கைதட்ட வைக்கிற நட்பு!



'கண்ணெதிரே தோன்றினாள்', 'மஜ்னு', 'சந்தித்தவேளை', 'உற்சாகம்'  படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் படம் 'நட்பதிகாரம் 79'. சில வாரங்களுக்கு முன்பு ஷூட்டிங் பார்க்க அழைத்திருந்தார். அப்போது படப்பிடிப்பு சென்னை அசோக்பில்லர் அருகில் உள்ள ரோட்டில் நடந்து கொண்டிருந்தது.

 அது ஒரு கார் விபத்துக் காட்சி. புதுமுகம் ராஜ்பரத்தும் அவரது காதலியும் பைக்கில் வரும் போது கார் மோதி ராஜ் பரத் தூக்கி எறியப்படுவது போன்ற காட்சி. ராஜ் பரத்துக்கு ரோப் கட்டி யிருந்தார்கள். கார் அருகில் பைக் செல்லும்போது ரோப் மூலமாக ராஜ் பரத்தை தூக்கி வீச வேண்டும். ஆனால் புதுமுகம் ராஜ்பரத் ரொம்பவே பயந்தார்.

இயக்குனர் ரவிச்சந்திரன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, "தம்பி ஒரு நிமிஷம் இருங்க, நான் செய்து காட்டுறேன்" என்று ரோப்பை வாங்கி தன் இடுப்பில் கட்டிக் கொண்டார். பைக்கில் ஏறி காருக்கு நேராக சென் றார். அருகில் சென்றதும் ரோப்பை தூக்கினார்கள். தூக்கும் வரை எல்லாம் சரியாக இருந்தது. தரையில் அவர் லேண்டாகும் நேரத்தில் ஏதோ ஒரு தவறு நடக்க பொத்தென்று தரையில் விழுந்தார்.

தலை முகமெல்லாம் காயம். ஓடி வந்து தண்ணீர் தெளித்தார்கள். மின் விசிறியைக் கொண்டுவந்து வைத்தார்கள். சிறிது நேரம் முதலுதவி செய்யப்பட்டது. படப்பிடிப்பை கேன்சல் செய்து விடலாம் என்று கூறினார்கள். ஆனால் ரவிச்சந்திரன், "பரவாயில்லை. இன்னொரு நாள் பர்மிஷன் வாங்கி ஏற்பாடு பண்றது கஷ்டம். இன்னைக்கே முடிச்சிடலாம்" என்றார்.

இயக்குனரே கீழே விழுந்ததும் ரொம்பவும் நெர்வசாகிப் போன ராஜ்பரத், தைரியத்துடன் நடிக்க டேக் ஓகே ஆனது. அன்று மிகவும் வலியுடன் இருந்ததால் இயக்குனரிடம் பேசாமல் ஷூட்டிங் பார்த்துவிட்டுத் திரும்பினோம். அதன் பிறகு சமீபத்தில் பாண்டிச்சேரி கடற்கரைச் சாலையில் காதல் போர்ஷன்களை எடுக்கும்போது சந்தித்தோம். ஹீரோக்கள் ராஜ்பரத், அம்ஜத்கான், ஹீரோயின்கள் ரேஷ்மி, தேஜஸ்வி ஆகியோர் மாறி மாறி ரொமான்ஸ் பண்ணிக்கொண்டிருக்க, கேமராமேன் ஆர்.பி.குருதேவ் அதனை படமாக்கிக் கொண்டிருந்தார்.

நம்மை வரவேற்ற ரவிச்சந்திரன்... "சாரி, அன்னிக்கு பேச முடியாம போயிடுச்சு" என்றபடியே ஆரம்பித்தார். தலைப்பின் விளக்கம் கேட்டோம். "திருக்குறளில் 79வது அதிகாரம் நட்பதிகாரம். அதுதான் படத்தோட தலைப்பு. நட்பு என்றால் வழக்கமாக சினிமாவில் டேய் மாமா, மச்சான், மச்சின்னு கொஞ்சிக்கிறது, டாஸ்மாக்குல உட்கார்ந்து சலம்புறது மாதிரியான நட்பு இல்லை. இது ஆணுக்கும் ஆணுக்குமான நட்பு, பெண்ணுக்கும் பெண்ணுக்குமான நட்பு. நட்பை இன்னொரு கோணத்துல சொல்ற படம்.

இரண்டு ஹீரோ, இரண்டு ஹீரோயின் - இந்த நால்வரோட நட்புல ஒரு சின்ன கீறல். அது ஏற்படுத்தும் விளைவுகளும், முடிவும்தான் கதை. உலகத்துலேயே உன்னதமான உறவு நட்புதான்னு உயர்த்திப் பிடிக்கிற படம். 'கண்ணெதிரே தோன்றினாள்' பார்த்துட்டு எல்லோரும் அழுதுகிட்டே போனாங்க. 'நட்பதிகாரம்' பார்த்துட்டு கைதட்டிக்கிட்டே போவாங்க. கடுமையான உழைப்பை இதுல போட்டிருக் கிறேன். அன்னிக்கு பார்த்தீங்கல்ல'' (கீழே விழுந்ததை சொல்கிறார்) என்றார்.

தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தும் ஏன் இவ்வளவு இடைவெளி என்றால்... "நான் பணத்துக்காக சினிமாவுக்கு வரவில்லை. தோப்பு தொர வுன்னு இன்னைக்கும் கிராமத்துல நாங்க பண்ணையார் குடும்பம்தான். ஆனா எனக்கு வாய்ப்பு கொடுத்துட்டு என்னோட சுதந்திரத்துல தலையிடுறது எனக்கு பிடிக்கல. இதனாலதான் ஆரம்பிச்ச பல படம் டிராப் ஆச்சு. சொன்ன தேதிக்குள்ள சொன்ன பட்ஜெட்டுக்குள்ள படத்தை முடிப்பேன்.

ஆனா அதுக்கு இடையில தலையிடுவது எனக்கு பிடிக்காது. ஆனால் அப்படி சினிமால இருக்க முடியாதே. அதான் இந்த இடைவெளி. இந்தப் படத்துல எனக்கு முழு சுதந்திரம் இருக்கு. அதற்கான பலனை திரையில் பார்க்கலாம்" என்றார். அவரின் நட்புக்கும், நம்பிக்கைக்கும் கைகுலுக்கி விடைபெற்றோம்.

-மீரான்