முயற்சிக்கு முதுமை முடிவல்ல! முயற்சியின் முன்னுதாரணம்!வாசகர் பகுதி

இந்த அவசர உலகத்தில் கற்பதற்கான மனநிலை பலரிடம் தற்போது இல்லாத சூழ்நிலையில், கற்பதற்கு வயது முக்கியமில்லை என்று  நிரூபித்திருக்கிறார் கேரளாவை சேர்ந்த கார்த்தியாயினி அம்மா.இந்தியாவில் எழுத்தறிவில் முதலிடத்தில் இருப்பது கேரள மாநிலம்.  100 சதவீதம் எழுத்தறிவினை முழுமையாக செய்யும் பொருட்டு பல்வேறு முயற்சியினையும் மேற்கொண்டு வருகிறது. அதன்  அடிப்படையில் ‘அக்ஷரலக்ஷம்’ என்ற திட்டத்தை கேரள அரசு அறிமுகப்படுத்தி, தேர்வுகளையும் நடத்தி வருகிறது. இந்த தேர்வில்  பல்வேறு வயதினை சேர்ந்தவர்களும் எழுதி தேர்ச்சி பெறலாம். குறிப்பாக  குடும்பச் சூழலால் காரணமாகப் படிப்பை பாதியில் நிறுத்திக்  கொண்ட முதியவர்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

‘அக்ஷரலக்ஷம்’ கேரள கல்வியறிவு திட்டத்தின் கீழ் படிக்கும் மூத்த மாணவி ஆலப்புழாவைச் சேர்ந்த 96 வயது கார்த்தியாயினி அம்மா.  இவர் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி  நடந்த தேர்வில் 100க்கு 98 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். “எனக்கு படிக்க பிடிக்கும்.  குடும்ப சூழல் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இப்போது அதற்கான வாய்ப்பு கிடைச்சது. அதனால் படிச்சேன்’’ என்றார். தேர்வு பாடம்  என்றாலே பயந்து நடுங்கும் இந்த காலத்து குழந்தைகளுக்கு தேர்வு என்றால் இவ்வளவுதான் என்பதை தெளிவுபடுத்துகிறார் கார்த்தி  யாயினி அம்மா. “நல்ல மதிப்பெண்கள் எடுத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. என்னால் எழுதவும், படிக்கவும், கணக்குப் போடவும்  முடிகிறது” என பெருமை கொள்கிறார்.

96 வயதான கார்த்தியாயினி அம்மா அதிகாலை நான்கு மணிக்கு எழும் பழக்கம் கொண்டவர். கண்ணில் கேட்டராக்ட் அறுவை சிகிச்சை  செய்து கொண்டதைத் தவிர, அவர் பெரிய அளவில் மருத்துவமனைக்குச் சென்றதில்லை. தன்னுடைய 100வது வயதில் 10ம் வகுப்புத்  தேர்வு எழுத வேண்டும் என்று அதற்கான பயிற்சி எடுத்து வருகிறார். வீட்டின் பொருளாதார சூழல் காரணமாக கார்த்தியாயினி அம்மா  பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழல். கணவர் இளம் வயதிலே தவறியதால், 6 குழந்தைகளை வளர்ப்பதற்காக வீட்டு  வேலை, கோயில்களில் துப்புரவு பணிகளையும் செய்துள்ளார்.

தனது 60 வயது மகளிடம் இருந்து படிக்கும் ஆர்வம் ஏற்பட்டு கேரளா கல்வியறிவு திட்டத்தில் சேர்ந்துள்ளார். இவரின் முயற்சியை  கண்டு வியந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அவரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். அப்போது அவரிடம்  தனக்கு கணினியை இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரது கோரிக்ைகயை ஏற்றுக் கொண்டு, கேரள  கல்வித்துறை அமைச்சர் சி.ரவீந்திரநாத் அவருக்கு லேப்டாப்பை பரிசாக வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து காமன் வெல்த் அமைப்பு, கார்த்தியாயினி அம்மாவைக் கௌரவிக்கும் வகையில் கல்விக்கான நல்லெண்ண  தூதராக தற்போது நியமித்துள்ளது. அதன்படி, காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராக உள்ள 54 நாடுகளுக்கு, தொலைதூர கல்வியை  மேம்படுத்தும் வகை யில் கார்த்தியாயினி அம்மா நல்லெண்ணத் தூதராக செயல்பட உள்ளார். எந்த ஒரு செயல் செய்யும் போதும்  அதற்கு உண்மையாகவும், தொடர் முயற்சியும் அவசியம் என்பதை நமக்கு விளங்க வைத்திருக்கும் கார்த்தியாயினி அம்மாவிற்கு  பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு கார்த்தியாயினி அம்மா ஒரு  முன்னுதாரணம்.

-அன்னம் அரசு

தோழி அந்தரங்கம்

ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பிரச்னைகள். வெளியில் தெரிவது கொஞ்சம். உள்ளுக்குள் வைத்து மருகுவது அதிகம். எல்லாவற்றையும்  எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள முடியாது. அதிலும்  ‘அந்தரங்கம்’ என்றால்... கேட்கவே வேண்டாம். சொன்னால் ‘நம்மை பற்றி  என்ன நினைப்பார்கள்’ என்ற தயக்கம் ஒருபுறம். மற்றவர்களிடம் சொல்லிவிடுவார்களோ என்ற பயம் மறுபக்கம். இந்நிலை இனி  வேண்டாம். ‘அந்தரங்க’ பிரச்னையை நினைத்து மருகி மருகி உங்கள் வாழ்க்கையை தொலைக்க வேண்டாம்.

நம்பிக்கைக்குரிய தோழியாக, உங்கள் நலம் விரும்பும் உயிராக, பிரச்னையிலிருந்து உங்களை விடுவிக்கும் நட்பாக இதோ ‘குங்குமம்  தோழி’ உங்கள் இரு கரங்களையும் அன்புடன் பற்றிக் கொள்கிறாள்.அச்சம்  வேண்டாம். நிச்சயம் இவள் ரகசியம் காப்பாள். ஆறுதலாக  இருப்பாள். நம்பிக்கை அளிப்பாள். காப்பாற்றி கரை சேர்ப்பாள்.பாலியல் பிரச்னைகள் தொடங்கி குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் வரை அனைத்துக் குழப்பங்களில் இருந்தும் உங்களை விடுவிக்க காத்திருக்கிறாள்.

தயக்கமில்லாமல் உங்கள் கேள்விகளை -

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர்,
சென்னை - 600 004


என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் என அவசியமில்லை.  தேவை பிரச்னைக்கு தீர்வு தானே தவிர அடையாளங்கள் இல்லையே...கரம் கோர்த்து தலை வருட உங்களுக்காக தோழி  காத்திருக்கிறாள்!