வீர தீரப் பெண்ணாக அறிமுகமான டி.வி.குமுதினி



செல்லுலாய்ட் பெண்கள்-61

1930களிலேயே தன் ஒப்பற்ற அழகாலும் முத்துப் போன்ற பளீர் பல் வரிசைச் சிரிப்பாலும் அந்தக் கால புன்னகை அரசியாக ரசிகர்களின் ஒருமித்த ஆதரவினைப் பெற்றிருந்தவர் நடிகை டி.வி.குமுதினி. 1939 ஆம் ஆண்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘மாத்ருபூமி’ திரைப்படத்தில் வீர தீரம் மிக்க பெண்ணாக கதாநாயகியாகத் திரைத்துறைக்கு அறிமுகமானவர் டி.வி.குமுதினி.
இந்தத் திரைப்படத்தைப் பற்றி 1939, ஜூலை 27 தேதியிட்ட ‘ஆனந்த விகடன்’ இதழில் படத்தின் இயக்குநர் ஹெச்.எம்.ரெட்டி இவ்வாறு விளம்பரம் செய்திருந்தார்: “பாரத புத்திரிகளின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் ஒரு ஒப்பற்ற உதாரணமாய் விளங்கும் வீர குமுதினியை ‘மாத்ருபூமி’ என்ற அற்புத சரித்திர, தமிழ் பேசும்
படத்தில் கண்டுகளியுங்கள்!

டைரக்டர் - ஹெச்.எம்.ரெட்டி

வீர குமுதினி என்று சொல்லும் அளவு அப்படத்தில் வாள் வீச்சு, குதிரைச் சவாரி, போர்க்களக் காட்சிகள் என்று குமுதினி அமர்க்களப்படுத்தியிருந்தார். ‘மாத்ரு பூமி’. வரலாறு மற்றும் புனைவு என இரண்டும் கலந்த ஒரு வரலாற்றுப் படம். இந்திய சுதந்திரத்துக்கு முன் நாட்டு விடுதலையைப் பற்றி பேசிய படமும் கூட. மௌரியர் ஆட்சிக் காலத்தில் கிரேக்க மன்னன் அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது இக்கதை நிகழ்வதாகப் படம் சொல்கிறது.

அன்னை பூமி காக்கப் போர்க்களம் புகுந்தவள்

உதயகிரி மன்னன் உக்ர சேனனின் படைவீரன் ஜெயபாலன், அவன் மனைவியே வீரப்பெண் குமுதினி. கணவன் மீது மாறாத பேரன்பும் அதே அளவு நாட்டின் மீது பற்றும் நேசமும் ஒருசேரக் கொண்டவள். ஆனால், தன் கணவன் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் ஒரு தேசத்துரோகி என்பதைப் பின்னர் அறிகிறாள். அப்போதிலிருந்து அவனை வெறுத்து ஒதுக்குகிறாள். அவளையும் நாட்டுக்குத் துரோகம் செய்ய வலியுறுத்துகிறான்.

 கணவன் எவ்வளவு வற்புறுத்தியும் அவனது துரோகச் செயலுக்கு குமுதினி அடி பணிய மறுக்கிறாள். ‘உன்னைப் போல ஒரு தேசத் துரோகிக்கு மனைவியாக இருப்பதை விடவும் விதவையாக வாழ்வதே மேல்’ என்று கழுத்திலிருக்கும் தாலியைக் கழற்றிக் கணவன் மீது வீசி விட்டு ஓடுகிறாள். மனைவியின் தேசப்பற்று ஜெயபாலனையும் சற்றே அசைத்துப் பார்க்கிறது. மீண்டும் மனைவியுடன் இணைந்து வாழ விரும்புகிறான்.

ஆயினும் நாட்டைக் காப்பதற்கான தேசப்பற்றும் கடமையும் முதன்மை என்பதால் இருவரும் இணைந்தே போர்க்களம் காண்கிறார்கள். படத்தின் உச்சக்கட்ட காட்சிகளில் தாய் நாட்டுக்காக வீரத்துடன் போரிட்டு வீர மரணமடைகிறாள் குமுதினி. நாடு விடுதலை பெறுகிறது.

மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த பொருட் செலவிலும் எடுக்கப்பட்ட இப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. தனது அறிமுகப் படத்திலேயே பேரும் புகழும் பெற்றார் கதாநாயகி. குதிரையேறி வாள் சண்டை செய்து போரிடும் காட்சியில் நடித்து, வீர தீர சாகசங்கள் மிகுந்த பெண்ணாக அறிமுகமான அந்தப் புதுமுக நடிகையின் அசல் பெயர் கல்யாணி காந்திமதி.

