கைவினைத் தொழிலுக்கு போட்டி கிடையாது!



‘‘எனக்கு தெரிந்தவற்றை மற்ற பெண்களுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களையும் தொழில் முனைவோர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்’’ என்கிறார் சுபாஷினி. திருச்சியை சேர்ந்த இவர் சொந்தமாக ‘ழ’ என்ற பெயரில் ஆரி எம்பிராய்டிங், கைவினைப்பொருட்கள் மற்றும் நகைகள் அமைக்க தேவையான பொருட்களை விற்பனை செய்து வருகிறார். 
இதனை விற்பனை மட்டுமில்லாமல், அதனை தயாரிக்கும் முறை, அதில் உள்ள நுணுக்கங்கள் மற்றும் வேலைப்பாடுகள் என அனைத்தும் குறித்து மற்றப் பெண்களுக்கு இலவசமாக சொல்லிக் கொடுத்து வருகிறார். வகுப்புகள் மற்றும் கைவினைப் பொருட்கள் குறித்தும் அவரிடம் பேசிய போது...

‘‘நான் முதுகலை பட்டதாரி. என் அம்மா தையல் நிபுணர். அவங்க தைக்கும் போது நானும் அவங்களுக்கு உதவியா சின்னச் சின்ன வேலைகளை செய்து தருவேன். அவர்கள்தான் தையல் கலை பொறுத்தவரை என்னுடைய குரு. 
அவங்களிடம்தான் நான் துணிகளில் செய்யக்கூடிய வேலைப்பாடுகளை கற்றுக் கொண்டேன். எந்தெந்த வண்ணங்களை இணைத்தால் அழகாக இருக்கும் என்பது வரை கற்றுக்கொண்டேன். படித்து முடித்தவுடன் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.

அதன் பிறகு திருமணம் என்று வாழ்க்ைக நகர ஆரம்பித்தது. என்னதான் நான் வேலைக்கு  சென்றாலும், சொந்தமாக ஏதாவது ஒரு தொழில் தொடங்க வேண்டும்  என்ற ஆர்வம் மட்டும் எனக் குள் இருந்து கொண்டே இருந்தது. அதனால் வீட்டில் இருந்தபடியே ஏதாவது கற்றுக்கொள்ள முடிவு செய்தேன். 

சமூக வலைத்தளங்களில் ஆன்லைன் முறையில் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் குறித்து ஒவ்வொன்றாக கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். அதில் ஆரி எம்பிராய்டிங், பட்டு நூலில் செய்யக்கூடிய வளையல்கள், நகைகள், தலைக்கு போடப்படும் பேண்டுகள், லிப்பின் ஆர்ட், தேங்காய் ஓடுகளில் செய்யக்கூடிய கைவினை பொருட்கள், சுவரில் மாட்டும் சித்திரங்கள், பேப்ரிக் பெயின்டிங் என அனைத்தும் செய்ய ஆரம்பித்தேன்.

மேலும் தமிழ், ஆங்கிலம் அல்லாது வேறு ஒரு மொழி தெரியவேண்டும் என்பதற்காக ஹிந்தியும் கற்றுக் கொண்டேன். இப்போது ஹிந்தி நான் மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து வருகிறேன். 

இவையெல்லாமே செல்ஃப் டாட்ன்னுதான் சொல்லணும். அதாவது, ஒவ்வொன்றையும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தேடி தேடிப் பார்த்து கண்டுபிடித்து கற்பேன். கற்றுக்கொண்டதை நாம் செயல்படுத்த பார்க்க வேண்டும் என்பதற்காக வீட்டில் அதை செய்தும் பார்ப்பேன்’’ என்றவர் அதனை மற்ற பெண்களுக்கு இலவச பயிற்சி அளிப்பது குறித்து விவரித்தார்.

‘‘நாங்க  ரொம்ப சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவங்க. பொருளாதார பின்புலம் எல்லாம் கிடையாது. அதனால் தான் நானாகவே ஒவ்வொன்றையும் இணையம் மூலமாக பயின்றேன். அதன் பிறகு அதனை விற்பனை செய்ய துவங்கினேன். 

இவை அனைத்தும் இயற்கையில் கிடைக்கக் கூடிய  பொருட்களைக் கொண்டு செய்யப்படும் கலைப் பொருட்கள். தேங்காய் ஓலை கூடை மற்றும்  கைவினை பொருட்கள் அனைத்தும் வீட்டிலிருந்தபடியே செய்து வந்தேன். நேரம் இருக்கிறது என்று பொருட்களை செய்தால் மட்டும் போதாது. அதனை விற்பனையும் செய்ய வேண்டும்.

அதனால் அரசு மற்றும் தனியார் மையங்கள் நடத்தும் கைவினை பொருட்கள் கண்காட்சியில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். நான் தயாரித்த அனைத்து கைவினைப் பொருட்
களையும் விற்பனைக்கு வைத்தேன். அதில் வாங்கியவர்கள் மூலம் சில தொடர்புகள் கிடைத்தது. 

அதன் வழியாக என் தயாரிப்புகளை விற்பனை செய்ய துவங்கினேன். கைவினைப் பொருட்கள் ஒரு பக்கம் விற்பனை செய்து வந்தாலும் எனக்கு இதன் மூலம் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்குள் தோன்றியது. அதற்கு காரணம் என் அம்மா. அவங்க சமூக ஆர்வலர். அவங்களும் உன்னால் முடிந்ததை சமூகத்திற்கு திருப்பி செய்னு அடிக்கடி சொல்வாங்க. அதன் அடிப்படையில் துவங்கப்பட்டதுதான் பெண்களுக்கான இலவச பயிற்சி.

பெண்களுக்கு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் வெளியே சென்று வேலை பார்க்க முடியாத நிலையில் இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு இந்த வேலைகளை சொல்லிக் கொடுத்தால் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க வழிவகுத்து தர முடியும் என்று தோன்றியது. 

நான் கற்றுக் கொண்டதை இவர்களுக்கு இலவசமாக சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன்.
முதலில் ஒரு நாள் வகுப்பாகத்தான் ஆரம்பித்தேன். பல பெண்கள் இதில் பயிற்சி எடுக்க முன் வந்தார்கள். அதன் மூலம் பல இடங்களுக்கு சென்று பயிற்சி அளித்தேன்.

கைவினைப் பொருட்கள் ஒவ்வொன்றும் தனி நபருக்கு ஏற்ப நுணுக்கமாக செய்ய வேண்டும். ஒருவருக்கு செய்ததைப் போல் மற்றவருக்கு செய்ய முடியாது. செய்யவும் மாட்டார்கள். அதனால் இந்தத் தொழிலில் போட்டி என்பதே கிடையாது. நாம் செய்யும் பொருட்களின் நேர்த்தியும், தரமும், கிரியேட்டிவிட்டியும்தான் வாடிக்கையாளர்களை நம்மை நாடி வரவழைக்கும். நான் சுயமாக கற்றுக்கொண்டு தான் இந்தத் தொழிலுக்கு வந்தேன். என்னிடம் பயிற்சி பெறுபவர்களும் என்னைப் போல் சிறு தொழிலதிபராக  வரவேண்டும் என்பதுதான் என் ஆசை’’ என்கிறார் சுபாஷினி.

மா.வினோத்குமார்