வாழ்வென்பது பெருங்கனவு! கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!



மருத்துவர் ரேவதி

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனமாக நினைத்தால் பலவீனமாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய் என்பது சுவாமி விவேகானந்தரின் தத்துவ வார்த்தைகளில் குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் பக்கவிளைவில்லா மகத்துவ மருத்துவராக வேண்டும் என்ற தன் லட்சியக் கனவில் உறுதியாக இருந்து அதனை சாதித்துக்காட்டிக் கொண்டிருக்கும் மருத்துவர் ரேவதி தன் வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

“குட்டி ஜப்பான் என்று அழைக்கப் படுகின்ற வர்த்தக நகரான சிவகாசி அருகே உள்ள எழில் மிகுந்த எட்டக்காப்பட்டிதான் நான் பிறந்த ஊர். விவசாய குடும்பத்தில் 4வது பிள்ளையாக பிறந்த எனக்கு, 2 அண்ணன்கள், 1 அக்கா, 1 தங்கை மற்றும் 1 தம்பி ஆகியோர் உள்ளனர். தந்தை துணை தாசில்தார் ஆக இருந்து ஓய்வு பெற்றவர், தாய் இல்லத்தரசியாக இருந்தாலும், இயற்கை விவசாயத்தை நிர்வகித்து வந்தார்.

எனது தந்தை அவரது ஓய்வு நேரத்தில், எங்களை நிலங்களுக்கு அழைத்துச் சென்று, செடி, கொடிகளை இனம் காட்டி அதன் மூலிகைப் பண்புகளைப் பற்றி எடுத்துக் கூறுவார். இதன் காரணமாக எனக்கு சிறுவயதிலேயே, இயற்கை மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. நாட்டு மருத்துவரான எனது தந்தை, உடம்பு சரியில்லை என்று வருபவர்களுக்கு, மருந்து தயாரித்து தரும்பொழுது அதன் செய்முறையை நான் கவனித்துக் கொண்டே இருப்பேன்.

அவர், எந்த நோயாக இருந்தாலும், மூலிகைகளைக் கொண்டே சரிசெய்ய வேண்டும் என்று வைத்தியம் செய்து குணமாக்குவார்.
அம்மாவும், சமையலில் நிறைய மூலிகைகளை சேர்த்து உணவு தயாரித்து கொடுப்பார்கள். கல்லூரிக்கு செல்லும் வரை, நான் மருத்துவ
மனைக்கும் சென்றதில்லை, ஆங்கில மருந்தும் உட்கொண்டது இல்லை.

சிவகாசி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எனது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் மனையியலில் (Home Science) இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றேன். பிறகு, அதே வருடம் தூத்துக்குடியில் உள்ள கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணிக்கு சேர்ந்தேன்.

இதற்கிடையில் எனக்கு திருமணமானது. கல்யாணம் முடிந்து நான் நெய்வேலிக்கு குடிபெயர்ந்தேன். எனது கணவர், NLC நிறுவனத்தில் மனிதவள துறையில், பொது மேலாளராக பணியாற்றுகிறார். எனக்கு 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். மகன், பொறியியல் பட்டதாரி மகள், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் பயின்று வருகிறாள்’’ என்றவர் இயற்கை மருத்துவம் மேல் ஏற்பட்ட ஆர்வம் பற்றி விவரித்தார்.

‘‘இயற்கை மீதும், மூலிகைகள் மீதும் எனக்கு சின்ன வயசில் இருந்தே ஆர்வம் அதிகம். என்னுடைய வீடும் தோட்டம் நிறைந்த இடமாக அமைந்திருந்ததால், அங்கு மா, பலா, வாழை, தென்னை போன்ற மரங்கள் மட்டும் இல்லாமல், பல மூலிகை செடிகளையும் வளர்த்து, அதனை பயன்படுத்தி வந்தேன். எனக்கு இருந்த ஆர்வத்தினாலும், எனது தந்தை மற்றும் கணவரின் உந்துதலினாலும், நான் ஹோமியோபதி, யோகா மற்றும் நேச்சுரோபதி (Naturopathy), அக்குபங்சர் ஆகியவற்றில் பட்டயப் படிப்பு பெற்றேன். புதிதாக எதையாவது தெரிந்துகொள்ள
வேண்டும் என்ற ஆர்வம் என்னை மேலும் மேலும் படிக்கத் தூண்டியது. மாற்றுமுறை மருத்துவத்தில் M.D. பட்டம் பெற்று பதிவுபெற்ற மாற்றுமுறை மருத்துவராக நெய்வேலியில் கிளினிக் ஒன்றையும் நடத்தி வருகிறேன்.

