தெறி



சத்திரியனின் மகன்!

தமிழ் சினிமாவில் ஏற்கனவே பார்த்த சில பல படங்களை இப்படத்தின் கதை நினைவூட்டினாலும், திரைக்கதை மற்றும் ஸ்டைலான மேக்கிங் மூலமாக அனைத்துத் தரப்பு ரசிகர்களும் கொண்டாடக்கூடிய விதமாக பாக்ஸ் ஆபீஸை வெறிகொண்டு ‘தெறி’க்கவிட்டுக் கொண்டிருக்கிறது.

போக்கிரி நாயகன் விஜய் கேரளாவில் பேக்கரி நடத்துகிறார். மனைவியை இழந்தவர், தன் குழந்தை நைனிகாவுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டார். ஒருநாள் உள்ளூர் ரவுடிகள் சிலர் விஜய்யுடன் மோதுகின்றனர்.

பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும்போது, போலீஸ் நிலையம் செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதுநாள் வரை அன்னா ஹசாரே போல அமைதியாக இருந்த விஜய்க்கு, பாட்ஷா மாதிரி வேறு முகம் இருப்பது தெரியவருகிறது.

இதற்கிடையே, தன்னால் அழிக்கப்பட்டு விட்டதாக நினைக்கும் விஜய் உயிருடன் இருப்பதை அறிந்த வில்லன் மீண்டும் தன் திருவிளையாடலைத் தொடங்குகிறார். அதன் பிறகு குழந்தையைக் காப்பாற்ற விஜய் எடுக்கும் நெறியான முயற்சிகள்தான் ‘தெறி’யின் மீதிக் கதை.

விஜய் மீது ரசிகர்களுக்கு இருக்கும்  மிகப்பெரிய குறை மாற்றம் இல்லாத ஒரே நடிப்பு. அதை இந்தப் படத்தில் அடியோடு மாற்றியிருக்கிறார். அவ்வகையில் இந்தப் படத்தில் விதவிதமான கெட்டப்புகளில் நடித்து, தனது ரசிகர்களின் உள்ளக்கிடக்கையைப் போக்கியிருக்கிறார். விஜய்க்கு போலீஸ் உடை பொருந்தாது என்கிற அவப்பெயரையும் முற்றிலுமாக உடைத்தெறிந்துள்ளார்.

ரொமான்ஸ், ஃபேமிலி, சென்டிமென்ட் என அனைத்துக் காட்சிகளிலும் தெறிக்கவிட்டுள்ளார். போனஸாக சமந்தாவுடன் லிப் கீஸ் சீன்ஸ். மலையாள ரசிகர்களைக் கவர மலையாளத்திலும் சரளமாகப் பேசி கைதட்டல் வாங்குகிறார். பெண் பார்க்கும் படலத்தில் நம்ம வீட்டுக்கு இப்படியொரு மாப்பிள்ளை கிடைக்க மாட்டாரா என்று ஏங்க வைக்கிறார். மொத்தத்தில் மெத்தனமாக இல்லாமல் அதிக ரிஸ்க் எடுத்திருக்கிறார்.

விஜய்க்கு அடுத்து மனதைக் கொள்ளையடிப்பவர் நைனிகாதான். எமியிடம் விஜய்யை அண்ணா என்று அறிமுகப்படுத்தும் காட்சியாகட்டும், ரவுடிகளை டேய் தடியா என்று அழைப்பதாகட்டும், செல்லம் கொஞ்ச வைக்கிறார்.

ரஜினிக்கு ஒரு பேபி மீனா போல் விஜய்க்கு மீனாவின் பேபி கிடைத்திருக்கிறார். இந்த காம்போவுக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம். சமந்தா மெழுகு பொம்மை போல் வசீகர அழகு. காதலியாக, மனைவியாக, அம்மாவாக 3டி கேரக்டர் அவருக்கு.  இறக்கும்போது  விஜய்யை மட்டுமின்றி ரசிகர்களையும் அழவைக்கிறார்.

எமிக்கு துண்டு கேரக்டர். ஆனால், துண்டு மாதிரி டிரெஸ் அணிந்து கவர்ச்சி காட்டாமல், நீட்டாக வந்து போகிறார்.பழம்பெரும் இயக்குநர் மகேந்திரன் வில்லன் கதாபாத்திரத்துக்கு கச்சிதம். அவருடைய முகம் தராத பயத்தை அவருடைய குரல் தரும்போது  பேய் பயம். தன்னுடைய புகழுக்கு பங்கம் வராத அளவுக்கு பக்காவாக நடித்திருக்கிறார். பிரபு, ராதிகா, அழகம் பெருமாள் என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு சிறப்பு செய்திருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு இது 50வது படம் என்பதாலோ என்னவோ தாறுமாறாக தாண்டவம் ஆடியிருக்கிறார். ‘என் ஜீவன்’ பாடல் ஒன்ஸ் மோர். பின்னணி இசையும் சூப்பர். ஜார்ஜ் சி வில்லியம்ஸின் கேமரா அனைவரையும் அழகாகக் காண்பித்திருக்கிறது. வழக்கமான போலீஸ் கதையை போரடிக்காமல் சொல்லியதற்காக அட்லீயைப் பாராட்டலாம்.