மனசே ரிலாக்ஸ் பிளீஸ்...



கடந்த ஐந்து மாதமாக லாக்டவுன், கொரோனா தொற்று என்று மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். எப்போது சகஜ நிலைக்கு திரும்புவோம் என்று தெரியாமல் மக்கள் மனம் கலங்கியுள்ளனர். மேலும் நெருங்கிய பலர் இந்த தொற்று மட்டும் இல்லாமல் சில உடல் நிலை உபாதைகள் காரணமாக இறந்து வருவதால், அதனால் மனதளவில் பெரும் அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

விளைவு தூக்கமின்மை, மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற பிரச்னைகளை சந்திக்கின்றனர். இதற்கு தீர்வு மனதை ஒருநிலைப் படுத்த வேண்டும். அதற்கு தியானம் செய்ய வேண்டும். உங்களின் மனதை ஒருநிலைப்படுத்தவும், ஆழ்ந்த தியான நிலையை மேற்கொள்ளவும், உங்க கைபேசியிலேயே உள்ளது ஆப்கள். அதனை பயன்படுத்தி உங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம்.

ஹிமாலயன் மெடிடேஷன்

இந்த ஆப்பில் பலதரப்பட்ட தியானங்கள் உள்ளன. அவரவரின் வசதிக்கு ஏற்ப அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். வேலைக்கு செல்பவர்களுக்கு நேரமின்மை ஒரு பிரச்னையாக உள்ளது. அவர்களுக்கு மைண்ட்புல்னெஸ் ஷார்ட் மெடிடேஷன். நேரம் இருக்கு என்று நினைப்பவர்களுக்கு ஹார்ட்புல்னெஸ் மெடிடேஷன். சோல்புல்னெஸ், முனிவர்கள் பயன்படுத்தும் மிகவும் சக்தி வாய்ந்த தியானங்கள் என 500க்கும் மேற்பட்ட தியானங்கள் உள்ளன. மேலும் தியானங்களில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து நிபுணர்கள் தீர்வு அளிக்கிறார்கள்.  

புதிதாக ஆரம்பிப்பவர்களுக்கு பிகினர் மெடிடேஷன், ஓரளவு தியானம் செய்ய தெரிந்தவர்களுக்கு இன்டர்மீடியேட் மெடிடேஷன், ஆழ்ந்த தியானம் செய்பவர்களுக்கு அட்வான்ஸ்ட் ெமடிடேஷன் என இதன் செயல் முறைகள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் படிப்படியாக விளக்க முறை இருப்பதால், ஆரம்ப நிலையில் இருப்பவர்களும் எளிதாக கடைப்பிடிக்க முடியும்.

ரிலாக்ஸ் ரெயின்

ஆண்ட்ராய்ட் செல்போன் பயன்படுத்துபவர்களுக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ரிலாக்சேஷன் ஆப். இதில் 35 விதமான மழை துளிகளின் சத்தங்கள் ஒவ்வொருவரின் மனநிலைக்கு ஏற்ப ரிலாக்ஸ் செய்யும் படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓசைகள் காதுக்கு மிகவும் இனிமையாக இருப்பதால், தூக்கப்பிரச்சனை உள்ளவர்களுக்கு எளிதாக தூங்கவும், ஆழ்ந்த தியான நிலைக்கு செல்லவும் மற்றும் கவனசிதறல்கள் ஏற்படாமல் தடுக்கவும் மிகவும் பயனுள்ளதாக அமையும். இதில் நம்முடைய மனநிலைக்கு ஏற்ப மழையின் சத்தத்தினை மாற்றி அமைத்துக் கொள்வது மட்டுமில்லாமல், அதனுடன் நமக்கு பிடித்த இசையயினையும் இணைத்துக் கொள்ளலாம்.

