கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...



வாழ்வென்பது பெருங்கனவு!

சவால்களை வாய்ப்புகளாக மாற்றத் தெரிந்தால், வாழ்க்கையில் நாம் நினைத்ததை சாதித்துவிட முடியும். பிரபலமான நிறுவனமொன்றில் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் ெஹட் ஆக இருக்கும் பத்மா மணிவண்ணன் தன் வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

‘‘மனதிலுறுதி வேண்டும்
வாக்கினிலேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்.

தன்னிகரில்லா பாட்டுத்தலைவன் பாரதியின் பாடல்களில் வரும் வைர வரிகளில் உள்ளஅனைத்து இன்பங்களும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்புரிமையே என்ற எண்ணங்கள் நிறைந்த - நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு பெண் நான். அக்கா, தம்பி.. அப்பா, அம்மா என்று நாங்கள் ஐந்து பேர் அடங்கிய சிறிய குடும்பம்.

நினைவு தெரிந்த 12 வயது, என்னைச் சுற்றியுள்ள ஏற்றத்தாழ்வுகளை உற்று நோக்க வைத்தது. நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை படிக்கவேண்டும், இடம் பொருள் தெரிந்து பேச வேண்டும், பல கலைகளில் நாட்டம் இருத்தல் அவசியம் - என, அப்பா என்னுடைய பதின் பருவத்திலிருந்து கற்றுத்தரத் தொடங்கினார். நான் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் போது கர்நாடக சங்கீதம், வயலின் மற்றும் கீபோர்டு என்று பல துறைகளில் பயிற்றுவித்தார். இதையெல்லாம், தனது வருமானத்தை மீறின செலவாக அவர் சிறிதும் எண்ணவில்லை.

மாறாக ‘என் குழந்தை எதிர்காலத்தில் நிற்க நேரமில்லாத, ஒரு உயர்பதவியில் வேலை செய்யப் போகிறவள், அவளுக்கு மனஅழுத்தத்தைத் தகர்க்கக்கூடியது, இந்த இசை மட்டுமே என்பார். அவருடைய கண்களில் தெரிந்த அந்தக்கனவு, அந்த காலத்தில் பலருக்கு ‘பகல் கனவாக’கூட தோன்றியிருக்கும்.

கிடைக்காத பல வசதி வாய்ப்பை எண்ணி ஏங்கவிடாமல், கிடைத்த வாழ்க்கையை எப்படி நிறைவோடு வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார் அம்மா. எங்க வீட்டில் அம்மாவும் சரி அப்பாவும் சரி பெண்பிள்ளை என்று என்னை ஒரு போதும் பிரித்துப் பார்த்ததில்லை. எனக்கு வெளியுலகம் புரியவைத்து, நல்ல பாடல்களை ரசிப்பது எப்படி என்பதிலிருந்து எப்படி படித்தால் மனதில் படியும் என்பது வரை வாழ்க்கையை மிகவும் நுட்பமாக எடுத்துரைத்து இருவரும் வழிநடத்தினார்கள்.

எனது பள்ளிக்காலத்தில்கூட, ‘முதல் மதிப்பெண் எடுத்தால்தான் வாழ்க்கை’ என்று சராசரி பெற்றோராக இல்லாமல், ‘நீ 80 மார்க் எடுத்தாலும், அது உனக்குப் புரிந்து இருக்க வேண்டும்’ என்பார். பள்ளி காலங்களிலிருந்தே எனக்குள் இருந்த பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ள  கிடைத்த வாய்ப்புகளையும் பட்டிமன்றங்கள், தமிழ் சங்கங்கள் மற்றும் பொது மேடைகளை பயன்படுத்திக்கொண்டேன். ஒருமுறை பட்டிமன்றத்தில் (8 ஆம் வகுப்பு பயிலும்போது), ‘சிறந்த பேச்சாளர்’ என்று பாராட்டி ‘காந்தியின் பொன்மொழிகள்’ என்கிற புத்தகத்தை தென்கச்சி கோ.சுவாமிநாதன் பரிசளித்தார். இதுவே எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரமாக அமைந்தது.

இருப்பதிலேயே மிகவும் கஷ்டமானதை தேர்ந்தெடு. இஷ்டமானதை அல்ல என்ற தாரக மந்திரமே என்னை பொறியியல் துறையில் வேதியியல் படிப்பை தேர்ந்தெடுக்க வைத்தது. என்னுடைய வகுப்பில் 70 மாணவர்கள், நான் ஒரே ஒரு மாணவி!, கல்லூரி வாழ்க்கை முடிந்தபின் முதல் மூன்று வருடங்கள் - கிடைத்த தொழில்நுட்ப வேலையை விருப்பத்தோடு செய்தேன். அங்கு என் பேச்சாற்றலாலும், ஆங்கிலத்தில் பேசும் திறமையாலும், சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங்  துறையில் மூன்றே வருடத்தில் கொண்டு சேர்த்தது. இரண்டு மூன்று கம்பெனிகள் மாறிய பின் 15 ஆண்டுகளுக்கு முன் இந்த பன்னாட்டு நிறுவனத்தில் சேர்ந்தேன்.

