ஆன்லையினில் பாடம் படிக்கலாம்!பள்ளி திறக்கப் போகிறது. மாணவர்கள் எல்லாரும் பள்ளிக்கு கிளம்ப ஆயத்தமாகி இருந்தாலும் மற்றொரு பக்கம் பெற்றோர்கள் அவர்களுக்கான டியூஷன் குறித்து ஆய்வு செய்ய ஆரம்பித்து இருப்பார்கள். பள்ளி முடிந்த கையோடு டியூஷன் செல்வது தான் இன்றும் பலர் கடைப்பிடித்து வருகிறார்கள். காரணம் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், வீட்டில் பாடம் சொல்லித்தர நேரமில்லை. இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம், பத்தாம் வகுப்பில் இருந்தே மாணவர்கள் போட்டி தேர்வுக்கான பயிற்சி எடுக்கும் நிலை உள்ளது.

பள்ளிப் பாடங்களுக்கு ஒரு பக்கம் டியூஷன், இது போன்ற தனிப்பட்ட போட்டி தேர்வுக்கான பயிற்சி என மாணவர்கள் ஸ்ட்ரெசுக்கு  ஆளாகிறார்கள். இனி இந்த ஸ்ட்ரெசுக்கு அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் டியூஷன்களுக்காக ஆப்கள் வந்துவிட்டது. இந்த ஆப் மூலம் ஆன்லைனிலேயே நாம் டியூஷன் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பாடம் சொல்லித் தருவது மட்டும் இல்லாமல், சந்தேகங்களையும் உடனுக்குடன் தீர்த்து வைக்கிறார்கள்.

அபிசியல் அன்அகாடமி ஆப்

இந்தியாவில் வகுப்பறை கல்வி பல புத்திசாலி மாணவர்களை உருவாக்கியுள்ளது. அன்அகாடமி ஆப் இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் கற்றல் தளம். இதில் இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியாகவும் தற்போது புதுச்சேரியின் ஆளுநராக இருக்கும் கிரண் பேடி உட்பட பல திறமையான கல்வியாளர்கள் உள்ளனர்.

நாட்டில் தொலைதூரத்தில் வாழும் மாணவர்களும் இந்த ஆப் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பயிற்சி பெற முடியும். 1000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் பேச்சு திறமை மற்றும் அறிவு திறனை இந்த ஆப் மூலம் மேம்படுத்தப்பட்டு பல கடினமான தேர்வுகளையும் எழுதுவதற்கு பயிற்சி பெற முடியும்.

ஆங்கிலம் மட்டும் இல்லாமல் பலதரப்பட்ட மொழிகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. உலகளவில் திறனை வளர்த்துக் கொள்வதற்காக வகுப்பறையில் சொல்லித்தராத சில பாடங்களையும் இந்த ஆப் மூலம் கற்று பலன் அடையலாம். UPSC CSE/IAS, SSC CGL, IBPS/SBI, CAT, GRE,GATE/IES, CA, CLAT, JEE, Pre-Medical, Railways Examinations and for othertopics - English Language, Competitive Programming, Programming Languages,Fresher Placements, Management, Personal Finance, and Personal Development போன்ற போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த அனைத்து போட்டி தேர்வுக்கு பயிற்சி அளிக்க இந்தியாவில் இருந்து கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்கள் உள்ளனர். மேலும் இதில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பாடத்திட்டங்கள் 6500 கல்வியாளர்களால் அமைக்கப்பட்டுள்ளது.

கிளாஸ் 10 நோட்ஸ் ஆப்லைன் ஆப்

சி.பி.எஸ்.இ மற்றும் என்.சி.இ.ஆர்.டி பத்தாம் வகுப்பு பாட புத்தகங்கள் இதில் உள்ளன. பத்தாம் வகுப்பின் கணிதம், அறிவியல், சமூகவியல். பொருளாதாரம், லிட்ரசெர், டெமோகிராட்டிக்.... போன்ற அனைத்து பாடப்புத்தகங்களும் இந்த ஆப்பில் உள்ளன. இந்த பாடப்புத்தகங்கள் படிப்பதற்கு இன்டர்நெட் வசதி தேவையில்லை. அனைத்தும் பி.டி.எஃப் முறையில் இருப்பதால், படிப்பதற்கு எளிது.