மாற்றுமுறை மருத்துவத்தைப் பற்றி நான் அறிந்ததை மற்றவர்களிடம் எடுத்துச் செல்லவும், அவர்களுக்கு இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புத்தகங்கள் எழுதத் தொடங்கினேன். தமிழகத்திலேயே சென்னை புத்தகக் கண்காட்சிக்கு அடுத்தபடியாக உள்ள நெய்வேலி
புத்தகக் கண்காட்சி - 2011ல், அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அமுதவல்லி அவர்கள் எனது முதல் புத்தகத்தை வெளியிட்டார். அதே நெய்வேலி புத்தகக் கண்காட்சி - 2015ல், எனக்கு சிறந்த எழுத்தாளர் என்று விருது வழங்கி சிறப்பித்தது.

தற்போது, வெவ்வேறு தலைப்புகளில் மாற்றுமுறை மருத்துவங்களைப் பற்றி 10 புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். நான் இத்தனை புத்தகங்களை
எழுதுவதற்கு ஊன்றுதலாக இருந்தவர், எனது கல்லூரி பேராசிரியை டாக்டர் சூரியகாந்தி அவர்கள் தான்.தமிழ் மீது நான் கொண்ட அளவற்ற பற்றினால், நான் தமிழில் முதுகலைப் பட்டம் பயின்றது மட்டுமல்லாமல், அதில் தற்பொழுது Ph.D. செய்து வருகிறேன்.

இது தவிர பல இலக்கிய சங்கங்கள் நடத்திய நிகழ்வுகளில் (பட்டிமன்றம், பாட்டுமன்றம்) உரையாற்றியுள்ளேன். வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் மருத்துவம் சம்பந்தப்பட்ட  பல  நிகழ்ச்சிகளை அளித்து வருகிறேன். மாத இதழ்களில் மட்டுமல்லாமல் இணையத்திலும் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். யுடியூப்பிலும்,  மருத்துவக் குறிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறேன்’’ என்றவர் சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

‘‘நான் பயின்ற கல்லூரி, அதனை சுற்றியுள்ள பல கிராமங்களை தத்தெடுத்து அவற்றின் வளர்ச்சிக்காக மாணவர்களை சமூக சேவையில் ஈடுபடுத்தி உதவி செய்து வந்தது. நான் இளநிலை பட்டம் பயின்று கொண்டிருந்த சமயத்தில், சாந்தி சேனா, NSS போன்ற தன்னார்வ இயக்கங்களில் பணியாற்றியது, எனக்கு சமூக சேவையின் மீது இருந்த நாட்டத்தை அதிகரித்தது.

இதனால் நான் முதுகலையில் M.Sc. (Home Science Extension and Rural Development) பட்டப்படிப்பினை தேர்வு செய்தேன். இந்த சமயத்தில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சேவைகளை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. இதில் முனைப்பு பெற்ற நான், ‘மகாத்மா காந்தி’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை பதிவு செய்து, நெய்வேலியை சுற்றியுள்ள கிராமங்களில் சமூக சேவை புரிந்து வருகிறேன்.

வறுமையில் வாடும் குடும்பத்திலிருந்து வரும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு கல்வி கட்டணம் செலுத்துதல், பாட புத்தகங்கள் வழங்குதல்,
கல்வி ஆலோசனை ஆகிய சேவைகளை செய்து வருகிறேன். மரக்கன்றுகள் நடுதல், புயல் மற்றும் வெள்ள நிவாரணம் அளித்தல் போன்ற சேவையிலும் என்னை ஈடுபடுத்தி வருகிறேன். இலவச மருத்துவ முகாம், மூலிகை விழிப்புணர்வு முகாம் ஆகியவற்றையும் நடத்தி வருகிறேன். வருங்காலத்தில் இயற்கை மருத்துவமனை ஒன்றை அமைத்து, பக்க விளைவுகள் இல்லாத மாற்றுமுறை மருத்துவ முறைகளைக் கொண்டு ஏழை, எளிய மக்களும் எளிதில் பயன்பெறுமாறு இலவச மருத்துவம் வழங்குவதே எனது வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ளேன்” என்றார் மருத்துவர் ரேவதி.

தோ.திருத்துவராஜ்