பெண்ணே உன் பிறப்பே சிறப்பு!திரைப்படக் கலையை ஒரு சமூகப் பண்பாட்டு அரசியல் நடவடிக்கையாக மேற்கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு, “முடியும்” என்று தீர்மானமாக சொல்கிற நம்பிக்கையைத் தந்திருக்கிறது டிஜிட்டல் தொழில்நுட்பம். மிக மலிவாக கிடைக்கும் ஒலி,  ஒளிப்பதிவுக் கருவிகள், கை கணினிகளுக்கு வந்துவிட்ட படத்தொகுப்பு மென்பொருட்கள், டி.வி.டி விநியோக முறை என்று வணிக முதலாளிகளிடமிருந்து சினிமாவை சாமானியனின் கைகளுக்கு மெல்ல கடத்துகிறது அதிவேக தொழில்நுட்ப மாற்றங்கள்.
ஒரு காகிதத்தைப் போல , எழுதுகோலைப் போல சினிமா தொழில் நுட்பத்தை எளிதாக்கிவிட்டதால், ஒவ்வொருவரும் படமெடுக்கும் சமூக நீதியை டிஜிட்டல் புரட்சி சாத்தியமாக்கியிருக்கிறது.

திரைப்படப் படைப்பாற்றலைப் பொறுத்தவரை, கதைப்படங்களை விட ஆவணப்படங்கள், குறும்படங்கள் அதிக சுதந்திரமானவை. வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு இடங்களில் நிகழும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை இணைக்க புதிய வடிவங்கள் பயன்படுத்த முடியும். ஆவணப்படத்தில் பதியப் பெறும் ஒரு நடப்பு நிகழ்ச்சி எதிர்காலத்தில் வரலாற்று ஆவணமாகிவிட முடியும்.

இந்த டிஜிட்டல் யுகத்தை பயன்படுத்தி இளைய தலைமுறை படைப்பாளிகள் சிலர், இச்சமூகம் மீதுள்ள கோபங்கள், கேள்விகள், நன்மை, தீமைகள்… என தங்களது படைப்பின் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில், பெண்ணுக்கு ஏற்படும் மாதவிடாய் ஆணும் அனுபவிக்கும் போது எந்த மாதிரியான உணர்வுகளுக்கு ஆளாகிறான் என்கிற மையக்கருவை வைத்து வெளியாகியிருக்கும் குறும்படம் ‘மாதவி’. இக்குறும்படத்தில், கவிஞர் உமா சுப்பிரமணியன் வரிகளில் ‘இறைவி’ என்ற ஆல்பம் பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடலோடு, படத்திற்கான பின்னணி  இசையமைத்திருக்கிறார் ஸ்டெர்லின் நித்யா.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மாணவியான ஸ்டெர்லின், திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், தனிப்பாடல் ஆல்பங்கள் என இசையமைத்து வருவதோடு, இசைப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். தனக்கு இசையின் மீது ஆர்வம் வந்தது பற்றி கூறும் ஸ்டெர்லின், ”பள்ளிப்படிப்பை விட இசை கற்றுக் கொள்ளத்தான் அதிக ஆர்வம் காட்டினேன். இதற்கு உறுதுணையாக இருந்தது என் குடும்பம்.

ஒரு முறை எனது இசை ஆசிரியர், என்ைன சுயமாக ஒரு பாடல் கம்போஸ் செய்ய வைத்து அதை பள்ளி அசெம்பெலியில் பாட வைத்தது பெரிய விருது கிடைத்தது போல் உணர்ந்தேன். சர்ச்சில் பாடுவதற்கும் முந்திக் கொள்வேன். சிறு வயதிலிருந்தே எல்லா இசை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதற்கு காரணம், அப்பா ஸ்டாலினுக்கும் இசையின் மீதுள்ள ஈர்ப்புதான். ஆன்மிகப் பாடல்கள், வெஸ்டர்ன் ஆல்பம், ஸ்டேஜ் பெர்ஃபார்மன்ஸ் எனத் தன்னை அதில் ஈடுபடுத்திக் கொண்டார்.

ஊட்டியில் 12 ஆம் வகுப்பு முடித்த பின் அடுத்து என்ன படிக்க போறேன்னு வீட்டில் கேட்டாங்க. எந்த ஒரு வாய்ப்பும் கொடுக்காமல் இசைதான் படிக்க போறேன் என்று கூறியதும், கே.எம் மியூசிக் கல்லூரியில் சேர்ந்தேன்.

