ஆதிசக்தியான பார்வதி தேவிசக்தி தரிசனம்-சூலமங்கலம்

ஈசனின் ஆயுதங்களும் தனித்துவம் பெற்றவை. அவர் கைகளில் தாங்கியிருக்கும் ஆயுதத்திற்குப்பெயர் அஸ்திர தேவர். இவராலேயே ஈசனுக்கு சூலபாணி எனும் திருநாமமும் ஏற்பட்டது. அப்படிப்பட்ட அஸ்திரதேவர் இத்தலத்தில் உறையும் கிருத்திவாகேஸ்வரர் எனும் திருநாமத்தோடு பொலியும் ஈசனை பூஜித்து தவமியற்றினார். சிவம் தோன்றினார்.

பக்தியில் சூலம் குழைந்து நின்றது. ஆனாலும், ஈசன் கூர்மையாக நோக்கி பேசத் தொடங்கினார். ‘‘எப்போதும் என் ஆயுதமாக இருக்கும் நீ, பக்தர்கள் கொண்டாடும் திருவிழா காலங்களிலும், தீர்த்தவாரி விழாக்களிலும் எனக்கு முன்பு கம்பீரமாக நீ செல்வாயாக’’ என்று வரத்தையே ஆணையாகவும் இட்டார். அதிலிருந்து சகல சிவாலயங்களிலும் முதலில் அஸ்திர தேவர் எனும் சூல தேவருக்குத்தான் முதல் பூசையும்கூட நடைபெறும்.

இத்தலத்தின் நாயகரான கிருத்திவாகேஸ்வரரும் சிறப்பு வாய்ந்தவராவார். கரிஉரித்த நாயனார் என்றொரு வேறு பெயரும் உண்டு. அதாவது யானையை உரித்து தோலை போர்த்திக் கொள்ளும் பெரும் வதத்தை செய்த விஷயம் அது. அதேபோல கிருத்திவாகேஸ்வரர் என்பதும் ஒரு வதத்தினால் வந்த திருப்பெயர்தான். கயாசுரன் என்பவன் எல்லா இந்திராதி தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. எல்லோரும் பயந்து காசிக்கு வந்தனர். கயாசுரனும் காசியை அடைந்தான்.

அவனைக் கண்டு அஞ்சியவர்கள் விஸ்வநாதப்பெருமானை அணைத்துக் கொண்டனர். அவர்களைப் பிடித்து கொல்லப் பாய்ந்தவன் முன்பு ஈசன் பேரொளி பெருஞ்ஜோதியாகத் தோன்றினார். அவனை உதைத்தார். ரத்தம் வழிய கீழே விழுந்தவனை தூக்கி நிறுத்தி யானையை உரித்ததுபோல கயாசுரனின் தோலை உரித்து போர்த்திக் கொண்டார்.

சகல தேவர்களும் மகிழ்ந்தனர். காசியிலுள்ள மணிகர்ணிகை கட்டத்தில் லிங்கமாக எழுந்தருளினார். அவரைத்தான் கிருத்திவாகேஸ்வரர் என்று எல்லோரும் அழைத்தார்கள். அப்படிப்பட்டவரிடம்தான் இந்த சூல தேவர் இத்தலத்தில் அமர்ந்து பூஜித்து வரம் பெற்றார் என்றால் என்னவொரு பொருத்தம் பாருங்கள். சூலத்திற்கும் வதத்திற்கும் தொடர்பு உண்டல்லவா? அஸ்திர தேவரான சூல தேவரின் சிலையை கோயிலின் உள் வாயிலில் காணலாம்.

ஆதிசக்தியான பார்வதி தேவி சூலமங்கலத்திற்கு வந்தாள். லிங்க ரூபமான கிருத்திவாகேஸ்வர சுவாமியின் திருப்பாதம் படர்ந்தாள். சிவச்சின்னங்கள் உணர்த்தும் அனுபூதிப் பூர்வமான பேருணர்வுகளையும் பிரபஞ்ச சக்திகளை உணர்ந்தும் தரிசித்தும் தொடர்ந்து வந்தவள் ஈசன் இங்கு எதை தமக்கு அருளப்போகிறாரோ என்று அமர்ந்தாள். தவத்தின் கூர்மையில் தமக்குள் வெகு ஆழத்தில் சென்றாள்.

