ஆட்டோ ஓட்டும் வீர மங்கைகள்!



சென்னையில் 700 பெண்கள் இணைந்து ‘வீரப் பெண்கள் முன்னேற்ற தொழிற்சங்கம்’ என்ற பெயரில் ஆட்டோ ஓட்டி வருகிறார்கள். ஒரே தொழிற்சங்கத்தில் இணைந்து சென்னை முழுவதும் சிட்டென பறந்து கொண்டிருக்கிறார்கள் இந்தப் பெண்கள். தொழிற்சங்கமாக கட்டமைத்து, அதில் இன்னமும் பல பெண்களை இணைத்து, அதை வெற்றிகரமாக நடத்தி வரும் மீனாட்சியிடம் பேசிய போது...

‘‘என் சொந்த ஊர் சோழிங்கநல்லூர். திருமணமாகி இல்லத்தரசியாகத்தான் இருந்தேன். ஆனால் எனக்கு ஏதாவது ஒரு வேலையில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அந்த சமயத்தில்தான் சென்னை ஆட்டோ சொசைட்டி மூலமாக ஆட்டோ ஓட்டுவதற்கான பயிற்சி கொடுப்பதாக கேள்விப்பட்டேன். அதனால் அந்தப் பயிற்சியில் சேர்ந்து, ஆட்டோ ஓட்டப் பழகினேன். இதில் ஆட்டோ ஓட்டப் பயிற்சி எடுக்க சுமார் ஆயிரம் பேர் வந்திருந்தார்கள்.

ஆனால் அதிலிருந்து 20 நபர்கள்தான் தேர்வு செய்யப்பட்டார்கள். அதில் நானும் ஒருத்தி. பயிற்சி பெற்ற பிறகு 1996லிருந்து இப்போது வரை ஆட்டோ ஓட்டி வருகிறேன். எனக்கு ஆட்டோ ஓட்டுவதில் 27 வருட அனுபவம் உள்ளது. நான் மட்டுமில்லை என் நெருங்கிய தோழிக்கும் நான் ஆட்டோ ஓட்ட சொல்லிக் கொடுத்தேன். இப்போது நானும் அவளும் சேர்ந்து ஆட்டோ ஓட்டி வருகிறோம்.

மேலும் நாங்க இருவரும் ஆட்டோ ஓட்டுவதைப் பார்த்த பல பெண்கள் எங்களிடம் நீங்கள் எங்கு ஆட்டோ ஓட்டப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்... எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டார்கள். இதன் மூலம் அவர்களும் வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல், இதன் மூலம் வரும் வருமானத்தால் குடும்பத்திற்கு தங்களால் முடிந்த உதவியினை செய்ய முடியும் என்று கேட்டார்கள். 

இவர்களைப் போல் பல பெண்கள் கேட்கவும், ஆர்வம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளித்தால் என்ன என்று எண்ணம் ஏற்பட்டது. அப்படித்தான் நானும் பவானியும்  இணைந்து ‘பாரதியின் கனவு பெண்கள்’ என்ற ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினை துவங்கினோம்’’ என்றவர், சங்கத்தின் கீழ் பல பெண்களுக்கு ஆட்டோ ஓட்டப் பயிற்சியினை அளித்துள்ளார்.

இது குறித்து மேலும் பேசுகையில்... ‘‘பொதுவாக பெண்களுக்கு அவர்களுக்காக வாழ வேண்டும் என்ற எண்ணமே இருக்காது. அவர்களுக்கு எல்லாமே குடும்பம்தான். இந்த உலகத்தில் எல்லோருக்கும் வாழ்வதற்கான அனைத்து உரிமையும் இருக்கு. ஆனால் பெண்கள் மட்டும் ஏன் அத்தனை தியாகங்களை செய்ய வேண்டும். அவையும் கட்டாயத்தின் பேரில்தான் செய்கிறார்கள். இவர்கள் தங்களின் குடும்பத்தைத் தாண்டி எதுவும் யோசிக்க மாட்டார்கள்.

