மினி பட்ஜெட் கல்யாணம்!சென்னையில் உள்ள திருமண மண்டபம் வாசலில் பட்டாடைகள் அணிந்து பெண்களும், ஆண்களும் சமூக இடைவெளியை பின்பற்றி
வரிசையாக நின்றிருந்தனர். அவர்களில் ஒருவர் மண்டபத்திற்குள் வருபவரை நெற்றியில் துப்பாக்கி போன்றிருந்த கருவியால் வெப்பநிலையை அளந்து
கொண்டிருந்தார்.

மற்றவர் முகக்கவசம் வழங்க அதற்கடுத்த நின்றிருந்தவர் கையில் சானிடைசர் தெளித்து கொண்டிருந்தார். பார்க்கும் போது மருத்துவமனைக்குள் செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஆனால் உள்ளே நுழைந்த பிறகு பன்னீரும், சந்தனமும் நம்மை வரவேற்றது. மணத்தது. மேடையில் புரோகிதர் கெட்டி மேளம் என கையால் சைகை செய்து கொண்டிருந்தார்.

பிறகு தான் இது முகூர்த்தம் நடக்கும் மண்டபம் தான் என உறுதி செய்ய முடிந்தது. கொரோனா தொற்று பரவி வருவதை தொடர்ந்து மத்திய அரசும் மாநில அரசும் விதித்த கெடுபிடிகள் தான் திருமணங்களில் சானிடைசரும், ஸ்கிரீனிங் சோதனையும் கட்டாயமாக்கப்பட்டு விட்டன. எந்த சூழ்நிலையிலும் எளிய முறையில் எந்தவிதமான விழாவையும் சிறப்பாக செய்ய முடியும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார் ஜனனி. சென்னை வேளச்சேரியை சேர்ந்த இளம் பெண்ணான இவர் கடந்த 5 ஆண்டு களாக ‘Happily Ever After’ என்ற திருமண ஏற்பாட்டு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

‘‘கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் போதே அங்கு நடைபெறும் அனைத்து விழாக்களின் ஏற்பாட்டினை செய்வேன். ஒவ்ெவான்றையும் பார்த்து பார்த்து பட்ஜெட்டுக்கு ஏற்ப செய்வது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அப்போது நான் செய்தது இப்போது என்னுடைய
தொழிலாகவே மாறிவிட்டது.

திருமணம், பிறந்த நாள், வளைகாப்பு, பல்வேறு ஐடி நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் பிரிவு உபசார விழா முதல் தேனிலவு பயணம் அனுப்புவது வரை பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து தருகிறோம்.மாப்பிள்ளைக்கு பெண்ணை பார்த்து கொடுப்பது மட்டும் தான் உங்கள் பொறுப்பு.

திருமணத்துக்கு பத்திரிகை டிசைன் செய்வது, பத்திரிகை அச்சடித்தல், திருமண உடை டிசைன், கல்யாண பெண்ணுக்கான பிளவுஸ் முதல்  அலங்கார நகைகள், நாதஸ்வரம், மேடை அலங்காரம், புரோகிதர், சவுண்ட் கலை நிகழ்ச்சிகள், கேட்டரிங், புகைப்பட நிபுணர் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்து தருகிறோம். நான் அழகு கலை நிபுணர் என்பதால், அதையும் பார்த்துக் கொள்கிறேன்’’ என்றவர் அனைத்து மத திருமண ஏற்பாட்டினையும் செய்து தருகிறார்.

‘‘தற்போது கொரோனா தொற்று காரணமாக ஆயிரக்கணக்கான திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை. பல திருமணங்களுக்கு மண்டபம் அட்வான்ஸ் கொடுத்து விட்ட நிலையில் கொரோனா ஊரடங்கால் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வெளிநாட்டில் மாப்பிள்ளை, மணப்பெண்ணால் வர முடியாத காரணத்தாலும் குறித்த காலத்தில் நடைபெறவில்லை. கொரோனா தொற்று குறைந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கினால் மட்டுமே எங்கள் பணி சரிவில் இருந்து மீளும்.

15 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி வரையிலான செலவில் திருமண ஏற்பாடுகளை செய்து தருகிறோம். இதுவரை  20க்கும் மேற்பட்ட திருமண நிகழ்வுகள், 10க்கும் மேற்பட்ட பிறந்த நாள் விழாக்கள், கார்ப்பரேட் விழாக்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கேன்.

கொரோனா தொற்றால், 50 பேர் வரை பங்கேற்கும் வகையில் மினி பட்ஜெட் திருமணங்களுக்கு இப்போது அதிக வரவேற்பு உள்ளது. இதில் சில்வர், தங்கம், வைரம் மற்றும் வெண்கலம் என நான்கு பட்ஜெட்களில் திருமணம் செய்கிறோம்.

உதாரணமாக வெண்கல பேக்கேஜ் என்றால் ஆன்லைன் மூலம் பத்திரிகை அனுப்புவோம், வீட்டிலேயே திருமணம், நாதஸ்வரம், 25 பேருக்கு உயர்தர சைவ உணவு, திருமணத்தை படம் மற்றும் வீடியோ பிடிக்க என தலா ஒருவர் மற்றும் 30 பக்கம் கொண்ட ஆல்பம் போன்றவை வழங்குகிறோம்.

வைர பேக்கேஜ் என்றால் தாம்பூல பைகளில் கிப்ட், திருமண மண்டபங்களில் திருமணம், கூடுதலாக போட்டோகிராபர், வீடியோ கிராபர் என்பது உள்ளிட்ட சில கூடுதல் வசதிகள் இருக்கும். ஒரு  திருமணம் புக்கிங் எடுத்தா நான்கு மாதம் முன்பே வேலையினை ஆரம்பித்துவிடுவோம்’’ என்றார் ஜனனி.

கோமதி பாஸ்கரன்