நியூஸ் பைட்ஸ்



திருநங்கைகளுக்கு வீடு மறுத்தால் ஆறு ஆண்டு சிறை

இந்தியாவில் முதல் முறையாக, பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி,  ‘‘திருநங்கைகளுக்கு வீடு தராமல், அவர்களை ஒதுக்குவது சட்டப்படி குற்றமாகும். வாடகைக்கு வீடு தர மறுக்கும் உரிமையாளர்களுக்கு இரண்டு முதல் ஆறு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்” என்றும் அறிவித்தார். மேலும், மூன்றாம் பாலினரின் உரிமைகளையும் நலன்களையும் காக்க, தனி வாரியம் அமைக்கப்பட்டு, அவர்களின் வேண்டுகோள்களும் குறைகளும் ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அம்மா... மகள்... டாக்டர் பட்டம்!

 56 வயதாகும் மாலா தத்தாவும், 28 வயது மகள் ஷ்ரெயா மிஷ்ராவும் தில்லி பல்கலைக்கழகத்திற்கு தங்களது பி.எச்.டி பட்டங்களை பெற்றுக்கொள்ள வந்திருந்தனர். மாலா தத்தா கல்லூரி முடித்து 34 வருடங்கள் ஆகிறது. ஆனால் டாக்டர் பட்டம் வாங்க வேண்டும் என்பது அவரின் தீராத ஆசையாகவே இருந்து வந்தது. தன் பணியிடத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு 2012ல் நிதித்துறையில் தன் பி.எச்.டியை தொடங்கினார்.  

இரண்டு வருடங்கள் கழித்து இவரின் மகள் ஷ்ரெயா உளவியல் துறையில் பி.எச்.டியை மேற்கொண்டார். சில வருடங்களில் தாய் மகள் இருவரும், ஒரே நேரத்தில் பி.எச்.டி முடிய வாய்ப்பிருப்பதை உணர்ந்து, ஷ்ரெயா தன் படிப்பில் அதிக கவனம் செலுத்தியதில், இருவருக்கும் ஒரே நேரத்தில் டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. கல்விக்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்து காட்டியிருக்கும் மாலா தத்தாவிற்கு பாராட்டுகள் குவிந்து
வருகின்றன.

‘வேண்டாம்’ ரூ.22 லட்சம் சம்பளம்!

தமிழ்நாட்டின் கிராமங்களில், பெண் குழந்தைகள் பிறந்தால் ‘வேண்டாம்’, ‘பொண்ணு போதும்’ போன்ற பெயர்கள் வைப்பது வழக்கம். இப்படி பெயர் வைத்தால், அடுத்துப் பிறக்க போகும் குழந்தை ஆணாக இருக்கும் என்பது இவர்கள் நம்பிக்கை. வறுமையான குடும்பத்தில் பிறந்த அந்த பெண் குழந்தைக்கும் அவரின் பெற்றோர் ‘வேண்டாம்’ என்ற பெயர் சூட்டினர்.

அந்த குழந்தை வளர்ந்த பின், தன் பெயருக்கான காரணம் அறிந்து மனமுடைந்து போனாள். நன்றாக படித்தாள். பொறியியலில் கல்லூரியில் சேர்ந்தவர், இப்போது ஒரு ஜப்பான் கம்பெனியில் வருடம் ரூ.22 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு தகுதி பெற்றுள்ளார். பெண் பிள்ளைகள் என்றால் பாரம் என்ற சமூகத்தின் எண்ணம் மாறும் என்ற நம்பிக்கையில் ஜப்பானுக்குச் செல்ல தயாராகிக்கொண்டிருக்கிறார்.

கேரளாவில் 21 மூன்றாம் பாலினத்தவர் கவுரவிக்கப்பட்டுள்ளனர்

இந்தியாவிலேயே, தென் இந்திய மாநிலங்கள்தான் மூன்றாம் பாலினத்தோருக்குச் சலுகைகளும் உரிமைகளும் கிடைக்க அதிக சட்டங்களும் நலத்திட்டங்களும் கொண்டு வருகின்றன. அதன் வரிசையில், கேரள மாநிலம், பத்தாம் வகுப்பை முடிக்க முடியாமல், படிப்பை பாதியிலேயே கைவிட்ட திருநங்கைகளுக்கு தங்களின் படிப்பை முடிக்க வகுப்புகள் நடத்தின.

படிப்பை பாதியிலேயே நிறுத்தும் நிலைமைக்குத் தள்ளப்பட்ட 21 திருநங்கைகள்,  இந்த திட்டத்தின் மூலம் பத்தாம் வகுப்பை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக கேரள அரசு, அவர்களை கவுரவித்துள்ளது.

கேரளா நகராட்சி, 5000 இலவச மென்ச்சுரல் கப்களை வழங்கி வருகிறது

கேரளா அமைச்சர் தாமஸ் ஐசக், ஆலப்புழாவில் ‘திங்கள் மென்ச்சுரல் கப்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் முதல் கட்டமாக ஐயாயிரம் மென்ச்சுரல் கப்களை இலவசமாக பெண்களுக்கு வழங்கினார். கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி திட்டத்தின்கீழ், இதன் மொத்த செலவையும், கோலா இந்தியா லிமிடட் நிறுவனம் ஏற்றுள்ளது. இந்த இலவச மென்ச்சுரல் கப்களை, நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் வந்து வாங்கிக்கொள்ளலாம். ேமலும் இதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற தகவல்களும் வழங்கப்படுகிறது.

நெதர்லாந்து பல்கலைக்கழக பணிகளுக்கு ஆண்கள் விண்ணப்பிக்கத் தடை!

நெதர்லாந்தில் அரசு, தங்கள் பல்கலைக்கழகத்தில் இருக்கும் பெண் கல்வியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, ஆண்கள் அந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. ஜூலை 1 முதல், நெதர்லாந்தில் உள்ள Eindhoven University of Technology (TUE) பல்கலைக்கழகத்தில்,  முதல் 6 மாதங்களுக்கு நிரந்தர கல்விப் பணிகளுக்கு ஆண்கள் விண்ணப்பிக்க அனுமதி மறுத்துள்ளது. அந்த
6 மாத காலத்தில் பொருத்தமான பெண் விண்ணப்பதாரர்கள் யாரும் தேர்வாகவில்லை எனில், ஆண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் நிர்வாகம் கூறியுள்ளது.

ஸ்வேதா கண்ணன்