எனக்கு நானே இன்ஸ்பிரேஷன்…!- மேக்கப் ஆர்டிஸ்ட் ஸ்ரீதேவி ரமேஷ்

மனிதன் தன்னை அழகு படுத்திப் பார்ப்பதில் திருப்திஅடைகிறான். அழகுக்கு அழகூட்டுவதே ஒப்பனைக் கலை. வாழ்வில் ஒரு முறையாவது எல்லோரது முகத்திலும் இது இல்லாமல் இல்லை. இன்னும் சிலரது வாழ்வே இதில்தான் இருக்கிறது.
அப்படி தன் வாழ்வை இக்கலையோடு இயைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஒப்பனைக் கலைஞர் ஸ்ரீதேவி ரமேஷ். ஐஸ்வர்யா ராய் முதல் வளர்ந்து வரும் மாடல்கள், போட்டோகிராபி மேக்கப், பாடி பெயிண்டிங், பிளஸ் ஸைஸ் மாடல், நடிப்பு என பிசியாக இயங்கிக் கொண்டு இருக்கும் தேவி மிஸ்ஸஸ் இந்தியா டைட்டில் வின்னரும் கூட.

‘‘எங்கள் குடும்பத்தில் எல்லோரும் படித்தவர்கள். அதுவும் சாதாரண படிப்பு கிடையாது. முதல், இரண்டாம் உலகப் போர் சமயங்களில் இங்கிலாந்தில் படித்தவர்கள். இப்படியெல்லாம் படிக்க எனக்கு ஆர்வமில்லை.
சிறுவயதிலிருந்தே வரைவது, கிராப்ட் ஒர்க் செய்வது என மூழ்கி இருந்தேன். அம்மா டிரஸ் மாட்டி தலை பின்னிவிட்டு லிப்ஸ்டிக், பவுடர் அடிக்கும் போது உன்னிப்பாக கவனித்து, அதை பின் நானே ரசித்து செய்து பார்ப்பேன். என்னுடைய வேலைக்கு அஸ்திவாரம் இதுதான். பொதுவா எல்லோருக்கும் அம்மாதான்  இன்ஸ்பிரேஷன். அவங்கக்கிட்ட இருந்து பல விஷயங்கள் கற்றுக் கொள்கிறோம்.

பத்தாவது படிக்கும் போதே வீட்டில் எனக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்’’ என்று கூறும் ஸ்ரீதேவி, ‘‘செவ்வாய் தோஷம் இருந்ததால் யாரும் கிடைக்கமாட்டாங்கன்னு பயம் வந்து சீக்கிரம் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். என்னையும், பிற்காலத்தில் நான் செய்யும் வேலையையும் புரிந்து கொண்டு எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் கணவர் கிடைத்தார். சிவில் எஞ்சினியராக இருக்கும் அவருடன் 1996 ஆம் ஆண்டு மஸ்கட்டில் குடிபெயர்ந்தேன்.

வீட்டிலிருந்த நான், ஏதாவது செய்ய வேண்டுமென்கிற மனநிலைக்கு ஆளானேன். அப்போது, நவராத்திரி போன்ற நிகழ்ச்சிகளுக்கு பக்கத்து வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மேக்கப் போடுவதோடு, மேக்கப் சார்ந்த பொருட்களின் மீது ஆராய்ச்சியிலும் இறங்கினேன். மேக்கப் பற்றி படிக்க, கணவரிடம் கேட்டதும் உடனடியாக சம்மதம்  கிடைத்தது.

மேக்கப் ஆர்டிஸ்ட் என்கிற சர்ட்டிஃபிகேட்டோடு 2000 ஆம் ஆண்டு சென்னை வந்ததும், பலரிடம் வேலைக் கேட்டேன். அவர்களுக்கு நான் சொல்வது புரியவில்லை. காரணம் மும்பையில் மட்டுமே என்னுடைய படிப்புக்கான வேல்யு இருந்தது. அந்த சமயத்தில் பெங்களூரில் ஃபேஷன் டிசைனிங் படித்தவரின் அறிமுகம் கிடைச்சது.

அவர் உடை அலங்கரிக்கஇ நான் மேக்கப் போட, வீட்டில் இருக்கும் எல்லோரையும் மாடலாக மாற்றி ஒரு போட்டோ ஷூட் நடத்தினோம். அதை பார்த்து கல்யாணத்திற்கு மேக்கப் போட கூப்பிட்டாங்க. மேக்கப் போடுவேன்... ஆனால் பிரைடல் மேக்கப் எனக்கு பரிச்சயம் இல்லை. தெரிந்ததை வைத்து செய்தேன். அது அவர்களுக்கு பிடித்து போய் மற்றவர்களிடமும் சொல்ல ஆர்டர் குவிய ஆரம்பிச்சது’’ என்றவர் பியூட்டீஷியன் என்றால் அவர்களை இன்றும் சமூகம் வேறு விதமாக பார்ப்பதாக கூறி ஆதங்கப்பட்டார்.

