தடம் மாறும் திருமணங்கள்மகேஸ்வரி நாகராஜன்

உலகமே அசைய மறுத்த இந்த லாக்டவுனில் நிச்சயிக்கப்பட்ட பல திருமணங்கள் தள்ளிப்போயின. சில திருமணங்கள் மட்டுமே குடும்ப உறுப்பினர்களோடு குறித்த தேதிக்குள் நடந்தன. இதில் திருமணங்களை நம்பி தொழில்செய்த ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் பெரும் சரிவை சந்திக்க, அதைச் சார்ந்து இயங்கிய சின்ன சின்ன தொழில்களும் நசிந்தது.  அதிகமாய் பாதித்தது பெண்கள் பெரிதும் விரும்பிச் செல்லும் அழகு நிலையங்கள் எனலாம்.

ஒரு சில தளர்வுகள் அரசால் அறிவிக்கப்பட்டாலும் சில வரையறைக்குள் இயங்க நிர்பந்திக்கப்பட்டன.  ப்யூட்டி பார்லர், வெட்டிங் டிசைனர், வெட்டிங் போட்டோ கிராஃபி தொழில்களின் நிலைஅறிய துறை சார்ந்து இயங்கும் சிலரை அணுகிய போது…

ஹேமலதா, ப்யூட்டீசியன்

வுமன் ப்யூட்டி பார்லர்களையும், மென் சலூன்களை நடத்துபவர்களுக்கும் இது ரொம்பவே கஷ்ட காலம். வருமானத்தை தாண்டி இந்தத் தொழிலில் எனக்கு நிறைய ஆர்வம் உண்டு. பார்லர் போகாமல் ஒரு நாள் கூட நான் இருந்ததில்லை. பார்லருக்கு போகவே முடியாத நிலைக்கு இந்த கொரோனா மொத்தமாக ஆட்டி வைத்துவிட்டது. ஆர்வத்தோடு தொடங்கிய ஒரு தொழில் இப்படி ஆகிவிட்டதே என மன வருத்தத்தில் இருக்கிறேன்.

மூன்று மாதத்தைக் கடந்து சுத்தமாக வருமானம் இல்லை. எங்களின் மிக முக்கிய பிரச்சனையே வாடகைதான். வாடகையை கொடுக்க முடியாத நிலையில், அட்வான்ஸ் பணத்தை சிலர் கழித்து வருகிறார்கள். சிறிய பார்லர் என்றால் ஓரளவு சமாளிக்கலாம். ஏ.சி. வசதியோடு மிகப் பெரிய பார்லர் என்றால் வாடகையே 20 ஆயிரத்தை தொடும். வேலை செய்பவர்களுக்கு ஊதியமும் கொடுக்க வேண்டும். லாக்டவுன் ஆவதற்கு முன்பு வாங்கி வைத்த மேக்கப் சாதனங்களில் பல தேதி முடிவடையும் தருவாயில் இருக்கிறது.

இந்த நிலை இப்படியே மேலும் நீடித்தால் அழகு நிலையங்களை நடத்துவது ரொம்பவே சிரமம். சில கட்டிட உரிமையாளர்கள் வாடகை தர முடியவில்லை என்றால் காலி செய்யுங்கள் என கறாராகச் சொல்லி இருக்கிறார்கள்.

20 முதல் 30 நபர்களை மட்டுமே வைத்து வீட்டுக்குள் செய்யும் திருமணத்திற்கு பெரிதாக அவர்களுக்கு மேக்கப் எதுவும் தேவைப்படவில்லை. லாக்டவுன் தொடங்கிய மார்ச் மாதத்தில் திருமண முகூர்த்தம் நிறைய இருந்தது. ஒரு சில ஆர்டர்களை நாங்களே பயத்தில் கேன்சல் செய்தோம். நோய் தொற்று அதிகரிக்க அதிகரிக்க, நிறைய ஆர்டர்களை அவர்களாகவே கேன்சல் செய்ய ஆரம்பித்தார்கள்.

வீட்டுக்குள் தொடர்ந்து அடைபட்ட சூழலில் பெண்களுக்கு மேக்கப்பின் மீதிருந்த ஆர்வம் குறைந்துவிட்டது.  சென்னை மாதிரியான பெரிய நகரங்களில் கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள்தான் ப்யூட்டி பார்லர்களை அதிகம் பயன்படுத்துவார்கள். பெரும்பாலான நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வேலை செய்வதால் பெண்கள் ப்யூட்டி பார்லர் பற்றி பெரிதாக யோசிப்பதில்லை. ஹோம் சர்வீஸ் கேட்டு ஒரு சில கால்கள் மட்டும் வந்தது.

