ஆளுமைத் திறனை அருள்வாள்அம்பகரத்தாள்சக்தி தரிசனம்

பிரம்மபுரீசனைக் காணும் பேரானந்த ஆவலில் துர்வாச முனிவர் விரைந்து கொண்டிருந்தார். தவிர வேறெந்த இலக்கும்  இல்லாதிருந்தார். அவர் செல்வதைப் பார்த்த மதலோலை என்ற அசுர குலப் பெண் அவரிடம் மயங்கி அவர் குழந்தைக்குத் தான்  தாயாக வேண்டும் என்ற ஆசையில் அவர் எதிரே போய் நின்றாள். அவர் பயணத்தின் நோக்கம் அறியாமல் அவரைத் தடுத்து கைகூப்பி  வணங்கினாள். ‘‘எனக்கு பிள்ளைப்பேறு அளிக்க வேண்டும். அது தங்களின் பெயர் சொல்லுமெனில் மிக்க மகிழ்வேன்’’ என்று துணிந்து  கூறினாள்.

துர்வாசர் கனலானார். அவரின் கோபம் வானத்து மேகங்களையும் சிவக்க வைத்தது. ‘‘பெண்ணே, பிரம்மன் சாபநிவர்த்தி பெற்ற  பிரம்மபுரி நோக்கி செல்கிறேன். வணங்கச் செல்பவனைப் பார்த்து வேண்டாத மொழி பேசுகிறாய். தேவ அழகில் தோன்றும் அசுரகுலப்  பெண்தானே நீ. தீயதைத்தான் சிந்திக்கிறாய். ஆகவே தீமை செய்யும் பிள்ளைகள்தான் உனக்குப் பிறக்கும். என் வழியை விட்டு  விலகு’’ எனக் கூறிய அவர், அவளை உற்றுப் பார்த்தார். அசுரத்தனமும், தேவமேன்மையும் கலந்த  ஒரு சக்தி அவளுக்குள்  இரட்டையாக பிரிந்து பரவியிருப்பதை கண்டார். இன்னும் சில கணங்களில் அவை தெறித்து ஆகாயத்தில் பரவிவிடும் என்பதையும்  உணர்ந்தார். அதற்குள் ஈசனைக் கண்டுவிட வேண்டுமென விரைந்தார்.

துர்வாசர் பிரம்மபுரீசரின் திருவடியில் தலை பதித்து வணங்கினார். அருகே அன்னை பூங்குழல் நாயகி அவருடைய பக்தியைக் கண்டு  நெகிழ்ந்திருந்தாள். சட்டென்று வானத்தையே கிழிப்பது போல அலறலொன்று கேட்டது. மதலோலையின் பிரசவ ஓலம்தான் அது.  வானிலேயே இரு குழந்தைகள் ஜனித்தன. மதலோலை முதலில் பிறந்தவனை சிவப்பேறிக் கிடந்த ஆகாயத்தில் தூக்கிப் பிடித்தாள்.  ‘இவன் பிறந்ததற்கு நீயே சாட்சி’ என ஆகாயத்தை முன்னிறுத்தி அந்த மகனுக்கு அம்பரன் என்று பெயரிட்டாள். மற்றொரு மகனும்  பிறந்தான். இவன் அழுகுரல் மயங்க வைப்பதாக இசைத்தது. ஆதலால் இவனை அம்பன் என்றழைத்தாள். மதலோலை தன் இரு  மகன்களையும் அசுர குருவான சுக்கிராச்சாரியாரிடம் அழைத்துப் போனாள். ‘‘குருவே, துர்வாசர் அருளால் பிறந்த குழந்தைகளை  தாங்களின் பாதத்தில் சேர்த்துவிட்டேன்.