எவ்வளவுதான் மார்டனான உலகத்தில் வாழ்ந்தாலும் இந்தியா, தமிழ்நாடு என்ற வகையில், பெண்ணாக பிறந்த அனைவரும், காலாகாலத்தில் திருமணம் முடிப்பதும், குழந்தை பெற்றுத் தாயாவதும் இன்றியமையாதது. நானும் இந்த காலகட்டத்தை மிகவும் பொறுப்புடனும், பொறுமையுடனும் கடந்து வந்தேன். குழந்தை பெற்று விட்டால், பெண்கள் அவர்களுடைய தொழில் மற்றும் வேலைவாய்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கனவுகளை மனதிற்குள் ஒளித்துவைக்க வேண்டிய முக்கியமான காலகட்டம் இது. இந்த 23 முதல் 26 வயது வரை பல பெண்களுக்கு இந்த மனப்போராட்டம் வரும். அதை லாவகமாக, உறுதியோடு கடந்து வந்தால்தான் வெற்றிப்படிக்கட்டுகளை கண்ணால் காண முடியும்.

‘சரியான நேரத்தில், சரியான முடிவெடுத்தல்’
சரியான நேரத்தில் சுலபமான முடிவெடுத்தல்’

இவை இரண்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

‘சரியான முடிவு’ என்பது தொலைநோக்கு பார்வையுடன், திறமையின் மீது நம்பிக்கை வைத்து, ஒரு தீர்க்கமான முடிவெடுப்பது. என் குழந்தையை நான் என் வாழ்வின் முன்னேற்றப்பாதையின் படிகட்டுகளில் உள்ள தடையாக நினைக்கவில்லை. மாறாக உழைத்தே ஆகவேண்டும், வாழ்ந்தே ஆகவேண்டும் என்கிற உந்துசக்தியாகவே உணர்ந்தேன்.

புராடக்ட் டிரெய்னிங் பெறுவதற்கு பல வெளிநாடுகளுக்குப் பிரயாணம் செய்தேன். மற்றும் இந்தியா முழுவதும் பிரயாணம் செய்து எங்களது புராடக்டை சேல்ஸ் செய்யும் ஒரு சேல்ஸ் எஞ்சினியராக எனது வேலை ஆரம்பித்தது. ஒன்றரை வருடமே நிரம்பிய என் சிறிய குழந்தையை பிரிந்து தான் நான் பிரயாணங்கள் மேற்கொண்டேன்.

அச்சமயம் எனது நிறுவனம் கடின உழைப்பையும், நிறுவனத்தின் முன்னேற்றத்தின் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில், பல உதவிகள் செய்தது. என் குழந்தையை கவனித்துக்கொள்ள முழு பொறுப்பேற்று உரிய பாதுகாப்பை அளித்தது. இவ்வாறாக, நான் பிரயாண அடிப்படையிலான வேலையைத் தேர்ந்தெடுத்து அதை வெற்றிகரமாக செய்து வந்தேன்.

கிடைக்கும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில்கூட ஸ்போக்கன் ஹிந்தி டியூஷன் சென்று வந்தேன். என் குழந்தையை கவனித்து, தனது வேலையையும் செவ்வனே செய்து எனக்கும் முழு ஆதரவு கொடுத்த, கொடுத்துக்கொண்டிருக்கும் என் கணவரை பாராட்டியே ஆகவேண்டும். பிரயாண அடிப்படையில் தொழில் புரியும் பெண்களுக்கு சவால்கள் கொஞ்ச நஞ்சமில்லை.

வீட்டையும் கவனித்து அலுவலகத்தையும் கவனித்து, பின் பிரயாண காலத்திற்கேற்றாற்போல வீட்டை தயார் செய்துவிட்டுத்தான் நான் ஒவ்வொரு முறையும் விமான நிலையத்தை நோக்கி ஓடுவேன். இவ்வாறாக ஓடி உழைத்து, நான் முதன் முதலில், எங்கள் சொந்த ஊரில், இன்று சொந்த வீட்டில் வாழ்கிறோம்.

சுமார் 10 வருடங்களுக்கு முன்பு என் வீட்டின் கிரஹப்பிரவேசம் செய்தபோது, என் பெற்றோரின் கண்களில் கண்ட ஆனந்தக் கண்ணீரை என்னால் ஆயுள் முழுவதும் மறக்க முடியாது! இன்று என் கம்பெனியில் ஹெட் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் பதவியில் இருக்கின்றேன். இரண்டாவது குழந்தையும் பிறந்து மூன்று வயதாகிவிட்டது. அதே போராட்டங்கள், வாழ்ந்துதானே ஆக வேண்டும்? இன்னும் நிறைவேற்ற வேண்டிய கனவுகள் ஏராளமாக உள்ளன’’ என்ற எதிர்பார்ப்புகளோடு முடித்தார் பத்மா மணிவண்ணன்.

பத்மா மணிவண்ணன்