செங்கதிர் வேந்தன் ஈசன் தோன்றினான். கண்களை கூசும் பேரொளி அங்கு படர்ந்தது. கைகளில் சூலத்தை ஏந்தியவாறு ஈசன் காட்சியளித்தார். ஆணவம், கண்மம், மாயை இவை மூன்றும் விலக்கத்தக்கது. எங்கு இது அதிகமாகிறதோ அதை அடக்கத்தான் இந்த சூலம் என்பதை சொல்லாமல் சொன்னார். முக்குணங்களை உணர்த்தவே இந்த திரிசூலம்.

சூலம் என்பது முக்குணங்களும் இணைந்ததான ஒரு சக்தி. இவற்றிற்கெல்லாம் அதிபதியே அந்த பரமேஸ்வரர். நான் எனும் அகங்காரத்தை நாசம் செய்பவர்தான் இந்த அஸ்திரதேவர். இது உடலையும் தாண்டி உள்ளுக்குள் ஏற்படும் ஆணவ நாசத்தை உணர்த்தும் விஷயமே இந்த சூல தத்துவமாகும். சப்த மாதர்களில் கௌமாரி வழிபட்ட தலமிது. சும்ப நிசும்ப ரக்த பீஜ வதத்திற்கு முன்பு சண்டிகைக்கு துணையாக வந்தவள்.

கோலமயில் வாகனத்தில் வந்த இவள் குமரப் பெருமானின் சக்தியான கௌமாரியே ஆவாள். வேலவனுக்கே உரிய வேலாயுதத்தையே ஆயுதமாக ஏந்தி வந்து இந்த ஈசனடி பரவி பலம் பெற்று போர்க்களம் நோக்கி ஓடினாள். சூல மங்கையில் வேல் மங்கையான கௌமாரியும் பூஜித்தது எத்துணை ஆச்சரியம்.

அந்த திவ்ய அநவித்யநாத சர்மா நெகிழ்ந்து இத்தலத்தை அடைந்தார். ஆஹா... எப்பேற்பட்ட தெய்வங்கள் தரிசித்த பெருந்தெய்வம் என நெக்குருகி நின்றனர். கீர்த்திவாகேஸ்வரரையும் அம்பாள் அலங்காரவல்லியையும் கண்குளிர தரிசித்தார். அம்பாளை மங்கையாக இங்கு தரிசித்தார்கள். இதை பூப்பருவம் என்பார்கள். ஆதிசக்தியானவள் நானும் உங்களைப்போலத்தான் எமக்குள்ளும் பருவங்கள் உண்டு.

அது ஈச நியதி. ஆயினும் அதையும் தாண்டிய நிலையும் உண்டு. நம்மிலிருந்து நாதன் நிலை வரை அழைத்துப் போவதற்காகவே இப்படி இந்த தரிசனங்கள் என்கிறாள். கிருத்திகை என்பது ரிஷி பத்தினிகளையும் குறிக்கும் பதம். ரிஷி பத்தினிகளிடம் வாசம் செய்பவர் என்ற பொருளுடனும் இங்கே கிருத்திவாகேஸ்வரர் எனும் திருநாமம் பெற்றுள்ளதாக கூறுவர். பெண்களுக்கு உயர்வைத் தரும் சிவப்பதி இது.

இத்தலத்தில் ஆலமரமின்றி ஜடாமுடியோடு தட்சிணாமூர்த்தி அருள்கிறார். சனி பகவான் தன் குருவான பைரவருடன் அருகருகே நின்று அருள்பாலிப்பது அரிதான தரிசனமாகும். சூல விரதம் என்றே தனியாக ஒன்றுண்டு. இதை சூரியன் மகர ராசியில் இருக்கும்போது அதாவது தை அமாவாசையன்று சிவபெருமானை உள்ளத்தில் வைத்து ஒருபொழுது உணவு உட்கொண்டு சிவாலய தரிசனத்தை முக்காலம் செய்து இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

மகாவிஷ்ணு உட்பட பலர் இந்த விரதத்தை மேற்கொண்டதாக பிரமாண்ட புராணம் கூறுகிறது. சூல விரதம் மேற்கொண்டோரை விரோதிகள் நெருங்க முடியாது என்றும் புராணம் பகர்கிறது. தஞ்சாவூர், கும்பகோணம் பாதையில் அய்யம்பேட்டையிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

கிருஷ்ணா

சி.எஸ்.ஆறுமுகம்