இனத்தின் பாதுகாப்புக்கு இவர்களால் ஏதும் செய்ய முடியுமெனில் சந்தோஷப் பட்டுக்கொள்வேன்’’ என்றாள். ஆதூரத்துடன்  குழந்தைகளின் தலையை நீவினாள். அசுரப்பல் காட்டி அக்குழந்தைகள் சிரித்தன. கண்களில் நீரோடு விடைபெற்றாள். சுக்கிராச்சாரியார்  அவ்விருவரையும் அணைத்துக் கொண்டார். தலையில் கைவைத்து ஆசிபதித்தார். ஆதரவாக இருந்தது மட்டுமல்லாது அனைத்து  கலைகளையும் கற்பித்தார். அவர்களும் அசுர வேகத்தில் கற்றுத் தேர்ந்தனர். கலைகள் அனைத்தும் அவர்களிடம் செழித்து வளர்ந்தன.  முகத்தில் தேவகளை. ஆனால், சுக்கிராச்சாரியார் ‘‘எளிமையாக சொல்கிறேன், புரிந்து கொள்ளுங்கள். நமக்கு பகைவர்கள் தேவர்களே.  அவர்கள் பார்த்து மிரளும்படியாக ஏதேனும் செய்ய வேண்டும். நாம் வழிவழியாக செய்துவருவதுதான் அது. நீங்களும் அதைத்தான்  செய்யப்போகிறீர்கள். பிரம்மபுரி சிவனை நோக்கி தவம் மேற்கொள்ளுங்கள்’’ என்றார்.

இன்றைய அம்பல் எனும், முற்காலத்திய பிரம்மபுரி தலத்துக்கு சகோதரர்கள் புறப்பட்டார்கள். அவர்களிடம் சிவாக்னி சுடர்விட்டு  ஒளிர்ந்தது. முக்காலமும் நீராடினார்கள். பூவோடு நாராக பக்தியையும் சேர்த்துத் தொடுத்தார்கள். பரமனின் பாதத்தில் சொரிந்து  மகிழ்ந்தார்கள். சிறிதாக இருந்த கோயிலை தம் அளவிலா செல்வத்தைக் கொட்டி கோபுரமாக்கினார்கள். ஆனாலும், அவர்கள் அகம்  நிறையவில்லை. உள்ளம் உருக்கும் பாக்களை தம் உயிரில் தோய்த்து பாடினார்கள். சாமகானப் பிரியன் சிவன் அகமலர்ந்தார். அவர்கள்  முன் நெடிய நின்றார். கண்ட அவர்கள் கண்ணில் நீர் கசிந்தன. மகாதேவனைப் பார்த்து மலைத்துப் போயினர். ‘என்ன வேண்டும்?’  பிரியத்தோடு கேட்டார், பரமசிவ பிரம்மம்.
    
உடனே தங்களின் குருநாதர் சுக்கிராச்சாரியார் கேட்கச் சொன்னதை அப்படியே கேட்டார்கள். வரங்களைப் பட்டியலிட்டார்கள். தாங்கள்  விண்ணையும், மண்ணையும் சேர்த்து மூவுலகும் வெல்ல வேண்டும் என்று கேட்டார்கள். கூடவே, ‘இந்த தலம் அம்பராலயபுரம் என  அழைக்கப்பட வேண்டும். அம்பராலயபுரேசன் எனும் திருநாமத்தோடு தாங்கள் அமர வேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டனர். சிவன் அவர்களின் சிந்தை குளிர வரமளித்தார். ஆனால், ‘நீங்கள் ஒற்றுமையோடு இருக்கும் வரை உங்களை வெல்ல எவராலும்  முடியாது’ என்ற நிபந்தனையையும் சொன்னார். அவர்கள் இருவரும் ‘அப்படியே இருப்போம்’ என்று சொல்லி ஒருவரை ஒருவர்  அணைத்துக் கொண்டனர்.

