எங்களின் எண் 78‘பிறப்பால் எல்லா மனிதர்களும் சமம்’
- ஆபிரகாம் லிங்கன்

பொதுவான ஆணாதிக்க அரசியல் கட்டமைப்புக்குள்  நடத்தப்படும் ஏனைய பிரச்னைகளுக்குள் எவ்வாறு பெண்கள் பெரும்பாலும் அடக்கப்படுகிறார்கள். புனிதங்களின் பெயரால் அவை எப்படி நியாயப்படுத்தப்படுகிறது. இந்த ஒடுக்குமுறைகள் எவ்வாறு திட்டமிட்டு நிறுவப்படுகின்றன.
இதனை எதிர்க்க முடியாதபடி அரசு இயந்திரம் எப்படி அடக்குமுறைக்கு தயார்படுத்தப்படுகிறது, விடுதலையின் பெயராலும், தாய்நாட்டின் விடிவின் பெயராலும், இனத்துவத்தின் பெயராலும், இவை எல்லாம் தவிர்க்கமுடியாது என்பது எப்படி நம்பவைக்கப்படுகிறது என்பது இன்றைய காலகட்டத்தில் இந்திய அரசியல் சூழலில் அவசியமானவை.

இந்தியாவில் நடந்து முடிந்திருக்கும் 17வது மக்களவைத் தேர்தல் திருவிழாவில் மீண்டும் பரிவட்டம் கட்டுகிறது பாஜக அரசு. முதன் முறையாக அதிக பெண் எம்.பி- க்கள் மக்களவைக்கு செல்வது வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. இந்த 78 பெண் எம்.பி-க்கள் தேர்வாகியிருப்பதை பார்ப்பதற்கு முன், நூறு வருடங்களுக்கு முந்தைய சூழலில் இந்தியாவில் பெண்களின் வாக்களிக்கும் உரிமை எப்படி இருந்தது என்பதை பார்த்துவிட்டு வரலாம்.

அமெரிக்கா, தனது நாட்டின் பெண் பிரஜைகளுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கு 144 ஆண்டுகளையும், பிரிட்டன் அதற்கு ஒரு நூற்றாண்டு காலத்தையும் எடுத்துக் கொண்டன. ஆனால் இந்தியா குடியரசாக மலர்ந்தபோதே, இந்தியப் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்துவிட்டது.

காலனித்துவ ஆட்சி காலத்தில் பெண்கள் வாக்குரிமைக்குத் தெரிவித்த எதிர்ப்பைப் பற்றி, ‘How India Became Democratic:Citizenship and the Making of the Universal Franchise: என்ற புத்தகத்தில், “அனைவருக்கும் வாக்குரிமை கொடுப்பது ‘இந்தியாவிற்கு சரிவராது’ என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் வாதிட்டனர். இந்தியப் பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கும் கருத்துக்கு மகாத்மா காந்தியும் முதலில் ஆதரவளிக்கவில்லை. ‘காலனித்துவ ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஆண்களுக்கு பெண்கள் உதவ வேண்டும்’ என்றே அவர் கருதினார்” என்று குறிப்பிட்டிருக்கிறார் முனைவர் ஷானி.

பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவதற்கான கடினமான போராட்டத்தை முன்னெடுத்த இந்தியப் பெண்கள் அமைப்புகளின் பங்கு குறிப்பிடத்தக்கது என்கிறார் வரலாற்றாசிரியர் கெரால்டின் ஃபோர்ப்ஸ்.1921 ஆம் ஆண்டு பம்பாய், மதராஸ் மாகாணங்களில் குறிப்பிட்ட அளவிலான பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை முதன்முறையாக வழங்கப்பட்டது. பின்னர், 1923 -1930 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ஏழு மாகாணங்களை சேர்ந்த பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டது.

இந்தியாவின் இறுதி காலனித்துவ சட்டமான, 1935 ஆம் ஆண்டில் இந்திய அரசின் சட்டத்தின் கீழ், நாட்டின் மூன்று கோடி மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு என்பதும், இதில் பெண்களின் எண்ணிக்கை சொற்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தியாவில் மக்களாட்சி மலர்ந்தபோது, இந்திய மக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை கொடுக்கலாம், அதாவது நாட்டை ஆள்பவர்களை மக்களே தேர்ந்தெடுக்கலாம் என்று நிலைமை தலைகீழாக மாறின.

வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணி 1947 நவம்பர் மாதத்தில் தொடங்கியது. 1950 ஆம் ஆண்டில், இந்தியா தனது சொந்த அரசியலமைப்பை உருவாக்கியபோது, அனைவருக்கும் வாக்குரிமை என்பதும், தேர்தல் ஜனநாயகத்தின் கருத்துக்களும் உறுதியாக நிறுவப்பட்டன. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்த காலனித்துவ கொள்கைகளிலிருந்து மாறுபட்டு, பெண்கள் சுயாதீன வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது. அதன் படி 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் பெண்கள் வாக்களித்ததோடு, 24 பெண் எம்.பி-க்களும் தேர்வாகினர்.

