ஃபேஷனில் ஆர்வம் காட்டும் லக்னோ கேர்ள்ஸ்!



நேர்த்தியாக  வடிவமைக்கப்பட்ட ஃபேஷனபிள் ஆடைகள், பொருத்தமான நகைகள், கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு மிடுக்காக வலம் வந்து மினி மாடல்
களாக ஜொலிக்கின்றனர் உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ நகரத்தில் பின்தங்கிய பகுதியில் வசிக்கும் சிறுமிகள். ஃபேஷன் துறையில் ஆர்வம் காட்டும் இந்தச் சிறுமிகள் டிசைனிங், ஷூட்டிங், மாடலிங் என அனைத்திலும் அசத்துகின்றனர். ஜான்வி கபூர், சோனம் கபூர், தீபிகா படுகோன், அதிதி ராவ், மாதுரி தீட்சித் போன்ற பாலிவுட் செலிப்ரிட்டீஸ்களின் ஆடைகளை பிரத்யேகமாக ரீக்ரியேட் செய்து இணையத்தில் வைரலாக வலம் வருகிறார்கள்.

இவர்கள் வசிக்கும் இடத்தினைப் பார்த்தால் நம்முடைய மனதில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஏழ்மை, வறுமை, சூழலியல் சிக்கல் போன்றவைதான் பிளாஷாகும். ஆனால் இணையத்தில் இவர்கள் வெளியிடும் ஃபேஷன் வீடியோக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இவர்களின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் இனோவேஷன் ஃபார் சேஞ்ச் (INNOVATION FOR CHANGE) என்ற தொண்டு அமைப்பு.
 இந்த நிறுவனம்தான் சிறுமிகளின் கனவுகளை நிஜமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த அமைப்பின் நிறுவனரான ஹர்ஷித், தன் நண்பர் விஷாலுடன் இணைந்து பின்தங்கிய குடும்பத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். அது குறித்து விளக்கமளிக்கிறார் ஹர்ஷித்.

“என்னுடைய அமைப்பின் முக்கிய நோக்கமே பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட ஏதாவது உதவி செய்ய வேண்டும். முதலில் இங்குள்ள சிறுமிகளுக்கு தையல் பயிற்சிகளை அளித்தோம். அதில் அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட எங்களின் பயிற்சிகளை தாண்டி இணையம் வாயிலாகவும் இதுகுறித்து லேட்டஸ்ட் டிரெண்டுகளை தெரிந்து கொண்டனர். அதன் பிறகு அவர்களே பாரம்பரிய மற்றும் புதுவித ஃபேஷன் ஆடைகளை வடிவமைத்தனர். அவர்கள் வடிவமைத்த ஆடைகளை நாங்க இணையத்தில் பதிவேற்றம் செய்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அது சிறுமிகளை மேலும் உற்சாகமடைய செய்தது. அதனால் ஃபேஷனில் தங்களின் திறமையை மேலும் வெளிப்படுத்தத் தொடங்கினர். பாலிவுட் கதாநாயகிகள் விழாக்களுக்கு அணிந்து வரும் உடைகளை இவர்கள் ரீகிரியேட் செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் அதை வடிவமைப்பதை நாங்க வீடியோவாக எடுத்து அதையும் இணையத்தில் வெளியிட்டோம். அதுவும் அதிக கவனம் பெற்றது. குறிப்பாக பிரபல இந்திய ஃபேஷன் டிசைனரான சப்யாசாச்சி முகர்ஜி தனது இன்ஸ்டா பக்கத்தில் சிறுமிகளின் ஃபேஷன் வீடியோக்களை பகிர்ந்தது அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது. இவர்கள் ஃபேஷன் ஆடைகளை வடிவமைப்பது மட்டுமில்லாமல் அதற்கான மாடலாகவும் மாறினார்கள்.

நேர்த்தியாக ஆடைகளை அணிவது, சிகை அலங்காரம், மேக்கப் செய்வது போன்றவற்றிலிருந்து மாடலிங் செய்வது அவற்றை படம் பிடிப்பது என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டு அந்த துறை சார்ந்து தங்களின் திறமைகளை வளர்த்து வருகின்றனர். பாலிவுட் கதாநாயகிகளின் உடைகளை பிரபலமான ஃபேஷன் டிசைனர்கள் வடிவமைத்திருப்பார்கள். அவர்களின் நேர்த்தியை முழுமையாக கொடுக்க முடியாது என்றாலும், அதே ஸ்டைலில் வடிவமைக்க முயற்சி செய்கிறார்கள். ஃபேஷன் உடைகள் மட்டுமில்லாமல் பாரம்பரிய திருமண உடைகளும் இவர்கள் டிசைன் செய்கிறார்கள்.

ஒரு உடையினை வடிவமைக்க அதற்கான செலவு அதிகமாக இருக்கும். ஆனால் இவர்களால் இதற்காக செலவு செய்ய முடியாது. அதனால் மற்றவர்கள் நன்கொடையாக கொடுக்கும் உடைகளை கொண்டுதான் இவர்கள் புது டிசைன்களை உருவாக்குகிறார்கள். 