அசுர சகோதரர்கள் ஆனந்தக் கூத்தாடினர். தம் பின்னால் அசுரர் படைகள் பெருகி நிற்கும் காட்சியைக் கண்டனர். இருவரும் எண்  திசைகளுக்கும் தம் படைகளுடன் சென்றனர். குரூரமாக சூறையாடினர். தேவலோகத்திற்கும் படையெடுத்து இந்திர லோகத்தையும்  வென்றார்கள்.     சுக்கிராச்சாரியாரை அரியணையில் அமரவைத்து பாதம்பற்றி நன்றி சொன்னார்கள். ‘எந்தக் குறையும் இல்லை.  அதுபோல நாங்கள் இல்லறம் காணவும் தாங்களே இனியவழி காட்ட வேண்டும்’ என்று கேட்டனர். ‘திருமண நியதிகள் நம் குலத்தில்  இல்லை. விரும்பும் கன்னியரை வலிந்து சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லி அவர்களுக்குள் கிளர்ச்சியை அதிகரித்தார்  சுக்கிராச்சாரியார்.

உடனே அசுரர்கள் வெறிபிடித்து அலைந் தார்கள். கன்னியரைக் கவர்ந்தனர். எதிர்ப்போரை கொன்றனர். இன்று மண்ணுலக மங்கையர்,  நாளை தேவ மகளிர். மறுநாள் இயக்க குல நங்கையர் என்று பார்த்துப் பார்த்து அட்டூழியம் செய்தனர். அசுர சகோதரர்களின் அகத்தில்  காமசக்தி நிறைய, அங்கிருந்த சிவசக்தி ஏக்கத்துடன் வெளியேறியது. கதிகலங்கிய இந்திரன், பிரம்மன், திருமாலுடன் பிரம்மபுரி  தலத்தை அடைந்தான். மூவரும் சிவனை ஆராதித்தனர். ‘‘அம்பர சகோதரர்கள் அறத்தை மீறுகிறார்கள். அவர்களிடமிருந்து நீங்கள்தான்  இன்று மூவுலகையும் காக்க வேண்டும்’’ என்றனர். தன் இடப்பாகம் இணைந்த அம்மையை பார்த்தார், சிவன். அம்மை அளவிலா  ஆற்றல்களை தமக்குள் தேக்கி ஒரு மூச்சில் வெளியேற்றினாள். கருநீலவர்ண தேகத்தோடு தோன்றினாள் மாகாளி. உமையவள்  காளியை பார்த்து ‘‘நீ திருமாலோடு சேர்ந்து அம்பர சகோதரர்களை குலத்தோடு அழித்து வா’’ என பணித்தாள்.

திருமால் அந்தண வேதியர் வேடம் பூண்டார். மாசில்லா மதியின் முகத்தோடு, பாதங்களில் தண்டைகள் ஒலிக்க, மின்னலாகத்  திருமேனி பிரகாசிக்க அழகிய கன்னியாக காளி மாறினாள். அண்ணனும், தங்கையும் அரக்கர்களின் அரண்மனையோரம் நடந்தார்கள்.  காவலர்கள் வெகு எளிதாக அவர்களை அம்பர சகோதரர்களின் முன்பு கொண்டு நிறுத்தினார்கள். அம்பரன் இப்போதே இந்த கன்னி  தனக்கு வேண்டும் என்றான். அம்பனும் காமத்தீயால் கலங்கினான். அந்த முதியவரைப்பார்த்து ‘‘இந்த கன்னியை கொடுத்துவிட்டு  வேண்டிய செல்வங்களை எடுத்துச் செல்லுங்கள்’’ என்றான். இருவரும் தமக்குள் போட்டியிட்டனர். இப்போது இச்சை மட்டும் மனதை  நிறைக்க, ‘உங்களுக்குள் ஒற்றுமை குறையாத வரையில் யாரும் உங்களைத் தோற்கடிக்க முடியாது’ எனும் ஈசனின் வாக்கு மறந்து  போனது. போட்டி பொறாமையானது;

