படிக்கும்போதே பார்வதிக்கு கின்னஸ் கிடைத்தது!



அஜீத்தின் ரிலீசான ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக வந்த அருண் விஜய் ஜோடியாக, தமிழில் அறிமுகமானார் பார்வதி நாயர். மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமாவில் பலமாக காலூன்றவே விரும்புகிறார்.

இனி அவருடன்...“நான் காலேஜ் படிக்கிறப்ப நடந்த கலை நிகழ்ச்சிகள்ல பங்கேற்றேன். அதுதான்  சினிமாவுக்கு வர காரணமா இருந்தது. முதல்ல நிறைய குறும்படங்கள்ல என் திறமையைக் காட்டி நடிச்சேன். அதுக்கு பிறகு மாடலிங் பண்ணேன். அது படத்துல எவ்வளவு பெரிய கேரக்டரா இருந்தா லும் சரி, தயக்கம் இல்லாம நடிக்க முடியும்னு தைரியம் கொடுத்தது.

ஆண்டவனோட தேசம்னு கேரளாவை  வர்ணிப்பாங்க. என் குடும்பம் முதல்ல அங்கதான் இருந்தது. ஆனா, நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே அபுதாபியில். என் ஃபாதர் வேணுகோபால் எஞ்சினியரா இருக்கார். அம்மா லேகா, காலேஜ் லெக்சரர். என் குடும்பமே எஜுகேஷனில் ரொம்ப ஈடுபாடு கொண்ட குடும்பம்னு சொல்லலாம்.

ஸோ, எனக்கும் நல்லா படிப்பு வந்தது. மணிப்பால் காலேஜ்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சேன். 2009ல் ‘மிஸ் கர்நாடகா’ ஆனேன். அடுத்த வருஷம் ‘மிஸ்.நேவி குயின்’ ஆனேன். பேஷன் ஷோக்கள்லயும் கலந்து கிட்டேன். இதனால் எனக்கு மவுசு வந்தது. எல்லாரோட பார்வையும் என் பக்கம் விழுந்தது. சினிமாவில் நடிக்க கேட்டாங்க.

என் முதல் படம் கன்னடத்துல உருவாச்சு. ஆனா, முதல்ல ரிலீசான படம் மலையாளத்தில் வந்தது. அதுக்குப் பிறகு மலையாளத்திலும், கன்னடத்திலும் நடிச்சேன். தமிழ்ல ஜெயம் ரவியோட ‘நிமிர்ந்து நில்’ படத்துல நடிக்க கேட்டாங்க. ஆனா, அது ரொம்ப சின்ன கேரக்டர். ஆனாலும், இது நடிப்புதானேன்னு துணிஞ்சு நடிச்சேன். இப்ப ‘என்னை அறிந்தால்’ படம் எனக்கு திருப்புமுனையா அமைஞ்சிருக்கு. இந்தப் படத்துல திரிஷா, அனுஷ்கா கூட சேர்ந்து நடிச்சேன். அவங்கவங்க கேரக்டருக்கு முக்கியத்துவம் தந்திருந்தாங்க. அதனால் நான் தப்பிச்சேன்.

நடிகர் ரமேஷ் அரவிந்த் டைரக்ஷன்ல கமல் நடிச்சிருக்கும் படம், ‘உத்தம வில்லன்’. கமல் மகனா வரும் அஸ்வினுக்கு ஜோடியா, ரொம்ப முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்ல என்னை பார்த்திருந்தீங்கன்னா,  விழுந்து விழுந்து சிரிச்சிருப்பீங்க. ஏன்னா, உலக நாயகன் கமல் கூட எப்படி நடிக்கப் போறேனோன்னு பயந்தேன். சரியா சாப்பிட முடியல. ஷூட்டிங் இடைவெளியில சரியா ரெஸ்ட் எடுக்க முடியல. எப்ப பார்த்தாலும் படபடப்பா இருந்தேன். இதை கவனிச்ச ரமேஷ் அரவிந்த், டென்ஷனாகாம நடிங்கன்னு சொன்னார்.

 ‘உத்தம வில்லன்’ படத்துல நடிச்ச அனுபவத்தை மறக்க முடியாது. ஒவ்வொரு சீனையும் கமல் விவரமா சொல்வார். அதை அப்படியே மனசுல பதிய வெச்சுக்குவேன். அதுக்குப் பிறகு எவ்வளவு நீளமான சீனா இருந்தாலும், ரொம்ப ஈசியா நடிக்கிற அளவுக்கு என்னை மாத்திக்கிட்டேன். எந்தத் துறையா இருந்தாலும் சரி, முழு ஈடுபாடு காட்டி ஒர்க் பண்ணா ஜெயிக்க முடியும். இந்த ரகசியத்தை கமல், அஜீத் கிட்ட கத்துக்கிட்டேன். இந்த நேரத்துல அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டியது என் கடமை. ‘என்னை அறிந்தால்’ ஷூட்டிங் ஸ்பாட்ல, அஜீத் என்னை விதவிதமா போட்டோ எடுத்துக் கொடுத்தார்.

இப்ப தமிழ், கன்னடம், மலையாள மொழிகள்ல நடிக்க பேச்சுவார்த்தை நடந்துகிட்டிருக்கு. எனக்கு பாலிவுட் ஆசை எல்லாம் கிடையாது. ஆக்டிங் ஸ்கோப் இருக்கிற கேரக்டரை செலக்ட் பண்ணி நடிப்பேன். மாடர்ன் டிரெஸ்சில் வர தயக்கம் கிடையாது. நீச்சல் டிரெஸ், பிகினி போட்டு நடிக்கிறது பற்றி முடிவு பண்ணல. 

எனக்கு சரளமா தமிழ் பேச வரும். அடுத்த படத்துல இருந்து நானே டப்பிங் பேசுவேன். தமிழ்லயும், மலையாளத்துலயும் பார்வதி என்ற பேர்ல சில நடிகைங்க இருக்காங்க. அதனால், எனக்கு தனி அடையாளம் வேணும்னு, பார்வதி நாயர் பேரை யூஸ் பண்றேன்” என்ற பார்வதி, பள்ளியில் படிக்கும்போது நடந்த மிக நீளமான பெயின்டிங் போட்டியில் பங்கேற்றார். அதன் கான்செப்ட் என்னவென்றால், உலகில் இருக்கும் மிக முக்கியமான நாடுகளை வரைய வேண்டும்.

அதில் பார்வதி பங்கேற்று வரைந்தார். அவருடன் தோழிகள் பங்கேற்று வரைந்தனர். அவர்கள் வரைந்த ஓவியம், கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பெற்றது. எனவே, இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் கின்னஸ் சர்ட்டிபிகேட் கிடைத்தது. வீட்டில் அதை பத்திரமாக வைத்திருக்கிறாராம் பார்வதி. இதை சொல்லிச் சொல்லி சந்தோஷப்படுகிறார்.

- தேவராஜ்