அதாவது, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட உடைகளை இவர்கள் தங்களின் திறமையால் அதனை முழுக்க முழுக்க புது உடையாக டிசைன் செய்கிறார்கள். இவர்களின் திறமையை இணையத்தில் பார்த்து பலர் தங்களின் ஆடைகளை வடிவமைக்க கொடுக்க முன் வருகிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் திருமண உடைக்கான ஆர்டர்களையும் இந்த சிறுமிகளிடம் வடிவமைக்க கொடுக்கிறார்கள்” என்றவர், இங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பினையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

“நாங்க இந்த அமைப்பினை ஆரம்பித்த போது முதலில் இங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி வழங்க வேண்டும் என்றுதான் நினைத்தோம். அதற்கான முயற்சியும் எடுத்தோம். மேலும் கல்வி சார்ந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தோம். அவ்வாறு துவங்கிய எங்களின் பணி தற்போது, இவர்களுக்கான ஒரு பள்ளியினை அமைத்து தரும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இவர்கள் மட்டுமில்லாமல் ஆதரவற்ற குழந்தைகளையும் மீட்டு அவர்களுக்கும் படிப்பறிவினை புகட்டினோம்.

எங்க அமைப்பால் இரண்டு வயதில் மீட்கப்பட்ட ஒரு சிறுவன் இப்போது 11ம் வகுப்பு படித்துக் கொண்டே புகைப்பட கலைஞராகவும் வலம் வருகிறார். எங்க சிறுமிகளின் ஃபேஷன் புகைப்பட கலைஞரும் அவர்தான். 

புகைப்படம் மட்டுமில்லாமல், வீடியோக்கள் மற்றும் அதனை இணையத்தில் எடிட் செய்து வெளியிடுவது என அனைத்தும் அவர் பார்த்துக் கொள்கிறார். இங்குள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கிறது. அவற்றை நாங்க கண்டறிந்து, செயல்படுத்தி வருகிறோம்” என்றவரை தொடர்ந்தார் அமைப்பின் மனநல
ஆலோசகரான ப்ரீத்தி.

“இந்தக் குழந்தைகள் எல்லாம் திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கடந்த இரண்டு வருடங்களாகத் தான் இவர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு குழந்தையிடமும் உள்ள அறிவையும் திறன்களையும் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும். இவர்கள் பொருளாதார ரீதியாகவும் கல்வியறிவிலும் பின்தங்கியவர்களாக இருப்பார்கள். அந்த நிலை அடுத்தடுத்த சந்ததியினரையும் தொடரும். ஆனால் இந்த நிலை தொடரவிடாமல் தடுக்கும் முயற்சியைதான் ஹர்ஷித், விஷால் இருவரும் செய்து வருகிறார்கள்.

இவர்கள் சமூகத்தில் அனைத்து விஷயங்களில் இருந்து பின்தங்கிய நிலையில் இருப்பதால், தாழ்வுமனப்பான்மை உணர்வு ஏற்படும். வசதியானவர்களை பார்க்கும் போது அந்த எண்ணம் மேலும் அதிகரிக்கும். அதனால் அவர்களுடன் சரிசமமாக நிற்கவே தயங்குவார்கள். 

இதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், அவர்கள் மிகவும் மனவேதனைக்கு ஆளாவார்கள். அந்த அசௌகரியமான நிலையை போக்க ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். அடுத்து அவர்கள் சந்திப்பது பாலியல் தொல்லைகள். அதை தடுத்து எதிர்கொள்ள ஆலோசனை வழங்குகிறேன். கடந்த இரண்டு வருடங்களில் அவர்களிடம் நல்ல முன்னேற்றத்தை பார்க்க முடிகிறது.

குறிப்பாக சிறுமிகளின் ஃபேஷன் ஆர்வத்தைக் கண்டு வியந்திருக்கிறேன். இத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் செயல்படுகிறார்கள். ஆடை வடிவமைப்பில், தங்களின் அதிகபட்ச முயற்சிகளை கொடுக்கின்றனர். சிறுமிகளைத் தொடர்ந்து சிறுவர்களும் ஃபேஷன் துறையில் ஆர்வத்துடன் கால் பதிக்க முன் வருகிறார்கள். 

ஆடை வடிவமைப்பது மட்டுமில்லாமல் மாடலிங் செய்யும் இவர்கள் ஓவியம், நடனம், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு என பல்வேறு கலைகளில் சிறந்து விளங்குகின்றனர். இவர்களின் திறமைக்கு பின் அவர்கள் வாழ்க்கையில் பிரமிக்க வைக்கும் சோகமும் அடங்கி இருக்கிறது. அதை எல்லாம் முறியடித்து இவர்கள் அனைவரும் ஃபேஷன் துறையில் சாதிப்பார்கள்’’ என்கிறார் ப்ரீத்தி.

ரம்யா ரங்கநாதன்