடல் உலகத்தமிழ் திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அடுத்து, பாக்யராஜ் - பூர்ணிமா நடிப்பில் வந்த ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில், சங்கர் - கணேஷ் இசையமைப்பில் ‘ஓ நெஞ்சே நீ தான் பாடும் கீதங்கள்......’ என்ற பாடலை எழுதினார் சண்முகம். எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலில் அவலச்சுவை நிறைந்த அந்தப்பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

‘கன்னிராசி’ படத்தில் இளையராஜா இசையில் இவர் எழுதி, மலேசியா வாசுதேவனும் வாணி ஜெயராமும் பாடிய ‘சுகராகமே சுகபோகமே......’ பாடலுக்கும் சிறப்பான வரவேற்புகிடைத்தது.இளையராஜா இசையில் ‘ஆண்பாவம்’ படத்தில் சண்முகம் எழுதிய ‘குயிலே குயிலே பூங்குயிலே......’ பாடல் மலேசியா வாசுதேவன் - சித்ரா குரல்களில் சினிமா ரசிகர்களின் காதுகளைக் கவர்ந்தது.

ராமராஜன் நடித்த ‘ஹலோ யார் பேசறது’ படத்தில் ‘ஹலோ ஆசை தீபமே.....’ என்ற பாடலை சண்முகம் எழுதினார். அந்தப் பாடல் தீபன் சக்ரவர்த்தி - ஜானகி குரல்களில் ஒலி்த்தது.‘நிலவே மலரே’ படத்தில் ‘மாலை பொன்னான மாலை......’,

‘தூரம் அதிகமில்லை’ படத்தில் ‘நான் பாடுனா நெஞ்சம்தான் வாழ்த்துமா.....’, ‘இனியவளே வா’ படத்தில் ‘மங்கம்மா கண்ணில் மின்னல் துள்ளுதே.....’, ‘மறக்கமாட்டேன்’ படத்தில் ‘தேவனே எந்தன் தேவனே......’, ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் ‘என்ன வேணும் ஏது வேணும் கேட்டுக்கோ....’, ‘சின்ன வீடு’ படத்தில் ‘மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்......’ என சண்முகத்தின் பாட்டுச்சாலைப் பயணம் தொடர்ந்தது.

கண்ணதாசனுக்கும் மு.மேத்தாவுக்கும் வந்த சொந்தப்படத் தயாரிப்பு ஆசை சண்முகத்துக்கும் வந்தது. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை என பொறுப்பேற்று ‘மாப்பிள்ளை மனசு பூப்போல’ என்ற படத்தைத் தயாரித்தார். பாண்டியராஜன் - யுவராணி நடித்த அந்தப்படம், கவிஞருக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்திக் கடனாளியாக்கிவிட்டது.

அந்தக் கவலையிலேயே உடல்நலம் குன்றிப்போய் அமரர் ஆனார் குருவிக்கரம்பை சண்முகம்.கவிஞரின் மாணவர் - பாடலாசிரியர் மற்றும் பள்ளிக்கூட ஆசிரியரான மாணிக்கம் சண்முகம், குருவிக்கரம்பை சண்முகத்தின் படைப்புகள் மற்றும் வாழ்வியலை விரிவான புத்தகமாக எழுதி வருகிறார்.

அடுத்த இதழில்

பாடலாசிரியர் மதன் கார்க்கி

நெல்லைபாரதி