அறிவோம் முழங்கை வலி!



வலிகளில் என்னதான் பல வகைகள் இருந்தாலும் அவற்றில் எப்போதும் நம்மிடையே அதிகம் காணப்படும் முதுகு, கழுத்து மற்றும் கால் மூட்டு

வலிகளையே முதன்மையாக சொல்வோம். நம்மில் பாதி பேருக்கு முழங்கை வலி வந்திருக்கும்.
ஆனால், சாதாரண வலிதானே என்று கவனிக்காமல் விட்டிருப்போம். பின் வலியின் அளவு அதிகரித்தப் பின்பு மருத்துவரை நாடி சிகிச்சைப் பெற்றிருப்போம். அதுபோல் இல்லாமல் முழங்கை வலி ஏன்வருகிறது? அதை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி? அதற்கான சிகிச்சை கள் என்ன? போன்றவற்றை அனைவரும் தெரிந்து கொள்ளவே இந்தக் கட்டுரை.

அதென்ன டென்னிஸ் எல்போ?

உலகெங்கும் டென்னிஸ் விளையாடுவோரில் அதிகம் பேருக்கு வரக்கூடிய வலி என்பதால் இதற்கு ‘tennis elbow’ என்று பெயர் வந்தது. அதனால், டென்னிஸ் வீளையாடுவோருக்கு மட்டும்தான் வரும் என்று நினைக்கவேண்டாம். நம்மில் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டு மானாலும் வரலாம். அதுவும், ஒருவரின் முழங்கையின் வெளிப்புறப் பக்கவாட்டில் வரக்கூடிய வலியினையே tennis elbow என்கிறது மருத்துவம். இதற்கு காரணமாக முழங்கையின் வெளிப்புறப் பக்கவாட்டில் உள்ள தசை மற்றும் தசை நாரின் அழற்சியை சொல்லலாம்.

அழற்சி ஏன் வருகிறது?

நம் முழங்கையின் அதிகப்படியானப் பயன்பாட்டினால் அழற்சியானது ஏற்படும். அதாவது, மீண்டும் மீண்டும் ஒரே அசைவை நம் முழங்கையானது செய்யும் போது அதற்கென இருக்கும் தசைகளில் அழற்சி உருவாகும். உதாரணமாக, நான் மேலே சொன்ன டென்னிஸ் விளையாடுவோர், சமையல்காரர், ஆட்டோ ஓட்டுனர், பிளம்பர் (plumbers), தச்சர், வர்ணம் பூசுபவர் (painters) போன்றோருக்கு இந்த அழற்சியானது வர அதிக  வாய்ப்புள்ளது.

காரணம், அவர்கள் தங்களது முழங்கையை நீட்டி வைத்து, மணிக்கட்டை முன்னும் பின்னும் தொடர்ந்து (அதாவது, நீண்ட நேரம், நீண்ட நாட்களுக்கு)அசைக்கும் மாதிரியான வேலைகளைத் தொடர்ந்து செய்வதால், முழங்கையின் தசைகளில் அழற்சி உருவாகி டென்னிஸ் எல்போ என சொல்லக்கூடிய இந்த வலியானது ஏற்படக் கூடும். அதிலும் குறிப்பாக, 20 முதல் 60 வயது வரையில் உள்ளவர்களுக்கே அதிகமாக வரக்கூடியது.  
அறிவோம் அறிகுறிகள்!

*தொடக்கத்தில் நம் முழங்கையை அசைக்கும் போது லேசான வலியாக ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல வலியின்
அளவானது அதிகமாகும்.
*எந்த ஒரு பொருளையும் கையால் பிடிக்கும்போது ‘இறுகப் பிடித்துக் கொள்ளும் சக்தி’யானது குறைவாக இருக்கும். அதாவது, சிறிய பொருட்களாய் இருந்தாலும் அதனை நீண்ட நேரம் கையில் தாங்கிப் பிடிக்க முடியாமல் முழங்கையில் வலி ஏற்படும்.
*டென்னிஸ் விளையாட்டு வீரர்களுக்கு டென்னிஸ் மட்டையைப் பிடிக்கும்போது போதுமான ‘இறுகப்பற்றும் சக்தி’ இல்லாமல் வலி தோன்றும். அதனால், அவர்களால் தொடர்ந்து விளையாட முடியாமல் போகும்.
*கதவுக் குமிழினை (door knob) திறக்கும் போதும், கை குலுக்கும் போதும், ஈரத் துணியினைப் பிழியும் போதும், சமைக்கும் போதும் வலியானது மேலும் அதிகமாகும்.
*நம் இரு கைகளில் அதிகமாகப் பயன்படுத்தும் கையினை ‘ஆதிக்க கை’ என்போம். அதனால், ஆதிக்க கையில் இவ்வலியானது வருவதற்கான சாத்தியக்
கூறுகள் அதிகம் எனலாம்.

எப்படி கண்டறிவது?

ஒருவரது முழங்கையின் வெளிப்புறப் பக்கவாட்டில் வலி ஏற்பட்டால் உடனே இயன்முறை மருத்துவரை அணுக வேண்டும். நாங்கள் அவர்களது கைகளை நன்கு அசைக்கச் சொல்லி சில சிறப்பு பரிசோதனைகள் செய்து tennis elbow-தான் என்று உறுதிப்படுத்துவோம். இங்கே குறிப்பிட்டு சொல்லவேண்டிய மிக முக்கியமான ஒன்று, 99 சதவிகிதம் x-ray மற்றும் ஸ்கேன்கள் எடுக்க வேண்டிய அவசியம்
இருக்காது என்பதுதான்.

என்ன தீர்வு?

*95 சதவிகிதம் அறுவை சிகிச்சை இல்லாமல் இயன்முறை மருத்துவத்திலேயே மிக எளிதில் இவ்வலியை குணப்படுத்த முடியும்.

*வலி ஏற்பட்ட  கையில் மேலும் எடை தூக்குவது, வலி ஏற்படக் காரணமாய் இருந்த வேலைகளை மீண்டும் செய்வது போன்றவற்றை சிகிச்சை காலம் வரை செய்யாமல் இருக்க வேண்டும். மேலும், சில அறிவுரைகளை இயன்முறை மருத்துவர் வழங்குவர். அவற்றை தொடர்ந்து பின்பற்றுவதால் சரிசெய்துவிடலாம்.

*அலோபதி மருத்துவத்தில் வலி மற்றும் அழற்சி குறைய மருந்து, மாத்திரைகள் பரிந்துரைப்பார்கள். அதை உட்கொள்வதால், பக்கவிளைவுகள் வர அதிக வாய்ப்புள்ளது. அதனால் மருந்து, மாத்திரைகளைத் தவிர்த்து, இயன்முறை மருத்துவ உபகரணங்கள் கொண்டும், பிரத்யேகப் பயிற்சிகள் செய்தும் மிகச் சுலபமாக எந்தவிதப் பக்கவிளைவுகளும் இல்லாமல் முழங்கை வலியைக் குறைக்கலாம்.

மொத்தத்தில் சரியான சிகிச்சை செய்து, தொடர்ந்து இயன்முறை மருத்துவர் பரிந்துரைக்கும் பயிற்சிகளை செய்து வந்தால், 3 முதல் 4 வாரங்
களில் முழங்கை வலியானது முற்றிலும் குணமடைந்துவிடும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியம்.

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்