ஆடவைத்தவர் ஆக்க்ஷன் கட் சொல்கிறார்!



ரஜினி, அஜித் என டாப் ஹீரோக்களை ஆட வைத்த பெருமை நடன இயக்குனர் சம்பத்ராஜுக்கு உண்டு. ‘வீரா’, ‘காதல் கோட்டை’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘செம்பருத்தி’ உட்பட சுமார் 500 படங்களில் நடன இயக்குனராக வேலை பார்த்துள்ள இவர், ‘இனி அவனே’ படத்தின் மூலம் டைரக்டர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

 இவருடைய சர்வீஸுக்கு  எப்போதோ டைரக்டராகியிருக்க வேண்டும். ஏன்னா,  இவருடைய குடும்பம் எம்.ஆர்.ராதா உட்பட ஏராளமான பிரபலங்கள் நடித்த படங்களைத் தயாரித்துள்ளதாம். ஆனால் இவருக்கு தயாரிப்பாளர்கள் மணிகண்டன், நசீர் அகமது அந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

‘ஒரு காதல் செய்வீர்’ உள்ளிட்ட  படங்களில் நடித்த சந்தோஷ் இதன் நாயகன். இன்னொரு நாயகனாக சசி நடித்திருக்கிறார். நாயகிகளாக ஆஷ் லீலா, ரூபி நடித்திருக்கிறார்கள். முக்கியமான வேடத்தில் ‘வஜ்ரம்’ பவானி ரெட்டி நடித்திருக்கிறார்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொள்ள காதலர்கள் முடிவு செய்கிறார்கள். அந்த சமயத்தில் காதலர்களுக்கு உதவி செய்வதாக சொல்லும் ஒரு பெண் உதவி செய்வது போல் நடித்து காதலர்களை ஒன்று சேரவிடாமல் தடுக்கிறார்.

அது ஏன்? என்பதை கமர்சியலாக சொல்லியிருக்கிறார்களாம். ‘‘எனக்கு இது முதல் படம் என்று சொல்லிவிட முடியாது. சினிமாவில் நீண்ட அனுபவம் உண்டு. அந்த அனுபவத்தை முதலீடாக வைத்துதான் இந்தப் படத்தை இயக்கி யிருக்கிறேன்” என்கிறார் சம்பத்ராஜ்.

-ரா