நியூஸ் பைட்ஸ்குற்றங்களை கண்டறியும் அடையாள அட்டைகள்

சீனாவில் வன்புணர்வு, வன்கொடுமை போன்ற குற்றங்களைத் தடுத்து விவாகரத்துகளைக் குறைக்க,  ஆணோ/பெண்ணோ தான் திருமணம் செய்யவிருக்கும் நபரின் விவரங்களை அறிந்துகொள்ள புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அடையாள அட்டையை கொண்டு விண்ணப்பித்தால், ஒருவர் திருமணம் செய்யவிருக்கும் நபர் இதற்கு முன் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தால், அந்த விவரங்கள் தெரிவிக்கப்படும். ஒருவர் வருடத்திற்கு இரண்டு முறை இது மாதிரியான தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

2021 வரை இலவச ரேஷன் பொருட்கள்

மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் பலரும் வேலை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவிப்பதால், அவர்களின் துயரத்தை போக்க ஏழை மக்களுக்கு ஒரு வருடத்திற்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் மக்களால் வரவேற்கப்பட்டுள்ளது.

களம் இறங்கும் பெண் விவசாயிகள்

கேரளாவில், ஊரடங்கு காலத்தில் பெண்கள் இயற்கை விவசாயத்தில் அதிகம் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  சில மாதங்களாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே அதிக நேரம் இருப்பதால், பொழுதுபோக்காகவும், சிறிய வருமானத்திற்காகவும் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக கேரளாவில் பெண்கள் பலர் இதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். வீட்டிற்குத் தேவையான ஆரோக்கியமான உணவு தட்டுப்பாடின்றி கிடைப்பதாலும், நிரந்தர வருமானம் கிடைப்பதாலும் இதில் நூற்றுக்கணக்கான பெண்கள்
இணைந்துள்ளனர்.

வன்புணர்வுக்குப் பின் பெண் உறங்கலாமா?

கர்நாடகா உயர்நீதிமன்றம், பாலியல் வன்புணர்வுக்குப் பின் பாதிக்கப்பட்ட பெண் உறங்கியுள்ளார் என்பது ஏற்கும்படியாக இல்லை எனக் கூறி குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், குற்றம் சாட்டப்பட்டவருடன் மது அருந்தியதும், பாலியல் வன்புணர்வுக்குப் பின் தூங்கி எழுந்து காலையில்தான் வழக்குப் பதிவு செய்ததையும் சுட்டிக்காட்டி, வன்புணர்வுக்குப் பின் நம் பெண்கள் இப்படி நடந்துகொள்ள மாட்டார்கள் என நீதிபதி குறிப்பிட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மணப்பெண் கோலத்தில் போராட்டம்

இத்தாலியில் பெண்கள் மணப்பெண் கோலத்தில், வெள்ளை கவுன் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகெங்கும் பல நாடுகளில் திருமணங்களுக்குக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இத்தாலியில், திருமணத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் தங்கள் கல்யாணம் தடைப்பட்டு, காலம் கடந்துபோவதாக கூறி பெண்கள் சிலர் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.

திருநங்கைகளுக்கு ஓய்வூதியம்

ஒடிஸா அரசு, எளிய மக்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் திருநங்கைகளையும் இணைத்துள்ளது. மது பாபு பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தின் கீழ், ஆதரவற்ற முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் மூன்றாம் பாலினத்தோரையும் இணைத்ததன் மூலம் சுமார் 5000 திருநங்கைகள் பயன் பெறுவார்கள். திருநங்கைகளின் வயதைப் பொறுத்து, மாதம் 500 முதல் 900 ரூபாய் வரை ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்வேதா கண்ணன்