“எல்லாவற்றிலும் சரியா இருக்க வேண்டும். அதனால் பார்லர் வைப்பதற்கு, வெளிநாட்டில் படித்த சர்ட்டிஃபிகேட் வைத்து லைசன்ஸ் கேட்டேன். நம்ம ஊர்ல படிச்சாதான் கிடைக்குமென்றார்கள். மறுபடியும் இங்கே படித்தேன். வெளிநாடுகளில் பல பார்லர்கள் உண்டு. அந்தந்த தரத்திற்கு ஏற்ப  மக்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். நான் படித்தது கிரியேஷன்.

அதாவது பாடி பெயிண்டிங், ஹை ஃபேஷன். இங்கு வந்த பிறகு சருமம் மற்றும் சிகை அலங்காரம் குறித்து கூடுதலாக பயின்றேன். முறையாக எல்லாம் கற்ற பிறகு அப்பாவுடைய இடத்திலேயே சலூனை ஆரம்பித்தேன்” என்றார்.“ஒரு நாள் இரண்டு நாள் ஃபேஷன் ஷோக்கு மேக்கப் போடணும்ன்னு பெங்களூரிலிருந்து அழைப்பு வந்தது. என்னுடைய காத்திருப்புக்கு பலன் கிடைத்துவிட்டதை நினைத்து உடனே ஒத்துக் கொண்டேன். அதில், பெரிதாக சம்பளம் இல்லையென்றாலும் மனநிறைவாக வேலை பார்த்தோம்.

அங்கு இருந்த மாடல்கள் சிலர் ‘நீங்கள் போட்ட மேக்கப் சிம்பிளா அழகா இருக்கு. சென்னைக்கு சில விளம்பர பட ஷூட்டிங்கிற்கு வருவோம். அப்ப வந்து மேக்கப் பண்றீங்களா? என்றதும் கூடுதல் உத்வேகம் கிடைத்தது. அதனோடு, சிறந்த மேக்கப் ஆர்டிஸ்ட் என்ற விருது கொடுத்து கௌரவப்படுத்தினார்கள்.

அந்த விருது மூலம் ஷோ கொரியோகிராபர்கள், விளம்பர பட நிறுவனங்களின் அறிமுகம் கிடைச்சது. தொடர்ந்து மும்பை, தில்லி, பூனே என சுற்றி பல ஷோக்கள், போட்டோகிராபி மேக்கப், 400-க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்கள் என காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓட ஆரம்பிச்சேன். அதில் குறிப்பாக 2015 மற்றும் 2016ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா ஷோக்கு வேலை பார்த்தது”என்றவருக்கு இது குறித்த தேடல் மட்டும் குறையவில்லையாம்.

“மாடலில், விளம்பரத்திற்கு பிறகு சினிமா தானே. அங்கு வாய்ப்பு கேட்ட போது. யாரிடமாவது உதவியாளராக இருக்கவேண்டும் என்றார்கள். மேக்கப் துறையில் அனுபவம் இருக்கும் ேபாது, மறுபடியும் எதற்கு உதவியாளரா வேலைப் பார்க்கணும்னு எண்ணம் ஏற்பட்டது. அதனால் எனக்கு வரும் வேலையை சரியா செய்தால் போதுமென்று, சினிமா மோகத்திலிருந்து விடுபட்டேன். அந்த சமயத்தில் இந்த துறைக்கு வெளிநாடுகளில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அங்கு வயதுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது.  திறமைக்குத்தான் முன்னுரிமை.

ஆண், பெண், திருநங்கை என்ற பாகுபாடு அங்கு கிடையாது. மனிதனை மனிதனாக  பார்க்கிறார்கள். அங்கு வேலை பார்த்துவிட்டு, இங்கு பார்க்கும் போது நமக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற எண்ணம் என்னை மன ரீதியாக பாதித்தது. அதில் இருந்து வெளியேற என்னுடைய தேடலை தீவிரப்படுத்தினேன்” என்றவர் நாடு முழுதும் மேக்கப் குறித்து செமினார் மற்றும் ெவார்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

“ஒரே உருவத்தை என்னால் 100 விதமாக காட்ட முடியும். ஒரு சிலர் தங்களது விளம்பரத்திற்காக Before - After போட்டுக் கொள்கிறார்கள். இது கடவுள் கொடுத்த அழகு. அதை இன்னும் கொஞ்சம் மெருகேற்றுகிறோம். நாம் ஒன்றும் புதிதாக படைக்கவில்லை. அப்படி போடுவது என்னை பொறுத்தவரை தவறு. தொழிலில் உன் திறமைய காட்டு. அதற்காக மற்றவர்களை குறைத்துதான் நீ வளரவேண்டுமென்பதில்லை. காசு வச்சிருக்கிறவன் எல்லாம் வெற்றி பெறுவதில்லை.