அது வளர்ந்து கோபமானது. முதியவரான மாலவன், ‘‘உங்களுக்குள் யார் வலிமையானவர்களோ அவரே என் தங்கையை திருமணம்  செய்து கொள்ளலாம்’’ என்றார். அண்ணனும் தம்பியும் ஒருவரை ஒருவர் ஆத்திரத்தோடு மோதிக் கொண்டார்கள். தன் அன்புத்  தம்பியான அம்பனை ஒரு கன்னியின் அழகுக்காக அம்பரன் கொன்றுபோட்டான்.  எங்கே அந்த அழகு மங்கை என்று தேடி அவள் முன்  நின்றான். வேட்கையுடன் நெருங்கினான். திடீரெனபூமி பிளப்பதுபோல் சத்தம் கேட்டது. சட்டென்று கன்னி மறைந்து காளியானாள்.  விரிந்த சடையும் தீயைப் பொழியும் கண்களுமாக கோரத் தோற்றம் பூண்டாள். முதலில் பயந்து ஓடிய அசுரன் எதிர்க்கும் முயற்சியில்  பல்வேறு பயங்கர தோற்றம் கொண்டான். இறுதியாக எருமை வடிவம் பூண்டான். காளியின் எண் கரங்களும் வலிமையோடு  புடைத்திருந்தன.

சூலம், வாள், கேடயம், உடுக்கை, கிளி, பாசம் என்று தன் கரங்களில் தரித்து அஷ்டபுஜ காளியாக அம்பரனின் முன் நிற்க அவனும்  பேருருவம் எடுத்தான். அசுரப் படைகளை நோக்கி அஸ்திரங்களை பொழிந்தாள் காளி. மகிஷ உருவில் ஒரே பாய்ச்சலாக மாகாளியின்  மீது பாய்ந்தான் அம்பரன். கையிலிருந்த வாளால் பிடரியை சீவினாள் காளி. எருமை உருவீழ்ந்து அம்பரனாக சுய உரு பெற்றெழுந்த  அவன் பெருஞ்சிரிப்பு சிரித்தான். அவனைத் தன் கரங்களால் பிடித்து பூமியில் கிடத்தி இடப்பாதத்தை அவன் மார்பில் உதைத்து  திரிசூலத்தால் அவனது மார்பை ஓங்கிக் குத்தி இருகூறாகப் பிளந்தாள். மூவுலகினரும் பத்ரகாளியாக நின்றருளிய தேவியை  வணங்கினர். அம்பரனை அழித்த அவள் இத்தலத்திலேயே எழுந்தருள வேண்டும் என வேண்டி நின்றனர்.

அவளும் அவ்வாறே தான் யுகம்தோறும் அமர்வதாகச் சொன்னாள். இன்றும் நம் கலியுகத்தில் கருணை பூண்டு அமர்ந்துள்ளாள். அவள்  எழுந்தருளியிருக்கும் இத்தலம் அம்பகரத்தூர் என்று பெயர் பெற்றது. அம்பகரத்தூர் காளியின் ஆலயம் தோன்றிய காலத்தை  வரையறுத்துக் கூற இயலவில்லை. ஆனால், 1961ம் வருடம்தான் ஆலயம் திருப்பணி செய்யப்பெற்றிருக்கிறது. கோயிலின்  ராஜகோபுரத்தில் அம்பரனை சூலாயுதத்தால் காளி வதம் செய்வதை சுதைச் சிற்பம் சொல்கிறது. சக்தி வழிபாட்டுக்குரிய அந்த கோபுரம்  முழுதும் பெண் தேவதைகளின் திருவுருவங்களால் நிரம்பியிருக்கிறது. சிறிய ஆலயம்தான்; ஆனாலும்  சக்தி மிகுந்திருப்பதால்  பக்தர்களின் கூட்டம் அலைமோதுகின்றது. ஆதலால் கோயிலின் பிராகாரங்கள் முழுதும் கூரை வேய்ந்திருக்கின்றனர்.