மேலும் இதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து உங்களின் நண்பர்களுக்கும் உதவி செய்யலாம். இந்த ஆப்பில் உள்ள பாடத்திட்டங்கள் பள்ளி தேர்வு மற்றும் பொது தேர்வுக்கு ஏற்ப இருப்பதால் படிப்பதன் மூலம் இந்த தேர்வினை மிகவும் எளிதாகவும் தைரியமாகவும் எதிர் கொள்ள முடியும்.

டியூஷன் மாஸ்டர்

எல்லாருக்கும் தங்களின் குழந்தைகளுக்கு சிறந்த ஆசிரியர் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்கு வழிவகுக்கிறது டியூஷன் மாஸ்டர் ஆப். இந்த ஆப் மூலம் உலகில் உள்ள திறமையான ஆசிரியர்கள் எல்லாரையும் தொடர்பு கொள்ள முடியும்.

இந்த ஆப் மூலம் நேரடியாக பெற்றோர்களுக்கு பயிற்சி குறித்த அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்படும். அதாவது எப்போது பயிற்சி ஆரம்பிக்கப்படும், எப்போது முடிவு பெறும் என்று ஆசிரியர் நேரடியாகவே உங்களுடன் தொடர்பு கொள்வார்கள். அது மட்டும் இல்லாமல் பயிற்சி நேரம் மாற்றப்பட்டு இருந்தாலும் அல்லது சிறப்பு பயிற்சி அளிக்கப்டுவதாக இருந்தாலும் அவற்றை ஆசிரியர் தெரியப்படுத்துவார்.  ஆசிரியர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட முறையில் டியூஷன் எடுப்பது வழக்கம். அதை அவர்கள் இனி இணையம் மூலம் செய்யலாம். அதற்கு முதலில் உங்களின் பெயரை டியூஷன் மாஸ்டர் ஆப்பில் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் 1000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பற்றி விவரங்கள் உங்களுக்கு பட்டியல் இடப்படும்.

அதன் பிறகு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க துவங்கலாம். பயிற்சி அளிக்க ஆரம்பித்த பிறகு உடனடியாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பயிற்சி குறித்த விவரங்களை தெரியப்படுத்தலாம். இந்த ஆப் மூலம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவருக்கும் எப்போது படிக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளலாம். இதன் மூலம் மாணவர்கள் தேவையற்ற இணையதளத்தில் தங்களை இணைத்துக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

க்ரியோ ஆப்

க்ரியோ இந்தியாவின் மிகவும் தரமான டியூஷன் ஆப். இந்த ஆப் மூலம் கல்வியாளர்களை எந்த ஒரு பிரச்னை மற்றும் தொந்தரவு இல்லாமல் தேர்வு செய்யலாம். காரணம் ஒரு விரல் அழுத்தத்தினால் நாம் விரும்பும் கல்வியாளர்களை கண்டறிய முடியும். இதில் பள்ளி பாடங்களுக்கான டியூஷன், போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் மற்றும் தேர்வுகள், வீட்டில் இருந்தபடியே யோகாசனத்திற்கான பயிற்சி முறைகள், இசைப் பயிற்சி, நடன பயிற்சி, ஆர்ட் அண்ட் கிராஃப்ட் மற்றும் மொழிகளுக்கான பயிற்சியும் உள்ளது.

அனைத்து பாடங்கள் மற்றும் வகுப்புக்கான பள்ளிப்பாடங்களுக்கான டியூஷன் உள்ளது. அதே போல் உங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ஜும்பா, யோகாசனம், தற்காப்பு கலைகளையும் ஆன்லைனில் கற்றுக் கொள்ள முடியும். இசை, கலை மற்றும் கைவினை பொருட்களுக்கான பயிற்சியுடன் வாழ்க்கை திறன்களையும் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் இந்த ஆப்பினை உங்கள் கைபேசியில் தரவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்கள் தேவைகளை பதிவு செய்ய வேண்டும். அடுத்த நிமிடமே உங்களுக்கான குருவினை ஆப் தேர்வு செய்து தரும். அதன் பிறகு கல்வியாளர் பற்றிய குறிப்புகள் மற்றும் அவரின் அறிவுத்திறன் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும். அவரின் திறமை மேல் நம்பிக்கை இருந்தால் டியூஷன் கட்டணத்தை செலுத்தி உடனடியாக பயிற்சி பெறலாம்.

