கற்பித்தல் என்னும் கலை



‘பள்ளிக்கூடம்’ - ‘மாடம்’ இவை இரண்டை மட்டுமே மனதில் கொண்டு, அதையே பிள்ளைகளிடமும் எதிர்பார்த்தல் என்பது நம்மில் பலரின் நோக்கமாக இருக்கிறது. பிள்ளைகளிடம் இதுபற்றி கேட்டால், அவர்கள் வேறு சிலவற்றைத்தான் விரும்புவதாகக் கூறுவார்கள். பாடம் படித்தால் மட்டும் மாணவன் உயர்ந்துவிட முடியாது. அதனால்தான் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறுவார்கள். சில பிள்ளைகள் நிறைய கைவேலைப்பாடுகள் செய்வதை விரும்புவார்கள்.

சிலருக்கு படம் வரைவது மிகவும் பிடிக்கலாம். சிலர் ஆடல், பாடல்களை விரும்பிக் கற்பர். இளம் வயதிலிருந்தே இவற்றில் ஆர்வம் செலுத்துபவர்கள் பிற்காலத்தில் மிகச்சிறந்த ஓவியர்களாக, கலைநுட்பம் வாய்ந்த சிறந்த சிற்பிகளாக, பாடகராகத் திகழ வாய்ப்பிருக்கலாம். கட்டட வல்லுநர்களாக தன்னை அமைத்துக்கொள்பவர்களும் உண்டு.

‘‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’’ என்பதற்கேற்றவாறு, ஒருவன் படிப்பில் கவனம் முழுவதும் செல்லவில்லையென்றால், ‘நீ மக்கு படிக்க மாட்டாய்! உனக்குப் படிப்பு வராது!’ என்று சொல்வதெல்லாம் தப்பு. அதற்குப் பதிலாக, அவன் விருப்பம் எதை நாடிச்செல்கிறது என்பதை நாம் சரியாக ஆராய்ந்து, அத்தகைய வழியை அவன் தேர்ந்தெடுக்க உதவுவது என்பது நம் தலையாய கடமை. கண்டிப்பாக இது ஆசிரியர் மற்றும் பெற்றோரால் சாத்தியமாகும். சில பிள்ளைகள் விளையாட்டு வகுப்புகள் கிடைக்கவில்லையென்றால் பள்ளிக்குப் போகவே விரும்ப மாட்டார்கள்.

வாரத்திற்கு கிடைக்கும் இரண்டு விளையாட்டு வகுப்புகளை தவறவிட விரும்ப மாட்டார்கள். உடல்நலம் சரியில்லாமல் பள்ளிக்கு விடுப்பு எடுத்திருக்கும் சில மாணவர்கள்கூட, அன்றைய தினம் விளையாட்டு இருக்கிறதென்றால், அவசியம் வந்துவிடுவார்கள். எத்தனைக்கெத்தனை படிப்பு முக்கியமோ அந்த அளவிற்கு விளையாட்டும், உடற்பயிற்சியும் அவசியம் தேவைப்படுகிறது. பிள்ளைகளிடம், ஒரு மணி நேரம் நன்கு படி, இரண்டு மணி நேரம் விளையாடத் தருகிறேன் என்று கூறிப்பாருங்கள், அவசியம் செய்வார்கள்.

‘முதலில் நன்கு விளையாடிவிட்டு வந்து பாடங்களை முடி’ என்று கூறினாலும் போதும். இரண்டையும் திறம்படச் செய்வார்கள். அவர்கள் மனதை புரிந்துகொள்ளாமல், சும்மா படி, படி என்று கூறும்பொழுது வெறுப்பு மேலிடும். படிப்பில் உண்மையிலேயே கவனம் செல்லாது. அந்தந்த வயதிற்கேற்ற மனநிலையும், பக்குவமும் தானே வந்து சேரும். உதாரணத்திற்கு, நம் விதியின் நாதஸ்வரம் ‘உலக சாதனை’ செய்யவில்லையா? அவன் ‘சாதனை’ விருப்பப்படி இருந்தாலும், படிக்கவும் செய்கிறானே!