மழை இசையில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையை கேட்கும் போது மனசு லேசாகும் என்பதில் சந்தேகமில்லை தானே!. நீங்கள் மற்ற வேலைகளை போனில் செய்யும் போது, இந்த ஆப்பினை பின்னால் ஒலிக்க செய்யலாம். அதே போல் குறிப்பிட்ட நேரம் வரை இதனை ெசயல்படவும் செய்யலாம். காட்டில் மழை, சாலையில் மழை, பூங்காவில் மழை, டென்ட்டுக்குள் மழை... இப்படி பலதரப்பட்ட மழை ஓசைகள் இதில் உள்ளன.
இந்த இசை இப்போது நாம் வாழும் அவசர காலத்தின் மன அழுத்தத்தினை போக்கும் வல்லமைக் கொண்டது. நேர்மறையான விஷயங்களுக்கு நம்முடைய மூளை துரிந்து செயல்படும் என்பதால், இது போன்ற இசை நம்மை எப்போதும் ஒரு அமைதியான சூழலுக்கு வழிநடத்தும்.

 ஏம்பியன்ஸ் - நேச்சர் சவுண்ட்ஸ்

ஏம்பியன்ஸ், பல தரப்பட்ட ரிலாக்சேஷன் இசைகளின் கலவை. இதில் இயற்கை சத்தங்களுடன் மற்ற இசையினை உங்களின் மனநிலைக்கு ஏற்ப இணைத்துக் கொள்ளலாம். எல்லா சத்தங்களும் உயர்ரக தரத்தில் இருப்பதால், உங்கள் காதுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாது. பதட்டம், தூக்கமின்மை மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள தேவையற்ற சத்தங்கள் அனைத்திற்கும் நல்ல தீர்வாக இருக்கும். மழை சத்தங்கள், கடல் ஓசைகள், தண்ணீர் சத்தங்கள், இரவு நேர சத்தங்கள், காற்றின் சந்தங்கள் தவிர பியானோ, கிட்டார், வயலின் , ஹார்ப், புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளின் சத்தங்கள்...

என 100க்கும் மேற்பட்ட சத்தங்கள் இதில் உள்ளன. உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப 10க்கும் மேற்பட்ட இசையினை ஒரே நேரத்தில் இணைத்து ரசிக்கலாம். மேலும் இணைக்கப் பட்ட இசையினை நீங்கள் பதிவு செய்து விரும்பும் நேரத்தில் கேட்டு மகிழலாம். தியானம் செய்வதற்கும் இவை மிகவும் பயனுள்ளது. டினிடஸ், அதாவது காதில் ஒருவிதமான சத்தம் ஒலித்துக் கொண்டு இருப்பது போன்ற உணர்வு. அந்த ஒலியின் பிரச்னையில் இருந்து தீர்வு காணமுடியும்.

ஓம் சான்டிங்

தியானம் செய்பவர்களுக்காகவே அமைக்கப்பட்ட ஆப். காலை எழுந்து தியானம் செய்யும் போது அவர்களுக்கு வேறு எந்த ஒலியும் டிஸ்டர்ப் செய்யாமல் இருக்க இந்த ஓம் சான்டிங் மிகவும் உதவியாக இருக்கும். இதற்கு இணையம் அவசியம் இல்லை. இதில் சக்ரா, மெடிடேஷன் பிரம்மா, லூசிட் டிரீமிங், பப்பிள்ஸ், மெடிடேஷன் லைட், காஸ்மிக் மியூசிக், சான்டிங் கவுன்டர், ஆரஞ்ச் மெடிடேஷன் என பல தரப்பட்ட சான்டிங் இசைகள் உள்ளன.

தியானம் செய்வதால், மனம் அமைதி,  ஆழ்ந்த தூக்கம், ஞாபக சக்தி, கவனச்சிதறல்கள், படபடப்பு போன்ற பல பிரச்னைக்கான தீர்வு கிடைக்கும். தியானத்தை மேற்கொள்ள ரம்மியமான இசை அவசியம். அதனை ஓம் சான்டிங் மூலம் பெறலாம்.

கார்த்திக் ஷண்முகம்