தேவைப்பட்டால் உங்களின் கல்வியாளரையும் நாம் மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. ஒவ்வொரு துறைக்கு ஏற்ப கல்வியாளர்கள் இருப்பதால், நாம் விரும்பும் துறைக்கு ஏற்ப தேர்வு செய்வது மிகவும் எளிது. மேலும் உங்களின் வசதியான நேரத்திற்கு ஏற்ப டியூஷன் நேரத்தை அமைத்துக் கொள்ளலாம். தற்போது பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. கூடியவிரைவில் மற்ற மாநிலங்களிலும் செயல்படும்.

டிஜிட்டல் டீச்சர் ஆப்

டிஜிட்டல் டீச்சர் ஆப், இந்தியாவின் மிகச் சிறந்த ஈ&லெர்னிங் நிறுவனமான கோட் அண்ட் பிக்செல் இன்டராக்டிவ் டெக்னாலஜி நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. இதனை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் 2013ம் ஆண்டு முதல் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஆப்பில் அனைத்து பாடத்திட்டங்களின் விளக்கங்கள் 3டி மற்றும் 2டி முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அனிமேஷன் முறையில் படிக்கும் போது பாடங்கள் மாணவர்கள் மனதில் எளிதாக பதிவது மட்டும் இல்லாமல், அவர்களின் விருப்பத்தினை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் அதனை எளிதில் மனதில் பதிய வைக்கவும்
உதவுகிறது.

இதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. அதாவது இதில் அமைக்கப்பட்டு இருக்கும் பாடங்களை படிப்பதன் மூலம் நமக்கு எளிதாக புரியும் மற்றும் ஆழ்மனசில் பதியும். 1000த்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த ஆப் ஒரு வீட்டு டியூஷன் போலவே செயல்படுவதால் மாணவர்கள் பாடங்களை எளிதாக புரிந்து கொள்ள உதவுகிறது.

கடினமான பாடங்களை கூட கிராபிக்ஸ் முறையில் சொல்லித்தருவதால் எளிதில் மனதில் பதியும். ஒரே ஆசிரியரால் பல பாடங்களை சொல்லித் தர இயலாது என்பதால் தேவையான பாடங்களுக்கு ஏற்ப அந்தந்த துறையை சார்ந்த வல்லுனர்களை நாம் தேர்வு செய்யலாம். பள்ளியில் சாக்பீஸ் கொண்டு நடத்தப்படும் பாடங்கள் அனைத்தும் அனிமேஷன் மற்றும் வீடியோ முறையில் சொல்லித்தரப்படுவதால் தெளிவாக
புரியும் படி இருக்கும்.

உங்கள் குழந்தைகள் எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்தும் நாம் விரும்பும் பாடங்கள் குறித்த சந்தேகங்கள் மற்றும் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். குறைந்த நேரம் இந்த ஆப் மூலம் பயிற்சியினை குறைந்த நேரத்தில் மாணவர்களுக்கு அளித்தாலும் அவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பதற்கு இவர்கள் கியாரன்டி. வகுப்பறையில் 25 மாணவர்கள் இருந்தாலும் இதில் ஒரு பேட்சுக்கு 10 முதல் 20 மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கிறார்கள். மாதம் 200 ரூபாய் என ஐந்து பாடங்களுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள்.

தமிழ்நாடு சமச்சீர் டெக்ஸ்ட்புக்ஸ் ஆப்

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக இந்த ஆப்பினை பிரத்யேகமாக தயாரித்துள்ளனர். இந்த ஆப்பில் ஒவ்வொரு வகுப்பின் மேம்படுத்தப்பட்ட புதிய பாட புத்தகங்கள் மற்றும் கேள்வித்தாள்கள் உள்ளன. 2018 மற்றும் 2019ம் ஆண்டின் தமிழ் மற்றும் ஆங்கில வழி பாட புத்தகங்கள் இதில் உள்ளன. பாடபுத்தகங்கள் மட்டும் இல்லாமல் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும் மற்றும் கேள்வித்தாள்களும் உள்ளன.

மேலும் இதனை எளிய முறையில் மாணவர்கள் படிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் முதலாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்கள் உள்ளன. புத்தகங்களை அந்தந்த வகுப்பிற்கு ஏற்ப தரவிறக்கம் செய்யும் வசதியும் உள்ளது. சிவில் சர்வீஸ், டி.என்.பி.எஸ்.சி மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

கார்த்திக் ஷண்முகம்