ஆனால், இந்தப் பெயரைச் சொன்னால் யாருக்கும் அவரைத் தெரியாது. ‘மாத்ரு பூமி’ படம் வந்த பிறகு அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயராலேயே அவர் அறியப்பட்டார். அவரும், தான் குமுதினி என்று அறியப்படுவதையே விரும்பினார். அப்போது முதல் கல்யாணி காந்திமதி நடிகை டி.வி.குமுதினி ஆனார்.

திரைப்படங்களும் பிரிக்க முடியாத தாலி சென்டிமென்ட்டும்

தமிழ்த் திரைப்படங்களும் தாலி சென்டிமென்ட்டும் தமிழும் கற்பும் போலப் பிரிக்க முடியாத பிணைக்கப்பட்ட தன்மை கொண்டவை. அடேயப்பா ! எத்தனை எத்தனை படங்கள்! பெரும்பான்மையான தமிழ் சினிமாக்களை ‘தாலியின் பெருமை’ என்ற ஒற்றைத் தலைப்புக்குள் அடக்கி விடலாம். இதையெல்லாம் மீறி ஒரு சில படங்கள் தமிழில் வெற்றி பெற்ற வரலாறுகளும் உண்டு.

மாறுபட்ட சில சிந்தனைகளை, வித்தியாசமான பெண் கதாபாத்திரங்களை உருவாக்கிய இயக்குநர் கே. பாலசந்தரின் ‘அவர்கள்’, பெண்களின் ஒருமித்த ஆதரவைப் பெற்ற படம். கதாநாயகி அனுவாக நடித்த சுஜாதா படம் நெடுக ஆக்கிரமித்துக் கொண்டதுடன், நாயகர்களை ‘அவர்கள்’ ஆக்கி ஓரம் கட்டினார். சாடிஸ்ட் கணவனின் கொடுமைகள் பொறுக்க முடியாமல், தாலியைக் கழற்றிக் கோயில் உண்டியலில் போட்டு விட்டுப் போய்க்கொண்டே இருப்பார். தாலியைப் புறக்கணித்த இது 70களின் இறுதியில் வெளியான படம்.

கே.பி.யைப் போலவே பெண்களின் ஆளுமைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து படங்களை எடுத்தவராக இயக்குநர் ஆர்.சி.சக்தியையும் சொல்லலாம். அனுராதா ரமணன் கதையை மூலக்கதையாகக் கொண்டு அவர் இயக்கிய ‘சிறை’ ஒரு தாலி புறக்கணிப்பு படம்தான். தன்னைப் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்திய வில்லன் அந்தோணி (ராஜேஷ்) யின் ஆதரவிலேயே காலத்தை ஓட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் கதாநாயகி பாகீரதி (லட்சுமி).

அந்தோணியின் மரணத்துக்குப் பின் மீண்டும் தன்னைத் தேடி வரும் கணவனைப் புறக்கணித்துத் தாலியைக் கழற்றி அந்தோணியின் வேட்டைத் துப்பாக்கி மீது வீசுகிறாள். இந்தப் படமும் பெண்களின் அமோக ஆதரவைப் பெற்று 100 நாட்கள் ஓடியது. இது 1984ல் வெளிவந்தது.

இக் கதாபாத்திரங்கள் தாலியைப் புறக்கணித்ததால் இங்கு எதுவும் தலைகீழாக மாறி விடவில்லை. இந்த இரு கதாநாயகிகளையும், அவர்கள் இருவரின் தாலிப் புறக்கணிப்பையும் பெண்களும் ஒட்டுமொத்த சமூகமும் முழு மனதுடன் ஏற்கவே செய்தார்கள். தீர்வுக்கான காரணங்கள் வலுவாக இருந்தால் மக்கள் அதனை ஏற்கவே செய்வார்கள்.

இந்த இரு படங்களுக்கும் முன்னோடியாக 1939லேயே ’மாத்ருபூமி’ வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் தாலிப் புறக்கணிப்பையும் அப்போதைய மக்கள் ஏற்கத்தான் செய்தார்கள் என்பதைத் திரை வரலாறு நமக்கு ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது.

சேர நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்கு….