அங்கு படிக்கும் முதல் பெண் என்ற பெருமையோடு, ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் சார் பார்வையில் கற்றுக் கொண்டது ரெக்க கட்டி பறப்பது போல் உணர்ந்தேன். பணம் கட்ட முடியாத சூழலினால் படிப்பை பாதியில் நிறுத்தி லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்தேன். காலை கல்லூரியும், மாலை குறும்படங்களுக்கு இசையமைப்பதும் என என்னை நானே வளர்த்துக் கொண்டேன்.

கல்லூரியில் பல இசை நிகழ்ச்சிகளுக்கும், பாடல்களுக்கும் இசையமைத்ததன் மூலம் பல வாய்ப்புகள் கிடைத்தது. அது என் வாழ்நாளில் முக்கிய நிகழ்வாக அமைந்தது. ஹாலிவுட்-பாலிவுட்டில் பெரும் பட்ஜெட்டில் உருவான ‘காமசூத்ரா 3D’ படத்தின் இசையமைப்பில், ‘கோரல் அரேஞ்சர்’ (Choral arranger) வேலை பார்த்தது. இந்தப் படம் Best motion picture, Best original sound, Best background score போன்ற பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு  பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து ‘சுழியம் 07’ என்ற தமிழ்ப் படத்துக்கு இசையமைத்தேன். தொடர்ந்து பல வேலைகள் செய்து வருகிறேன்.

இதுவரைக்கும் 80 குறும்படங்கள், 20 ஆவணப்படங்கள், 4 ஆல்பங்கள், 5 தனி பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறேன். தற்போது ‘மாதவி’ குறும்படத்தில் இடம் பெற்ற ‘இறைவி’ ஆல்பம் பாடல் தனி அடையாளத்தை கொடுத்திருக்கிறது” என்று கூறும் ஸ்டெர்லினை தொடர்ந்து பேச ஆரம்பித்தார் கவிஞர் உமா சுப்பிரமணியன்.

“நான் எழுதுவதற்கு முதற் காரணம் அப்பாவின் எழுத்து. அப்பா எழுதியதைப் படிக்கும் போது எனக்கும் சில வரிகள் அதனோடு எழுத தோணும். தம்பிகளோடு வார்த்தை விளையாட்டு விளையாடுவேன். எனக்குள் விளையாட்டுத் தனமாக தொடங்கிய எழுத்தாற்றல் நாளடைவில் சிறுகதை, கவிதைகள், பாடல்கள் என தொடர்கிறது.

மனதுக்கு தோன்றியதை எழுதுவேன். குடும்பம், குழந்தைகள் என இருந்தாலும் எழுதியதை நிறுத்தவில்லை. இப்படி இருக்கும் சூழலில் எழுதியதை என்னோடு வைத்துக் கொள்ளாமல், பத்திரிகைகள், நாளிதழ்களுக்கு எனது சிறுகதைகளை அனுப்பி வைத்தேன்.

‘இது கூட தானம் தான்’ என்ற சிறுகதை தினபூமியில் வந்தது. முதல் சிறுகதை பிரசுரம் ஆன மகிழ்ச்சி, கூடவே கணவரின் அன்பும், அரவணைப்பினால் நாவல்கள்,  சிறுகதைகள், தொடர்ள், குறுந்தொடர்கள், கவிதைகள் என எழுதி வருகிறேன்” என்று கூறும் உமா சுப்பிரமணியன் இறைவி பாடல் அனுபவம் பற்றி பேசுகிறார்.

“பரத் இயக்கிய ‘மாதவி’ குறும்படத்திற்கு இசையமைப்பாளரும் பெண்ணாக இருக்க வேண்டுமென்று தேடிக் கொண்டிருந்த போது சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஸ்டெர்லின் நித்யா அறிமுகமானார். இதற்குப் பாடல் எழுதுவதற்காக என்னை அணுகினர். இங்குதான் நானும் ஸ்டெர்லினும் தோழிகளானோம்.

நித்யாவின் இசைக்கு ஏற்றவாறு, ‘இறைவி என்கிறாய், இரையாய் உண்கிறாய், என்ன நினைத்தாய் பெண்ணை’ என்று துவங்கும் என்னுடைய பாடல் வரிகள் பொருந்தியது. இந்த ஒற்றுமை நன்றாக வந்ததால் இதனையடுத்து இரு பாடல்கள் எங்கள் கூட்டணியில் உருவானது. மாதவி படக்குழு நினைத்தது போல் இந்த பாடல் மக்கள் மத்தியில் நல்ல ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது எங்களுக்கான வெற்றியாகப் பார்க்கிறோம்” என்றார் உமா சுப்பிரமணியன்.

ஆனந்தி  ஜெயராமன்

ஏ.டி.தமிழ்வாணன்