இது ஒரு திரில்லர் சுற்றுலா!



“சினிமாவைப் பார்த்துதான் டைரக்ஷன் கற்றுக் கொண்டேன். அந்த வகையில் நான் இயக்கியுள்ள ‘சுற்றுலா’ ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.  இந்த வகை படங்கள் ஹாலிவுட்டில் வந்திருக்கின்றன.  தமிழில் இதுதான் முதல்முறை. இந்தப் படத்தோட கதை எந்தப் படத்தின் தழுவலும் இல்லை என்பதையும் உறுதி யாக சொல்லமுடியும்” - ஆணித்தரமாகப் பேசுகிறார் அறிமுக இயக்குனர் ராஜேஷ் ஆல்பிரட்.


“இது ரொமான்ஸ் திரில்லர் படம்.  மலைப் பகுதியில் சொகுசாக வாழும் இளைஞன் ஒருவனின் இரு வேறு முகங்களை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறேன்.  6 படத்துக்கு தேவையான ஸ்கிரிப்ட் இந்த ஒரே படத்துல இருக்கும். ஒரே நாளில் கதை நடக்கிறது. சுற்றுலா என்றால் என்ன அர்த்தம் என்று ரசிகர்களுக்குத் தெரியும். ஆனால் இந்தப் படத்துக்குப் பிறகு சுற்றுலா என்றால் ரிச்சர்டு என்று நினைவு வரும். மகிழ்ச்சி என்பதைவிட திரில் ஞாபகத்துக்கு வரும்.

ரிச்சர்டு அப்பாவி வேட்டைக்காரராக வர்றார்.  அவர் கொடுத்த ஒத்துழைப்பு அதிகம்.  பிரத்யேக சீதோஷ்ண நிலைக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதுக்காகவே இரண்டு வருடம் காத்திருந்து படமாக்கினோம். எந்த கட்டத்திலும் ரிச்சர்டு முகம் சுளிக்காமல் புன்னகையோடு ஒத்துழைப்பு கொடுத்தார்.

நாயகியாக ஸ்ரீஜி. செகண்ட் ஹீரோயின்களாக ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ சாண்ட்ரா, அங்கிதா நடிக்கிறார்கள். பரணி இசையில் சினேகன், விவேகா, அண்ணாமலை பாடல்கள் எழுதி யிருக்கிறார்கள். ‘சேது’ படம் விக்ரம், பாலாவுக்கு அடையாளமாக இருப்பது போல் ‘சுற்றுலா’ படம் எனக்கும், ரிச்சர்டுக்கும் அடையாளமாக இருக்கும்” என்கிறார் ராஜேஷ் ஆல்பிரட்.

-எஸ்