பணம் இல்லாதவனும் கடின உழைப்பால் முன்னேறி இருக்காங்க. 30 பேரை ஸ்டேஜில் ஏத்துவது அவ்வளவு சுலபம் இல்லை. வேகமும் அதே சமயம் பொறுமையும் முக்கியம். இது அனுபவத்தில்தான் கிடைக்கும்” என்கிறார்.

“என் போட்டோகிராபர் ராகுல் மூலமாக பிரிசைஸ் மாடலிங் ஆஃபர் வந்தது. அதில் கவனம் செலுத்திக் கொண்டே மிஸ்ஸஸ் இந்தியா போட்டியிலும் பங்கேற்றேன். அதற்கு முறையாக பயிற்சி எடுத்து போட்டியில் பட்டமும் வென்றேன். எல்லோருக்கும் வாழ்க்கையில் பல இக்கட்டான சூழல் வரும். அந்த நேரத்தை கடந்து சக்சஸ் கொண்டு வந்து, குடும்பத்தை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

எல்லா பெண் தொழில் முனைவோருக்கும் நான் சொல்வது, ‘உலகம் முழுவதும் யாராவது நம்மை பற்றி பேசிக்கிட்டேதான் இருப்பாங்க. நமக்குத் தெரியும் நாம் யார் என்பது’ எனவே அதை பற்றி யோசிக்காமல் நமது இலக்கை குறிவைப்போம். அதே சமயம் ஒரு துறையில் நாம் பேர் எடுத்துவிட்டோம் என சும்மா உட்கார்ந்துவிடக்கூடாது. அதை காப்பாற்றுவதற்கு நிறைய உழைக்கணும். நமக்கு பின் வாய்ப்புக்காக நிறைய பேர் நிற்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’’ என்ற ஸ்ரீதேவி 18 வருடமாக இந்த துறையில் இருக்கிறார்.

“பல மாடல்களுக்கு எப்படி ரெடியாக வேண்டும், ஸ்கின் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என சொல்லிக் கொடுக்கிறேன். இப்ப வர மேக்கப் ஆர்டிஸ்ட்டுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன். பெயர், பப்ளிசிட்டி கிடைக்குதுன்னு இலவசமா செய்யாதீங்க. என் மாடல்களை இலவச போட்டோ ஷூட்டுக்கு ஒத்துக்கொள்ள மாட்டேன். மாடல்ஸ் லைஃப் அவ்வளவு கஷ்டம்.

என்னக் கால் வலியாக இருந்தாலும், மாதவிடாய் நேரங்களிலும்… அத்தனை வலிகளையும் மறந்து சிரிப்பார்கள். அர்ப்பணிப்போடு சிலர் இருந்தாலும், ஒரு சிலரை சினி ஸ்டாராக மாற்றிவிடுவோம் என ஷோல நடக்க வைப்பார்கள். சிலரை போட்டோ ஷூட்டுக்கு மட்டும் பயன்படுத்துவார்கள். நாமும் மாடலாவோம் என்ற கனவோடு தங்களது புகைப்படங்களை ஃபேஸ்புக், டிவிட்டரில் போடுவாங்க. மாடலிங் என்றால் என்ன என்பது புரியாமல் பலர் தத்தளிப்பதை பார்க்கும் போது பாவமாக இருக்கிறது” என்றார்.

தற்போது இரண்டு திரைப்படங்களில் நடித்திருப்பதோடு, பல விளம்பர படங்களிலும் நடித்து வரும் தேவிக்கு, அடுத்து கோலிவுட்டில் பெரிய நடிகையாக வேண்டும் மற்றும் மிஸ்ஸஸ் வேர்ல்டு பட்டம் பெறவேண்டுமாம். “நான் இன்று இந்த அளவு முன்னேறி இருப்பதற்கு பல போட்டோகிராபர்கள், ஷோ கொரியோகிராபர்கள், விளம்பரப்பட நிறுவனங்கள் என அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமை பட்டிருக்கிறேன்.

எனக்கு நான் தான் இன்ஸ்பிரேஷன். குழந்தையாக இருக்கும் போது எப்படி ஒவ்வொரு முறை எழும் போது விழுந்தாலும் மறுபடியும் முயற்சித்து முயற்சித்து எழுந்தோமோ, அதே போல் வாழ்வில் ஒவ்வொரு முறை சோர்வடையும் போதும், முயன்று எழுவோம். இது இயற்கை. நம்மிடமே எல்லாம் இருக்கிறது. அதை மறந்து மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். நம்மை தேற்றுவதில் நம்மைவிட சிறந்தவர் யாரும் இருக்க முடியாது” என்கிறார் ஸ்ரீதேவி.                              

அன்னம் அரசு