அதிகம் விளையாட்டில் கவனம் செலுத்தி வந்த ஒரு பையனை யாரோ திட்டியிருக்கிறார்கள். ‘ஜில்லா’க் களுக்கிடையேயான போட்டிகள், நகரங்களுக்
கிடையேயான போட்டிகள் என அனைத்திலும் பங்கு பெற்று, வெற்றியும் பெற்றிருந்தான். அடிக்கடி வகுப்புகள் தவற விட்டதால், குறிப்பிட்ட பாடத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறான். ஆனால் அவனுக்குள் ஒரு தன்னம்பிக்கை இருந்துகொண்டுதான் இருந்தது.

இறுதித்தேர்வு வரும்முன், அவன் அம்மா வீட்டில் விசேஷ வகுப்பு ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறியிருந்தார். அதனால், இறுதித் தேர்வுக்கு முன் போட்டிகளை முடித்துக்கொள்ளலாம் என்றுதான் நினைத்தான். பொதுவாகவே, பத்தாம்-பன்னிரெண்டாம் வகுப்பு பிள்ளைகள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டு மென்பதற்காக, குறிப்பிட்ட சமயங்களில், தங்களை மற்றைய போட்டிகளிலிருந்து விலக்கிக் கொள்வர்.

அதற்குள்ளே, மேலே சொன்ன பையன் பாதிப்புக்குள்ளானான். அவனை யாரோ மட்டம் தட்டி பேசியிருந்தார்கள் போலும்! மனதில் நினைத்து மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டிருந்ததால், உடல்நலம் பாதித்தது. பெற்றோர்கள் கவலையடைந்து, வீட்டில் விசேஷமாக வகுப்புகள் நடத்தி அவனை தேர்வு எழுத வைத்தனர்.

தொண்ணூற்றைந்து சராசரி மதிப்பெண் பெற்று, உயர்ந்த கல்லூரியில் சேர்ந்தான். அன்று எந்த விளையாட்டால், திட்டு வாங்கி பாதிக்கப்பட்டானோ, அதே விளையாட்டுக்கு ஒரு தலைமைப் பொறுப்பையும் பெற்றான். எனவே ஆர்வம் உள்ளவற்றில், வளர வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதுடன், வாழ்க்கைக்குத் தேவையானவற்றை எடுத்துரைத்துத் திருத்த முயற்சி செய்யலாமே தவிர, மனதை பாதிக்கும் அளவிற்கு, துன்பம் தரும் வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

இது ஒரு உதாரணத்திற்குத்தானே தவிர, இதுபோன்று எத்தனையோ சம்பவங்கள் சாதாரணமாய் நடக்கின்றன. ஒரு மளிகைக்கடை சொந்தக்காரர் தன் மகனை, பின்னால் நீயும் இதே வியாபாரத்தைத்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எப்பொழுதும் சொல்லிக்கொண்டே வந்தால், அவன் மனம் அதிலேயே லயித்திருக்கும். அவன் மனதில் ஆயிரம் கனவுகள் சிறகடித்து பறந்துகொண்டிருக்கும்.

ஒருநாள் அவன் மனம் இப்படியும் நினைக்க ஆரம்பித்துவிடும். ‘‘நான் என்ன படித்து சாதிக்கப்போகிறேன்! கடைசியில் கடையைத்தானே பார்க்கப்போகிறேன்! ஓரளவு தெரிந்துகொண்டால் போதும்!’’ எனவே நம் கருத்தையும், நம் நோக்கத்தையும், நம் விருப்பத்தையும் திணிக்காமல், பிள்ளைகள் மனம் எதை நாடுகிறது என்பதை கண்டுபிடிப்பதுதான், நமது கடமையாகக் கொள்ளலாம்.