பெண்களின் உரிமைகளுக்கான போராட்டம் இன்றும் தொடர்கிறது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு மசோதாவுக்கு எழும் வலுவான எதிர்ப்புகளின் காரணமாக 1966 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை அது முடங்கிப் போயிருக்கிறது. தற்போது தேர்தல்களில் வாக்களிக்க அதிகமான பெண்கள் முன்வருகின்றனர், நிலைமை மாறிவிட்டது. ஆனால் தேர்தலில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட பின்பும் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடுவது அந்த அளவுக்கு வளர்ச்சி அடையவேயில்லை. அரசியலில் பெண்களின் குரல் ஒலிப்பதிலிருந்து வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவது வரை பின் தங்கியே உள்ளது.

இது வரையிலான மக்களவைத் தேர்தலில் பெண்கள் கணிசமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அதில் வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றமில்லை. ஆனால், நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் ஆண்களை விடப் பெண்கள் அதிகமாக வாக்களித்திருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. அதே சமயம் கட்சிகள் நிறுத்திய பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையோ தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பி-க்களின் எண்ணிக்கையோ வளர்ச்சியடையவில்லை.

கட்சிகள் பெண்களின் வாக்குகளை இழுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. காரணம் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த ஆண்களின் எண்ணிக்கையில் 97.2% உள்ளது. உதாரணமாக பாஜக-வின் “Save the Girl Child, Educate the Girl Child’’ திட்டத்தைக் குறிப்பிடலாம். இதே போன்ற எல்லா கட்சிகளும் தங்களுக்கோர் திட்டம் வைத்துள்ளனர்.

பெண்கள் குறிவைக்கும் திட்டங்கள் எல்லாமே அவர்களின் வாக்குகளைக் குறிவைப்பதோடு முடிந்துவிடுகிறது. பெண் வேட்பாளர்களை நிறுத்துவதும், அமைச்சரவையில் இடம் ஒதுக்குவதும் சம்பிரதாயத்திற்காகவே என்பது கடந்த கால நிகழ்வுகளுக்கான சான்று. இதுவரை அமைச்சரவையில் அங்கம் வகித்த பெண் எம்.பி-க்களின் குரல் சுதந்திரமாக ஒலித்திருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. குடும்பத்தில் எப்படி, ஒரு பெண் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை ஆணால் தீர்மானிக்கப்படுகிறதோ, அதேபோல்தான் ஒரு பெண் எம்.பி என்ன பேச வேண்டும் என்பதையும் கட்சியின் தலைமை தீர்மானிக்கிறது.

நடந்து முடிந்த 17ஆவது மக்களவை தேர்தல் 716 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டதில் 78 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது 542 தொகுதிகளில் 14% ஆகும். சென்ற முறை போட்டியிட்டவர்களில் சோனியா காந்தி, கிரண் கெர், ஹேமமாலினி ஆகியோர் மீண்டும் தேர்வாகியுள்ளனர். நட்சத்திர எம்.பி-க்களாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அமேதியில் தோற்கடித்த ஸ்மிருதி இரானியும், போபாலில் முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங்கை தோற்கடித்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிறைத் தண்டனை பெற்ற பிரக்யாவும் உள்ளனர்.

இத்தேர்தலில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திலிருந்து 104 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிராவும், தமிழகமும், மூன்றாவது இடத்தில் பீகாரும், மேற்கு வங்கமும் உள்ளன. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கத்திலிருந்து அதிகபட்சமாக தலா 11 பெண் வேட்பாளர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலங்களைத் தொடர்ந்து ஒடிசா மாநிலத்தின் பிஜூ ஜனதா தள கட்சியின் சார்பில் 6 பெண் வேட்பாளர்கள் தேர்வு பெற்றுள்ளனர். பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட 47 வேட்பாளர்களில் 34 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாகப் போட்டியிட்ட கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளார்கள். காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி வெற்றிபெற்றுள்ளார்.

கேரளாவிலிருந்து கடும் போட்டிகளிடையே ரம்யா ஹரிதாஸ் என்பவர் காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் களமிறக்கிய 24 பேரில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் சுயேச்சையாக போட்டியிட்ட 222 வேட்பாளர்களில், கர்நாடகாவில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட நடிகை சுமலதா அம்பரீஷ் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று கால மாற்றத்தின் காரணமாகப் பல பெண்கள் கல்வி, வேலை வாய்ப்புகள், தேர்தலில் வாக்களித்துக் கடமை யாற்றினாலும் அவை அனைத்திலுமே அதிகாரம் படைத்தவர்களாக ஆண்களே இருக்கிறார்கள். இவையெல்லாம் மீறித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 14% பெண்
எம்.பி-க்கள் மீதமுள்ள 19% இட ஒதுக் கீட்டைச் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் எப்போது, எப்படிப் பெறப் போகிறார்கள் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

முதன் முறையாக அதிக எண்ணிக்கையில் பெண் எம்.பி-க்கள் மக்களவைக்கு செல்வது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், இவர்கள் கட்சிகளின் பிரதிநிதிகளாக மட்டும் இருக்கப் போகிறார்களா அல்லது ஒட்டு மொத்த பெண்களின் பிரதிநிதிகளாக இருக்கப் போகிறார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அன்னம் அரசு