திருவனந்தபுரம் அருகேயுள்ள ஆற்றிங்கல் என்ற கிராமத்தில் 1916 ஆம் ஆண்டில் பிறந்தவர் இவர். பெற்றோர் வைத்த பெயர் கல்யாணி காந்திமதி. ‘மாத்ருபூமி’ திரைப்படத்துக்குப் பின் இந்தப் பெயர் அவருக்கு நிலைக்கவில்லை. மிகச் சிறு வயதிலேயே கர்நாடக சங்கீதம் இவர் வசப்பட்டுப் போனது. இவருக்கு இசையில் பாடம் சொல்லிக் கொடுத்துப் பயிற்சியளித்தவர்கள் இருவர்.

ஒருவர் திருவனந்தபுரம் அனந்த பாகவதர்; மற்றவர் அப்பாச்சி பாகவதர். இவர்கள் அளித்த பயிற்சியால் இசையில் நல்ல தேர்ச்சி பெற்ற பின், பத்மநாப சுவாமி கோயிலில் இசை அரங்கேற்றம் இனிதே நிகழ்ந்தது. இந்தச் சின்னஞ்சிறு குழந்தையின் சிங்காரக்குரல் கேட்ட திருவாங்கூர் மன்னர் தங்கப் பதக்கம் பரிசாக அளித்துப் பாராட்டியிருக்கிறார்.

மேற்கொண்டும் இசையின் பரிமாணங்களைத் தங்கள் குழந்தை கற்றுத் தேற வேண்டும் என்ற ஆவலில் குடும்பம் சேர நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்குக் குடிபெயர்ந்தது. அதன் பின் தொடர்ச்சியாக மதுரை வாசம்தான். இசையிலும் நல்ல தேர்ச்சி பெறுகிறார் கல்யாணி. அக்கால வழக்கப்படி மிக இளம் வயதிலேயே திருமணமும் நடந்தேறுகிறது.

இசை பெற்றுத் தந்த நட்பும் திரை வாய்ப்பும்

கல்யாணியின் கச்சேரிகளையும் பாடல்களையும் கேட்டுக் கிறங்கிய பலரில் நடிகர் டி.ஆர். மகாலிங்கமும் ஒருவர். அவரும் அப்போது மடங்களிலும் கோயில்களிலும் பஜனைகள் பாடிக்கொண்டிருந்த பதின்ம வயது சிறுவன். பாய்ஸ் நாடகக் கம்பெனிகளில் சேர்ந்து எஸ்.ஜி.கிட்டப்பா இல்லாத குறையைப் போக்குபவராகவும் அவரது வாரிசு என்றும் சொல்லும் அளவுக்குத் தன் நடிப்பாலும் இசையாலும் புகழ் பெற்றிருந்தார். 13 வயதில் ’நந்தகுமார்’ திரைப்படத்தில்  நடிக்கும் வாய்ப்பையும் அவரது குரல் வளம் அவருக்குப் பெற்றுத் தந்தது.

திரைப்படங்களில் நடித்தபோதும் நாடகங்களையும் விடாமல் தொடர்ந்தார் டி.ஆர்.மகாலிங்கம். கல்யாணியையும் டி.ஆர்.மகாலிங்கத்தையும் நட்பு ரீதியாக ஒருங்கிணைத்ததில் இசைக்கு பெரும் பங்கிருந்தது. கல்யாணி திரைப்படங்களில் நடிக்க வந்ததன் பின்னணியில் டி.ஆர்.மகாலிங்கமும் ஒரு காரணியாக, கிரியா ஊக்கியாக இருந்திருக்கிறார்.

பிரபல தயாரிப்பாளர் அழகப்பச் செட்டியார், பிரபல இயக்குநர் ஹெச்.எம்.ரெட்டி இருவரும் தாங்கள் உருவாக்க இருந்த மிகப் பிரம்மாண்டமான திரைப்படத்தின் நாயகி வேடத்துக்கு இந்தப் பெண் பொருத்தமாக இருப்பார் என்பதால், மதுரைக்கு வந்து நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆனால், கல்யாணிக்குத் திருமணமாகி இருந்ததால் திரைப்படத்தில் நடிப்பதற்கு மிகுந்த தயக்கம் காட்டினார். கணவரின் உற்சாகமான ஆதரவான பேச்சு மற்றும் ஆறுதல் மொழிகளால் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். ‘மாத்ருபூமி’ படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமும் செய்யப்பட்டார்.