இதுபோன்ற சிலரை நாங்கள் கண்டிருக்கிறோம். ஏனெனில், எந்தச்சூழலிலிருந்து வரும் பிள்ளைகளாகயிருப்பினும், தங்களை ஐ.ஐ.டி. லெவலில் படிக்குமளவுக்கு தயார் செய்துகொள்கிறார்கள். நிறைய படித்த தொழில்நுட்பப் பட்டதாரிகள் எத்தனையோ பேர், விவசாயம் பக்கம் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அதுதான் அவர்களின் சொந்த விருப்பமாகிறது.

படிப்பு ஒரு துறையாக இருக்கும். வேலையில் ஆர்வம் வேறு துறையைச் சார்ந்திருக்கும். எப்படியிருந்தாலும், மனம் விரும்பி செய்யும் துறையில் நம்மால் அவசியம் சாதிக்க முடியும். அதனால்தான், மேலைநாடுகளில் அவரவர் விருப்பத்திற்குத் துறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். விருப்பத்திற்கு மாறான எதுவுமே ‘டென்ஷன்’ தரக்கூடியதாகச் சொல்கிறார்கள். பிடித்ததை செய்வோம், தேவைக்கு சம்பாதிப்போம், வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிப்போம் போன்றவை அவர்களுக்கான மனதிருப்தியைத் தரும் என்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த பையன் ஒருவன் வகுப்பறையில் அமர்ந்துகொண்டு, வானவியல் ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பான். எல்லோரும் பாடத்தில் கவனம் செலுத்த அவன் மனம் வேறு எதையோ நாடிச்செல்லும். ஜன்னல் வழியே தெரியும் செடி, கொடி, மரங்களை ரசித்துப் பார்த்துக்கொண்டிருப்பான். எதையோ பார்த்து, சிறிதாகக் கிறுக்குவான். உன்னிப்பாகப் பார்த்தால், அதில் அழகான உருவம் தென்படும். அவன் செயல்கள் மட்டும் வினோதமல்ல. அவன் முகமும் ‘தேஜஸ்’ நிறைந்தது.

அழகழகான  சுருள்முடி. குண்டு குண்டான கண்கள். அழகான ரவுண்டு மூஞ்சி. எப்பொழுதும் சிரித்த முகம். எந்தப் பரீட்சையில் என்ன மதிப்பெண்கள் பெற்றாலும் அவனுக்குக் கவலைஇல்லை. அவனின் மனதில் அவனுக்கென ஒரு தனி உலகம் இருந்தது. அதில் அவன் ஆனந்தமாக பயணித்துக்கொண்டுதான் இருந்தான். ஒருமுறை அவன் தாய் இதைப்பற்றி பேச ஆரம்பித்தார்.

பிள்ளையைப்பற்றி குறைவாகப் பேச அவர் மனம் ஒப்பவில்லை என்று நினைத்தோம். பெற்ற தாயல்லவா? ‘காக்கைக்கு தன்குஞ்சும் பொன்தானே!’ அவர் வேறு விதமாகப் பேச ஆரம்பித்தார். ‘‘அவன் மனம் இயற்கையை ரசிக்கிறது, நிறைய படம் வரைகிறான், ஏதேதோ, கற்பனையில் வண்ணம் தீட்டுகிறான். வீட்டு வேலைகளில் நிறைய உதவி செய்கிறான்.

எல்லோரிடமும் அன்பாகப் பழகுகிறான், பக்கத்து சிறுவர்களுக்கு விஞ்ஞானப் பாடத்தில் வரும் படங்கள் வரைந்துகொடுக்கிறான்’’ என்பன போன்றவற்றையெல்லாம் நிறைவாகப் பேசி, படிப்பில் சிறிது கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்று கூறி முடித்தார். படிக்கச்சொல்லி அவன் தந்தையும் எடுத்துச் சொல்லி ஓய்ந்துவிட்டதாகக் கூறினார். ‘‘இனி நீயாச்சு, உன் பிளையாயிற்று! என்று சொல்லிவிட்டார் மேடம்!’’ அவனைப் பார்த்தால் திட்டவும் மனம் வரவில்லை என்று கூறி தன் உரையை முடித்தார். அம்மாவுக்கு நாங்கள் பார்த்துக்கொள்வதாக ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தோம்.

