கவிபாடி வரும்ரவி!



ராஜேஷ் வைத்யா இசையில் ‘கனவுகள்’ ஆல்பத்தில் ஆறு பாடல்களை எழுதினார் ரவிஷங்கர். அதைக்கேட்ட நண்பர்கள், சினிமாவுக்குப் பாட்டெழுதும்படி உசுப்பிவிட்டார்கள். அலைந்து திரிந்து வாய்ப்பு தேடியதில்‘ ‘அன்புள்ள துரோகி’ படத்தில் ‘சேட்டை சேட்டைதான்..’ பாடல் கிடைத்தது. தொடர்ந்து மாஸ்டர் மகேந்திரன் நடித்த ‘என்றும் ஆனந்தம்’ படத்தில் கண்மணிராஜா இசையில் ‘மின்னல் பூவாய் மின்னல் பூவாய்..

’ பாடல் வந்தது. ‘அன்னம்’, ‘கிழக்கு சந்து’, ‘ஏழாம் பிறவி’ என படங்கள் தொடர்கின்றன. ‘கண்ணெதிரே தோன்றினாள்’ ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘நட்பதிகாரம்-79’ படத்தில் எழுதியுள்ள ‘பெண்ணே நீ..’ பாடலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் இந்த எம்.பி.ஏ பட்டதாரி.

கூட்டுறவு கிராபிக்ஸ்!


கிராபிக்ஸ் துறையில் ஒன்றாகப் பணியாற்றிய ஐந்து நண்பர்கள் இணைந்து ‘ரியல் கிராபிக்ஸ்’ நிறுவனத்தைத் துவங்கி, பங்குதாரர்களாக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள். ராகவேந்திரா, சரவணகுமார், சரவணன், மோகன், வி.கே.சரவணன் என்கிற இந்த ஐந்து நண்பர்களும் கிராபிக்ஸ் நுணுக்கத்தின் நுட்பம் தெரிந்தவர்கள். என்.எஃப்.டி.சி உள்ளிட்ட பல்வேறு திரைப்பட நிறுவனங்களுக்கு பாடம் நடத்திய தகுதி இவர்களுக்கு உண்டு.

சினிமா சம்பந்தப்பட்ட கிராபிக்ஸ் பணி மட்டுமல்லாமல், அதற்கான பயிற்சி கொடுப்பதற்கும் தயாராக இருக்கிறது இந்த நிறுவனம். வடபழனி குமரன் காலனியில் கிளை தொடங்கிய சில நாட்களுக்குள் முன்னணி பட நிறுவனங்களிலிருந்து ஆர்டர் பெற்றிருப்பது இந்த ‘கூட்டுறவு கிராபிக்ஸ்’க்கு கிடைத்த வெற்றி.