படத்துக்காக வாள் பயிற்சி, குதிரையேற்றம் அனைத்தையும் இவருக்குக் கற்றுத் தந்தவர் நாராயணன் நாயர். அந்தக் காலத்தில் டூப் நடிகைகள் என்று யாரும் இல்லாததால் கதாநாயகியே அனைத்தையும் செய்ய வேண்டியிருந்தது.

படத்தில் கல்யாணி சவாரி செய்த குதிரையும் கூட சாதாரணக் குதிரையல்ல, மிகப் பெரிய இடத்துக் குதிரை என்பது கூடுதல் சுவாரஸ்யம். ஆம் ! ஆற்காடு நவாப்புக்குச் சொந்தமான குதிரையாம் அது. இவ்வளவையும் ஒரு திரைப்படத்துக்காகக் கற்றுத் தேர்ந்து சகலகலாவல்லியானவர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் எதிர்பார்ப்பைச் சற்றும் வீணாக்காமல் அதிரடியாக நடித்துப் பிரமாதப்படுத்தி விட்டார்.

நாயகியை இரண்டாம் நிலைக்குத் தள்ளிய சிற்றன்னை

குமுதினியின் இரண்டாவது படம் அப்போதைய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதருடன் இணைந்து நடித்த ‘அசோக் குமார்’. இது 1941ல் வெளிவந்தது. பாடி நடிக்கும் நடிகையான அவர் பாகவதருடன் இணைந்து நடித்தது மிகப் பொருத்தமே. பொருந்தாக் காமம் என்ற நிலையில் முறை பிறழ்ந்த காதலுடன் படத்தின் கதை நகர்ந்தாலும், பாகவதரின் இனிய குரலில் அமைந்த பாடல்கள் அத்தனையும் தேன்.

பாகவதரின் இணையாக காஞ்சன மாலாவாக நடித்து சோகத்தைப் பிழிந்து தந்தார். துயரம் தோய்ந்த கண்களும், அப்பாவித்தனமான முகத் தோற்றமும் குமுதினிக்கு மிகப் பொருத்தமாய் அமைந்தன. அரண்மனை வாழ்வைத் துறந்து, கண்கள் குருடாக்கப்பட்ட கணவன் குணாளனுடன் நாடோடியாக ஊர் ஊராய்த் திரிந்து, பிச்சை எடுத்து உண்ணும் நிலைக்கு ஆளாகி, பெற்ற குழந்தையைக் காலனுக்கு பலி கொடுத்துப் படம் பார்த்த ரசிகர்கள் அனைவரையும் கண்ணீர்க் கடலில் மிதக்க வைத்தார்.

ஆனால், இவ்வளவு சிரமங்களை அனுபவித்து நடித்தபோதும், சிற்றன்னையாக மகன் மீதே காதல் கொள்ளும் காமாந்தகாரப் பெண்ணாக நடித்த கண்ணாம்பா, குமுதினியின் நடிப்பை ஓவர்டேக் செய்து எங்கேயோ உச்சத்துக்குப் போய் விட்டார். அவ்வளவு வலுவான கதாபாத்திரமாக அது அமைந்திருந்ததால், படம் முழுமையும் கண்ணாம்பாவே நீக்கமற நிறைந்திருந்தார். அதனாலென்ன? படம் மிகப் பிரமாதமாக ஓடி, பாகவதரின் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி குமுதினிக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்து விட்டது. ‘உள்ளம் கவரும் என் பாவாய்…’ என்றொரு அருமையான பாடலை, குமுதினியைப் பார்த்துப் பாடுவார் பாகவதர்.

மக்கள் பார்வைக்கு வராமல் பெட்டிக்குள் பதுங்கிய ‘சாயா’

அடுத்து ‘சாயா’ என்றொரு படம். 1941ல் தயாரான இப்படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் எம்.ஜி.ஆர். இந்தப் படத்துக்கு முன்னர் பெரும்பாலும் சிறு சிறு பாத்திரங்கள் மற்றும் இரண்டாம் கட்ட வேடங்களையே ஏற்று வந்த அவர், இப்படத்தில்தான் முதன்மைக் கதாநாயகன் என்ற நிலையை நோக்கி ஓரடி முன் நகர்ந்தார்.

அவருடன் இணைந்து நாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமானவர் குமுதினி. ஆனால், இப்படம் வெளியாகவே இல்லை என்பது பெரும் சோகம்; பலரின் கூட்டு முயற்சியிலும் உழைப்பிலும் உருவாகும் ஒரு திரைப்படம் பொது மக்களின் பார்வைக்கே வராமல் பெட்டிக்குள் முடங்கிப் போவது யாருக்கும் ஜீரணிக்க இயலாத ஒன்று. என்றாலும் இந்தப் படம் உருவான பின்னணியும் அது குறித்த செய்திகளும் சுவாரசியம் மிக்கவை.