மறுநாள் அவனைத் தனியே அழைத்துப் பேசிப்பார்த்தோம். அவனுக்கு புத்தகப் படிப்பில் கவனமில்லை என்பது புரிந்தது. இருப்பினும், பள்ளி இறுதிப்படிப்பு முக்கியம், அதை முடித்தால், வேண்டிய படிப்பை விருப்பப்படி தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்பதை விளக்கி, அதற்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்து தருவதாக அவனை ஊக்குவித்தோம். முக்கிய பாடத்திட்டங்களை, எளிய முறையில் தயாரித்து விளக்கினோம். கதை போன்று கேட்டு, கொஞ்சம் கொஞ்சமாக எழுத ஆரம்பித்தான். ஒரு சில பிள்ளைகள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள்.

என்னவென்றால், புத்தகத்தை வைத்து படிக்க விரும்ப மாட்டார்கள். நாம் பலமுறை விளக்கினால், அதைக்கேட்டு அப்படியே புரிந்து சொல்வார்கள். இதைத்தான் ‘கேள்வி ஞானம்’ என்று கூறுவோம். இந்தப்பையனும் அந்த வரிசையில் இருந்தான். எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளில் பிள்ளைகளுக்கு படிக்கத் தெரியாது.

ஆனால் நூற்றுக்கணக்கில் ‘ரைம்ஸ்’ (Rhyms) சொல்லுவார்கள். சினிமாப் பாட்டைக்கூட அப்படியே பாடுவார்கள். அதுபோன்ற ஒரு ஞானம்தான் சிலருக்கு தொடர்ந்து இருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. வேறு சில பிள்ளைகள் பாடம் நடக்கும்பொழுது, கவனிக்காமல், குறும்பு செய்வதுபோலத் தோன்றும். ஆனால், இடையிடையே கேள்வி கேட்டால், மிகச்சரியாக விடை சொல்வார்கள். அதாவது அவர்கள் மூளை அனைத்தையும் கிரகித்துக்கொண்டுதான் இருக்கிறது.

ஒரு வழியாக அந்தப்பையன் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்வில் வெற்றி பெற்றான். அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. கல்லூரிப் படிப்பாக, சமையல் கலையைத் தேர்ந்தெடுத்தான். மேலும், வீட்டு அலங்காரங்கள் குறித்தெல்லாம் பலவிதமான ‘டிப்ளமா’க்களை தேர்ந்தெடுத்து அவற்றில் பிரகாசித்தான். அது மட்டுமா? அவன் கற்பனையில் தூக்கி எறியப்படும் பொருட்களிலெல்லாம், கலையம்சத்தைப் புகுத்தினான். தகர டப்பாவையெல்லாம், வண்ண ஓவியங்களாக்கி, கண்காட்சிப் பொருட்களாக்கினான்.

அவன் ஓவியங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இடம் பிடிக்குமளவுக்கு அவனும்  பிரபலமடைந்தான். புதிய சமையல்களை மணக்க மணக்க சமைத்தான். வருடா வருடம் கலைக்கண்காட்சி நடத்துமளவுக்கு அவன் கற்பனை வளம் மேம்பட்டது. அவன் மனம் இவற்றையெல்லாம் நாடியதால்தான், அவனால் புத்தகத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அவன் விரும்பிய கலைகள் வாழ்க்கைக்கு மிகவும் தேவையானவை. நல்ல உணவும், தூய்மையான இருப்பிடமும் அவசியம் என்பது அவனுக்கு உள்மனதால் உணர்த்தப்பட்டிருக்கும் பாடங்களாகும்.

இதுபோன்று எத்தனை சாதனையாளர்கள் சிறுவயதில் வெவ்வேறு சூழலில் இருந்திருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். இருப்பினும் நம் கண்முன்னே வளரும் பிள்ளைகளின் முன்னேற்றம் நமக்கு எத்தகைய சந்தோஷத்தைத் தருகிறது என்பதை நினைக்கும்பொழுது, பெரும்
பாக்கியமாகவே நினைக்கிறோம்.

சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்