காளியின் சந்நதியை நெருங்கிய உடனேயே உடலெங்கும் பக்தி அதிர்வு பரவுகிறது. குங்கும சுகந்தம் அவ்விடத்தை நிறைக்கிறது.  கர்ப்பகிரகத்தின் முன்பாக இரண்டு பக்கமும் அழகிய துவாரவதியர் நின்றிருக்க தென்திசையில் வீற்றிருக்கும் பத்ரகாளியம்மன்  வடதிசை நோக்கி பாரினை பரிபாலித்துக் கொண்டிருக்கிறாள். நெடிய தோற்றம் பூண்டிருக்கிறாள். எண்கரங்களில் ஆயுதங்களுடன்  அம்பரனை வதைத்த பாவத்துடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். வலப்பாதம் மடித்து, இடப்பாதத்தை அம்பரன்மீது ஊன்றி,  திருசூலத்தால் அவன் மார்பைப் பிளப்பதுபோல விளங்குகிறாள். முகம் முழுதும் கோபத்தின் செம்மை பரவியிருக்கிறது. ஆனால்,  உற்றுப்பார்த்தால் கண்களில் வதம் செய்த கோபச் சாயலைக் காணோம். மாறாக கருணை ஊற்றாக விளங்குகிறாள். வெள்ளிக் கவசம்  செய்து அன்னையை அலங் கரித்திருக்கிறார்கள்.

அரசிபோல கம்பீரமாக வீற்றிருக்கச் செய்திருக் கிறார்கள். ஆனாலும், பார்வையில் எளிமை ஒளிர்கிறது. சரணா கதியாக அவளிடம்  மனதைக் கொடுத்து விட்டால் போதும்; யுகம் தோறும், நாம் மறந்தாலும், தான்  மறக்காது காத்தருள்வாள். நம் கெடு வினைகள், தீய  எண்ணங்கள், நம்மைத் தாக்கும் எதிர்ப்புகள் எல்லாவற்றையும் தவிடுபொடியாக்குவாள். அவளை தரிசித்து வெளிவரும்போது தாயை  பிரிந்து செல்லும் சேயைப்போல பாச ஏக்கம் நம்மைச் சூழ்கிறது. பத்ரகாளிக்கு முன்பாக சபா மண்டபத்தில் பலிபீடம் காணலாம்.  அம்பரன் எருமைக்கடா வடிவமெடுத்து அன்னையை எதிர்த்தபோது அவளால் அவன் சம்ஹாரம் செய்யப்பட்ட இடம், மகிஷ பீடமாகத்  திகழ்கிறது.

பிராகாரம் வலம்வரும்போது காளியம்மனுக்கு இடப்பக்கம் கிழக்கு முகமாக கோயில் கொண்டிருப்பவர், பெத்தர்ணர் ஆவார்.  வலக்கரத்தில் அரிவாளும், இடக்கரத்தில் சுக்குமாத்தடியும் கொண்டு வீரம் பொங்க நிற்கிறார். அரை நூற்றாண்டு வரை இவர்முன்  எருமைக்கடா வெட்டு வைபவம் நிகழ்ந்திருக்கிறது. இப்போது இல்லை. ஆனால், வேண்டுதல் நிறைவேறியவர்கள் கோழியை  கோயிலுக்கு நேர்ந்து விட்டுவிடுகிறார்கள். பெத்தர்ணர் சந்நதியில் பெரியாச்சியும் தரிசனம் தருகிறார். கோயிலை வலம் வந்து மீண்டும்  கோபுர தரிசனமாக வானம் பார்க்க, அங்கே அம்பரன் வதத்தை காளி நம் மனக்கண்ணில் மீண்டும் நிகழ்த்திக் காட்டுகிறாள்.  அம்பகரத்தூர் எனும் இத்தலம் காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு சனீஸ்வரர் தலத்திற்கு 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

-கிருஷ்ணா
படங்கள் :  சி.எஸ்.ஆறுமுகம், கே.ராஜா