 நோய் தொற்று அதிகமான நிலையில் பார்லரை பயன்படுத்தவே பெண்கள் பயப்பட ஆரம்பித்துள்ளார்கள்.
மெடிக்கலும், பார்லரும் மக்களோடு க்ளோஸ் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் துறைகள். கிட்டே நெருங்வது, தொட்டு செய்வது என ரிஸ்கியான வேலைதான். சில வரையறைகளுடன் பார்லர்களை நடத்த அரசு அனுமதித்தாலும்,  நாங்கள் பயத்துடனே பார்லர்களை ஓப்பன் செய்கிறோம். வாடிக்கையாளர்களை நெருங்கவே எங்களுக்கும் பயமாகத்தான் இருக்கிறது.

ஐ ப்ரோ, ஃபேசியல், ஹேர் கட், பெடிக் க்யூர், மெனிக் க்யூர் என அனைத்தும் கஸ்டமரைத் தொட்டு, நேரமெடுத்து செய்ய வேண்டும். த்ரெட்டிங், பேசியல் போன்றவற்றிற்கு மாஸ்க் அணிய முடியாது. க்ளவுஸ் கைகளில் அணிந்தாலும் மசாஜ் போன்றவற்றுக்கு முகத்தில் விரல்களால் அழுத்தம் கொடுப்பதன் மூலமே அந்த சேவையை வழங்க முடியும். எனவே அதற்கும் சாத்தியமில்லை.

இதில் ஒரு கஸ்டமர் பார்லர் வந்து சென்றாலும் மொத்த பார்லரையும் க்ளீன் செய்ய வேண்டியுள்ளது. மேக்கப்பிற்குத் தேவையான ஹெட் பேன்ட்களையும் யூஸ் அன்ட் த்ரோவாக பயன்படுத்த வேண்டியது இருக்கிறது. தெர்மல் செக், டவல் ஸ்டெர்லைஷர், இன்ஸ்ட்ரூமென்ட் ஸ்டெர்லைஷனர், ஹேண்ட் சானிடைசர் என எல்லாவற்றையும் வாங்கி செயல்பட பார்லர்களில் இப்போது வருமானமே இல்லை.  வேறு வழியின்றி வருமானத்திற்காக இயங்கினாலும் எல்லோர் மனதிலும் பயம் இருக்கிறது.

நோய் தொற்றால் சமூக இடைவெளி தேவைப்படுவதால் ஒரு கஸ்டமருக்கு மேல் பார்லரில் இருக்க வைப்பதே கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கிறது. இப்படியே இந்த ஆண்டு முழுவதும் தொடர்ந்தால் நம் தொழில் என்னாகும் என்ற கலக்கமும் வருகிறது.

ஜெயகுமார், வெட்டிங் போட்டோகிராஃபர்

வெட்டிங் போட்டோ கிராஃபினாலே மாஸ் கேதரிங் இருக்கனும். கூட்டத்தில் நடக்கும் சின்ன சின்ன விசயங்களே திருமண நினைவுகள். எவ்வளவு கூட்டம் வருதோ அதைப் பொருத்து க்ரியேட்டிவிட்டியும், புகைப்படங்களும் அதிகமாகும். நோய் தொற்று, சோஷியல் டிஸ்டன்சிங் போன்ற காரணங்களால் பல திருமணங்கள் கோயில், வீடு, வீட்டு மாடி என சுருக்கமாக நடக்கத் தொடங்கிவிட்டன. திருமணங்களில் கூட்டமில்லை. போட்டோகிராஃபிக்கும் அவ்வளவாக வேலையும் இல்லை. இது ஒரு டஃப்பான நேரமே. மீண்டுவர ஓராண்டு ஆகலாம் என்கிறார்கள்.

முக்கியமான விசயம் எங்களைப் போன்ற போட்டோ கிராஃபர் அமைப்புசாரா நல வாரியத்திலும் இணைக்கப்படவில்லை. எனவே எங்களுக்கு பாதிப்பு அதிகமாகவே உள்ளது. பலரும் கேமராவுக்குதான் அதிகமாக இன்வெஸ்ட் செய்துள்ளோம். சென்னை போன்ற பெரு நகரங்களில் டோட்டல் லாக் டவுன்  இருப்பதால் எனக்கு தெரிந்து நிறைய நண்பர்கள் லோனுக்கு வாங்கிய கேமராவை விற்கும் மூடிற்கு வந்து விட்டார்கள்.