ஷேக்ஸ்பியர் எழுதிய அதிகம் அறியப்படாத நாடகங்களுள் ஒன்று ‘சிம்பலின்’. இந்நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழில் இதை நாடகமாக எழுதியவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். இக்கதையைத் திரைப்படமாக்க வேண்டும் என்று பெரும் முயற்சி எடுத்தவர் நாராயணன் & கம்பெனியின் உரிமையாளரும் தயாரிப்பாளருமான கே.எஸ்.நாராயண அய்யங்கார்.

இவருடைய வலதுகரம் என அறியப்பட்டவரும், அவருடைய மானேஜருமான கே.பி.வரதாச்சாரி இந்த நாடகத்தை அடிப்படையாக வைத்து ‘சாயா’ என்ற பெயரில் திரைப்படத்துக்கான திரைக்கதையை எழுதினார். இந்திப் படத் தயாரிப்பாளரான நந்தலால் ஜஸ்வந்த் லால் இப்படத்தை  இயக்குவது என்று முடிவாயிற்று.  

மவுண்ட் ரோட்டிலுள்ள தாமஸ் மன்றோ சிலையைச் சுற்றியுள்ள பகுதிகளில், மிகச் சரியாகச் சொல்வதென்றால் இப்போதைய தீவுத்திடல். எம்.ஜி.ஆர் - குமுதினி இருவரும் குதிரை சவாரி செய்தவாறே நடிக்கும் காட்சிகள் முதலில் இங்கு படமாக்கப்பட்டன. கதாநாயகன் எம்.ஜி.ஆரின் நடிப்பு ஏனோ இயக்குநரைக் கவரவில்லை. அதனால் கதாநாயகனை மாற்றி விடும்படி தயாரிப்பாளரைக் கேட்டுக் கொண்டார்.

ஆனால், இயக்குநரின் கோரிக்கையைத் தயாரிப்பாளர் ஏற்கத் தயாராக இல்லை. வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகரின் வாழ்க்கையும் எதிர்காலமும் பாதியில் படத்திலிருந்து கழற்றி விடுவதால் பாழாகுமே என்ற நல்லெண்ணமும் அதற்குக் காரணம். ஆனால், கதாநாயகனை மாற்றியே தீர வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்ற இயக்குநரின் பிடிவாதமே இறுதியில் வென்றது. பி.யு.சின்னப்பாவை கதாநாயகனாக்கி படம் எடுத்து முடிக்கப்பட்டது. படத்துக்கான விளம்பரங்களும் வெளியாயின.

ஆனாலும் படம் மட்டும் ஏனோ திரைக்கு வராமல் நிரந்தரமாகப் பெட்டிக்குள் முடங்கிப் போனது. இதில் கதாநாயகி குமுதினி, கதாநாயகன் பி.யு.சின்னப்பா, தயாரிப்பாளர் நாராயணன் என அனைவருமே நஷ்டப்பட்டவர்கள் என்றாலும், படத்திலிருந்து முதலில் விலக்கப்பட்ட முன்னாள் கதாநாயகன் எம்.ஜி.ஆர், தான் மிக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டார்.

‘சாயா’ படத்தால் பாதிக்கப்பட்ட அவருக்கு அதன் பின் 6 ஆண்டுகள் வரை படங்கள் ஏதுமில்லை. பின்னர் 1947ல் வெளியான ’ராஜகுமாரி’ படம்தான் மீண்டும் அவருக்கு மறு வாழ்வளித்தது. ஆறு ஆண்டுகள் பொறுமையாக அவர் காத்திருந்ததும் வீண் போகவில்லை.

நாயகியாகவும் பிற பாத்திரங்களாகவும் தொடர்ந்த பயணம்

ஆனால், நாயகி குமுதினிக்கு படங்கள் தொடர்ந்தன. அப்போதைய மற்றொரு பிரபல நாயகனான ஹொன்னப்ப பாகவதருடன் ‘பக்த காளத்தி’ படத்தில் நடித்தார். செருகளத்தூர் சாமா, அந்நாளைய ‘கவர்ச்சிக்கன்னி’ தவமணி தேவி போன்றவர்களும் அதில் நடித்திருந்தனர். அடுத்து வெளியான ‘பக்த ஜனா’ குமுதினிக்குப் பெரும் புகழ் தேடித் தந்த படங்களில் ஒன்று. அதன் பின் அம்மா, அக்கா, அத்தை வேடங்கள் ஏற்றுப் பல படங்களில் நடித்தார்.

