குழந்தையின்மைக்கு சித்தாவில் தீர்வுண்டு!குழந்தையின்மை, நீரிழிவு பிரச்னை, ரத்த அழுத்தம், தைராய்டு, மூட்டு வலி... இப்படியாக நம் உடலில் ஏற்படும் பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். நம் முன்னோர்கள் சந்திக்காத இந்த பிரச்னைகளை இந்த தலைமுறையினர் பலர் சந்தித்து வருகிறார்கள். இதற்கான தீர்வினை, சித்தா மருத்துவத்தில் இயற்கை முறையில் குணப்படுத்த முடியும் என்கிறார் சென்னையை சேர்ந்த சித்த மருத்துவரான யோகவதி. சித்த மருத்துவம் ஐந்தாண்டு படித்தவர், தற்போது ‘எதினிக் ஹெல்த் கேர்’ என்ற பெயரில் சித்த மருத்துவம் மூலம் இயற்கை முறையில் கருத்தரிப்பு சிகிச்சை மையத்தை நிர்வகித்து வருகிறார்.  

‘‘எங்களிடம் பலர் குழந்தையின்மை காரணத்திற்காகத்தான் சிகிச்சைக்கு வருகிறார்கள். இந்த சிகிச்சை முறைகளுக்கு அதிக செலவாகும். வசதி படைத்தவர்கள் செய்து கொள்கிறார்கள். ஆனால் வசதி இல்லாதவர்களால், சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவு செய்ய முடியாது. மறுபக்கம் கருமுட்டை அல்லது விந்தணுக்களை தானமாக பெற்று குழந்தை பெற்றாலும், அது அவர்கள் இருவரின் குழந்தை இல்லை என்பதாலும் பலர் இயற்கை முறையில் கருத்தரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

பொதுவாக கருத்தரிப்பில்பெண்களுக்கு தடை ஏற்பட முக்கிய காரணம் கர்ப்பப்பையில் உள்ள நீர்கட்டிகள் அல்லது பெலோபியன் குழாயில் உள்ள அடைப்பு. ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கருத்தரிக்க முடியாது. சித்த மருத்துவம் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் கர்ப்பப்பையில் உள்ள நீர்கட்டிகள் மற்றும் பெலோபியன் குழாய் அடைப்புகளையும் நீக்க முடியும். அதன் பிறகு அவர்கள் இயற்கை முறையில் கருத்தரிக்க சித்த வைத்தியம் மூலம் உதவுகிறோம்.

விந்தணுக்கள் குறைய இரவு நேரத்தில் வேலைப் பார்ப்பது, தூக்கமின்மை மற்றும் உணவு முறைகளும் காரணமாகும். இதனால் உடலின் தட்பவெப்பம் அதிகரிக்கும். இது விந்தணுக்கள் உற்பத்தி செய்வதை பாதிக்கும். நாளடைவில் உற்பத்தியாவது முற்றிலும் குறைந்திடும். ஆண்களின் உடை பேன்ட் மற்றும் சட்டை தான். முன்பு வேஷ்டி தான் பிரதான உடையாக இருந்தது. இப்போது ஜீன்சை தான் பெரும்பாலான ஆண்கள் அணிகிறார்கள். இது நமக்கான உடை அல்ல. இதனாலும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். ஜீன்சுக்கு பதில் காட்டன் பேன்ட் அணியலாம்.

பெண்களுக்கு ஏற்படும் நீர்கட்டி பிரச்னைக்கு ஹார்மோன் குறைபாடு ஒரு பக்கம் இருந்தாலும் நாம் சாப்பிடும் உணவு முறைகளும் இதற்கு முக்கிய காரணம். நம் பாரம்பரிய உணவுகளை தவிர்த்துவிட்டு பீட்சா, பர்கர்ன்னு சாப்பிட பழகிட்டோம். விளைவு வாயு பிரச்னை. கர்ப்பப்பையில் காற்று அதிகமாக சேரும் போது அது நீர்கட்டி பிரச்னைக்கு வழிவகுக்கும். இவர்கள் உணவில் பால் மற்றும் பாய்லர் கோழியை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் மலச்சிக்கல் வராமல் பாதுகாக்க வேண்டும்.

இவை தவிர வேறு பல பிரச்னைகளுக்கும் இதில் தீர்வுள்ளது. தைராய்டு, சைனஸ், ஆர்த்ரைடிஸ் மற்றும் சரும பிரச்னைகளுக்கும் தீர்வுள்ளது. நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விட்டமின் சி மிகவும் உதவுகிறது. அதனால் தான் ஜுரம் மற்றும் சளிப் பிரச்னை இருந்தால் டாக்டர்கள் விட்டமின் சி மாத்திரைகளை பரிந்துரைக்கிறார்கள். விட்டமின் சி நாம் சாப்பிடும் உணவுகளில் அதிகம் உள்ளது.

சாத்துக்குடி, எலுமிச்சை, அன்னாசிப்பழம் போன்றவற்றில் அதிக அளவு விட்டமின் சி சத்துள்ளது. சளி பிடித்து இருந்தால் நாம் இந்த
உணவினை தவிர்க்காமல் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.மூட்டுகளில் காற்று தங்குவதால் மூட்டுவலி ஏற்படும். அதுதான் ஆர்த்ரைடிசிற்கு வழிவகுக்கிறது.

இதனை கீழ்வாதம்னும் சித்த மருத்துவத்தில் குறிப்பிடுவாங்க. இந்த பிரச்னைகளுக்கு கிழங்கு வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். சரும பிரச்னைகள் ரத்தத்தில் நச்சு தன்மையை அதிகரிக்கும் போது, அது சரும நோயாக வெளிப்படும். இதற்கும் இதில் தீர்வுள்ளது. அது மட்டும் இல்லாமல் 400க்கும் மேற்பட்ட பிரச்னைக்கு சித்த மருத்துவத்தில் தீர்வுள்ளது’’ என்கிறார் சித்த மருத்துவர் யோகவதி.

ரித்திகா