சாய்மா, காஸ்டியூம் டிசைனர்

நான் கஸ்டமைஸ்ட் டிசைனர். 8 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறேன். எனக்கு வெளிநாடுகளிலும் ரெகுலர் கஸ்டமர்கள் உண்டு. ப்ரைடல் டிசைனர் என்றாலும், பேஸிக் வேரிங் உடையில் தொடங்கி, விளம்பரங்கள், வெப் சீரிஸ் உடைகள், ஸ்போர்ட்ஸ் உடைகள், டே டூ டே லைஃப் வரை டிசைன் செய்வேன். கட்டிங் மாஸ்டர், டெய்லரிங் யூனிட், பினிஸிங் வொர்க்கர்ஸ் என டீம் வேலை இது.

மார்ச் மாதம் வந்த ஆர்டர்கள் அத்தனையும் கேன்சல். நோய் பரவலால் பல திருமணங்கள் நின்றது. சில திருமணங்கள் சுருக்கமாக நடத்தப்பட்டது. உலகம் தழுவிய பிரச்சனை என்பதால் வெளிநாடுகளில் இருந்து வரும் ஆர்டர்களும் அப்படியே நின்றன.

கடை வாடகை, வேலை ஆட்களின் சம்பளம், கரண்ட் பில் என இந்த நான்கு மாதத்தையும் எங்களால் சமாளிக்கவே மூச்சு முட்டியது. முடிவாக கடையை மூடிவிட்டு,  ஒரு மெஷினோடு வீட்டில் இருந்து கிடைக்கும் சில ஆர்டர்களை வைத்து நான் மட்டும் வேலை செய்கிறேன்.  எவ்வளவு நாட்கள் இந்த நிலை இப்படியே நீடிக்கும் என்பதை கணிக்க முடியவில்லை.

ஃபாத்திமா மூவா, ப்ரீலான்ஸ் மேக்கப் ஆர்டிஸ்ட்

வேலை எதுவும் இல்லாமல் சும்மாவேதான் இருக்கிறோம். பெண்கள் மேக்கப், காஸ்டியூம் போன்றவைகளுக்கு செலவு செய்வது வெகுவாகக் குறைந்துள்ளது. 20 நபர்கள் கலந்து கொள்ளும் திருமணத்திற்கு எதற்கு ஆடம்பரமான உடை, அலங்காரம் என யோசிக்கும் நிலைக்கு பெண்கள் வந்திருக்கிறார்கள்.  

மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் திருமணத் தேதியை முடிவு செய்தவர்களில் பலர் போன் செய்து, வரவேற்பு நிகழ்ச்சிகளை நிறுத்தி விட்டார்கள். திருமணத்தை வீட்டில் செய்கிறோம் எனக் கூறி கொடுத்த அட்வான் தொகையினை திரும்ப வாங்கிவிட்டார்கள். ஜூலை மாதத்தில் முடிவான திருமணங்களும் இப்போது கேன்சல் ஆகியுள்ளது.

ஸ்டுடியோ ரன் செய்கிற மேக்கப் ஆர்டிஸ்டுகள் பலர் நிறையவே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வாடகை கொடுப்பது கடினமான விசயமாக மாறி நிற்கிறது.  இந்த நிலை 2021 வரை நீடிக்கும்போல் தெரிகிறது. இதனால் பலர் ஆன்லைன் ப்யூட்சியன் வகுப்புகளை வருமானத்திற்காக எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ப்யூட்டிஷியன்ஸ் மட்டுமல்ல, காஸ்டியூம் டிசைனர்ஸ், வெட்டிங் ஃபோட்டோ கிராஃபர்ஸ் என அனைவருக்கும் இதில் பாதிப்பு அதிகம். எனக்குத் தெரிந்து வெட்டிங் ஃபோட்டோ கிராஃபர்ஸ் சிலர் தொழிலுக்காக வாங்கிய விலை உயர்ந்த கேமராக்களை விற்க ஆரம்பித்துள்ளனர்.

மகேஸ்வரி நாகராஜன்