‘அவ்வையார்’ படத்தில் குழந்தை அவ்வையை சீராட்டி வளர்க்கும் தாய், ‘வியட்நாம் வீடு’ படத்திலோ பத்மினியின் தாயார். சிவாஜி இவரைப் பார்த்துப் பேசும் வசனம் ‘அத்தே… நீ முந்திண்டா நோக்கு; நான் முந்திண்டா நேக்கு’ அப்போது மிகப் பிரபலம், நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பல வேடங்களில் நடித்துள்ளார். பிராமண விதவைப் பெண்ணாகப் பல படங்களில் நடித்துள்ளார். பிற்காலத்தில் அவர் நடித்தவை அனைத்துமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களின் வாயிலாகக் கிடைத்த நாடக வாய்ப்பு

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலப் படங்களில் நாடக மேடைகளிலிருந்து திரைத்துறைக்கு வந்தவர்களின் எண்ணிக்கையே இங்கு அதிகம். ஆனால் இதுவே தலைகீழாகவும் சில நேரங்களில் நடந்திருக்கிறது. திரைப்படங்களிலிருந்தும் நாடக மேடைக்குச் சென்றவர்கள் பலர் உண்டு. குமுதினியும் அவர்களில் ஒருவர். டி.எஸ்.பாலையா, வி.எஸ்.ராகவன், சச்சு இவர்களுடன் இணைந்து பல நாடகங்களில் பங்கேற்றிருக்கிறார். ‘நீரோட்டம்’ அதில் குறிப்பிடத்தக்க நாடகம்.

1940களிலிருந்தே வானொலி நாடகங்களிலும் பங்கேற்று நடிக்க ஆரம்பித்தார். ஏறக்குறைய 60 ஆண்டுகள் வரை 100 நாடகங்களுக்கு வானொலியில் இவர் குரல் ஓயாமல் ஒலித்திருக்கிறது. சென்னைத் தொலைக்காட்சியின் ‘பூட்டு திறந்தது’, ‘மீண்டும் குழந்தைகள்’ போன்ற நாடகங்களிலும் பங்கேற்று நடித்திருக்கிறார். திரையிலோ, மேடையிலோ, குரல் வழி வானொலியிலோ எந்த ரூபத்தில் வெளிப்பட்டாலும் நடிப்பு நடிப்புதானே….

காரோட்டிய காரிகை

நடிகை அங்கமுத்து பிரபலமாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் படப்பிடிப்புக்கு வரும்போது மாட்டு வண்டியைத் தானே ஓட்டிக்கொண்டு வருவாராம். அதே போல திரையுலகில் தானே காரோட்டிச் சென்றவர்கள் என்ற பெருமை சாவித்திரி மற்றும் எஸ்.என்.லட்சுமிக்கும் உண்டு.

ஆனால், இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக கதாநாயகியாக நடித்த காலங்களில் அப்போது மிகப் பிரபலமாக இருந்த 181 ஃபோர்டு காரில் வருவாராம் குமுதினி. அப்படி வந்த ஒரே நடிகையும் இவர்தான். ‘குமுதினி இல்லம்’ என்ற பெயரில் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இப்போதும் இவரது வீட்டைக் காணலாம், தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

இது தவிர கலைச்செல்வம், சங்கீத ஜோதி, வீர வனிதை போன்ற பட்டங்களாலும் அலங்கரிக்கப்பட்டவர். தான் வாழ்ந்த காலம் வரை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பணிக்குழு (Working Committee) உறுப்பினராக இருந்தவர். எவ்வளவுதான் பேரும் புகழும் பெற்றிருந்தாலும் காலம் சிலரைப் புரட்டிப் போட்டு விடுகிறது.

முன்னணி கதாநாயகியாக வலம் வந்த குமுதினி பின் அதிகம் அறியப்படாதவரானார். 2002 ஆம் ஆண்டு தன் 86வது வயதில் காலமானார். திரையுலகைப் பொறுத்தவரை, அது எந்த மொழியாக இருந்தாலும் நாயகிகளின் வாழ்வென்பது மின்மினிப் பூச்சிகளைப் போல மின்னும் மிகக் குறுகிய காலமே.

(ரசிப்போம்!)

ஸ்டில்ஸ் ஞானம்