மேலும் தனக்கென ஒரு வாழ்க்கை வேண்டும். அதில் அவர்களுக்கு ஒரு சம்பாத்தியம் அவசியம் என்று சிந்திக்க மாட்டார்கள். ஆனால் தனக்கென ஒரு வாழ்வாதாரம் வேண்டும். எல்லாவற்றுக்கும் கணவரின் கையினை ஏந்தக்கூடாது என்ற சிந்தனையுள்ள பெண்கள் எங்களை அணுகியதால் நாங்க அவர்களுக்கு ஆட்டோ ஓட்டப் பயிற்சியளித்து அவர்களுக்கான ஒரு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தந்து வருகிறோம்.

முதலில் ஆட்டோ ஓட்டப் பயிற்சி அளிப்போம். அவர்கள் நன்கு பயின்ற பிறகு அதற்கான ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆட்டோ வாங்கவும் அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கிறோம்.
நாங்க இந்த சங்கம் ஆரம்பித்த போது, எங்களுடன் ஒன்பது பெண்கள் இணைந்திருந்தார்கள். ஆனால் அந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அந்த சமயத்திலும் கையில் இருக்கும் பணத்தை போட்டு பெண்களுக்கு எங்களால் முடிந்த உதவியினை செய்து கொடுத்தோம்.

அப்போது நாங்க கற்றுக் கொண்டது ஒற்றுமையாக இருந்தால் எல்லா விஷயத்திலும் நம்மால் சாதிக்க முடியும் என்பதுதான். இந்த ஒற்றுமைதான் எங்களின் சங்கத்தை வழிநடத்தவும் உதவி வருகிறது. அதன் பிறகு எங்களின் சங்கத்தின் பெயரை வீரப் பெண்கள் முன்னேற்ற தொழிற்சங்கம் என்று மாற்றி அமைத்தோம். தொழிற்சங்கமாக மாறியதால் எங்களுக்கு அரசு சார்பாக உதவிகளும் கிடைத்தது. அதன் மூலம்  ஆட்டோ வாங்க உதவியாக இருந்தது. தொடர்ந்து பல பெண்கள் ஆட்டோ ஓட்டுவதற்கான பயிற்சியில் முன்வந்தார்கள்.

மேலும் இது முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே ஓட்டக்கூடிய ஆட்டோ என்பதால், அதில் GPS பொருத்தி இருக்கிறோம். அதனால் பெண்கள் செல்லும் இடத்தில் ஏதாவது பிரச்னைகள்
ஏற்பட்டால் அந்த இடத்திற்கு நாங்கள் எல்லோரும் சென்று விடுவோம். இதுவரை எங்களுக்கு எந்தப் பிரச்னைகளும் வந்ததில்லை. 

எங்களைப் பொறுத்தவரை இந்த ஆட்டோ சாதாரண வண்டி கிடையாது. எங்க குடும்பத்தில் ஒரு உறுப்பினராகத்தான் நாங்க அதனை பார்க்கிறோம். தற்போது 700 பெண்கள் தொழிற்சங்கத்தில் இணைந்து ஆட்டோ ஓட்டி வருகிறார்கள். இதில் 70%  பெண்கள் கணவனால் நிராகரிக்கப்பட்ட பெண்கள்.

அவர்களுக்கு இதன் மூலம் வரும் வருமானம், தங்களை மட்டுமில்லாமல் தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் உதவியாக இருந்து வருகிறது. மேலும் பெண்கள் அந்த துறையை தேர்வு செய்ய காரணம், இது அலுவலக வேலை போல் காலை முதல் மாலை வரை ஓட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல பெண்கள் பள்ளி மாணவர்களின் சவாரிகளை எடுத்து செய்கிறார்கள். மற்ற நேரங்களில் ஆட்டோவும் ஓட்டுகிறார்கள்.

சொந்தமாக ஆட்டோ வைத்திருப்பதால் இவர்களுக்கு அதற்கான வாடகை கொடுக்க வேண்டும் என்றில்லை. வரும் வருமானம் முழுக்க அவர்களே பார்த்துக் கொள்வதால், அதுவே அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. தற்போது 700 உறுப்பினர்கள் உள்ளனர். இதை 5000 ஆக அதிகரிக்கும் எண்ணம் உள்ளது. அதுதான் எங்களின் ஆசையும்’’ என்கிறார் மீனாட்சி.

மா.வினோத்குமார்