கிச்சன் டைரீஸ்டயட் மேனியா

கடந்த ஆண்டு இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட டயட்களில் முதன்மையானது என்று அட்கின்ஸ் டயட்டைச் சொல்கிறார்கள்.  அமெரிக்காவின் புகழ்பெற்ற இதய நோய் நிபுணர் டாக்டர் அட்கின்ஸ் இந்த டயட்டை 1970களில் உருவாக்கினார் என்கிறார்கள்.  அமெரிக்காவில் மட்டுமே ஓரளவு அறியப்பட்டிருந்த இந்த டயட், உலகம் முழுதும் சர்க்கரை நோயாளிகள் பெருகப் பெருக சர்வதேச  டயட்டாக மாறிக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான டயட்களைப் போலவே அட்கின்ஸ் டயட்டும் எடைக் குறைப்பை நோக்கமாகக்  கொண்டதுதான். கூடவே, இன்சுலின் அளவை சீராக வைத்திருப்பதையும் கீட்டோசிஸ் என்ற நோய் உருவாகாமல் தடுப்பதையும்  நோக்கமாகக் கொண்டிருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதைப் பின்பற்ற ஆர்வமாய் இருக்கிறார்கள்.

டாக்டர் அட்கின்ஸ் ‘ரிபைண்டு கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தைத் தவிர்த்தாலே உடலில் இன்சுலின் சுரப்பும் கொழுப்புக்  கட்டுப்பாடும் இயல்பாக இருக்கும். இதய நோய்கள், சர்க்கரை நோய் நெருங்காது’ என்கிறார். அதென்ன ரிபைண்டு கார்போஹைட்ரேட்ஸ்?  அதாவது சர்க்கரை, ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப், மைதா மாவு போன்றவைதான்.உண்ணும் உணவில் உள்ள குளுக்கோஸ் எனும்  சர்க்கரை ரத்தத்தில் சேரும் விகிதத்தை கிளைசெமிக் என்ற அளவால் குறிப்பார்கள். 0-100 வரை உள்ள இந்த கிளைசெமிக் விகிதத்தை  அடிப்படையாகக் கொண்டே அட்கின்ஸ் டயட் இயங்குகிறது.

உடலில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருக்கும்போது இன்சுலின் அளவும் குறைவாக இருக்கும். இப்படியான சூழலில் நம் உடல்  தன்னுடைய ஆற்றலுக்காக உடலில் சேகரமாகியுள்ள கொழுப்பையே உடைத்து குளுக்கோஸாக மாற்றும். இந்த நிலை தொடர்ந்தால் இது  கீட்டோசிஸ் என்ற பிரச்சனையாக உருவெடுக்கும்.மைதா ரொட்டி, சாக்லெட், மிட்டாய்கள் போன்ற இனிப்புகளில் அதிகப்படியான  குளுக்கோஸ் அளவு இருக்கும். அதனால், இவற்றை ஹை கிளைசெமிக் உணவுகள் என்பார்கள். இந்த கார்போஹைட்ரேட்கள் ரத்தத்தில்  வேகமாக சர்க்கரையைச் சேர்ப்பதால் இன்சுலின் சுரப்பு விகிதமும் திடீரென அதிகரிக்கும். ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்களான  அரிசி, கோதுமை, ஓட்ஸ், பழங்களில் உள்ள மாவுச்சத்து போன்றவை உடலுக்குத் தேவையான குளுக்கோஸைக் கொண்டிருப்பதால்  திடீரென அதிகப்படியான இன்சுலின் சுரப்பைத் தூண்டாது.

எனவே, அவற்றை உண்பதன் மூலம் இன்சுலின் சுரப்பை மேம்படுத்தலாம். அதைக் கொண்டு எடைக் குறைப்பையும் நிகழ்த்தலாம் என்பது  இந்த டயட்டின் வேலைத் திட்டம்.கொழுப்புச்சத்துக்கு மீன் போன்ற அசைவ உணவுகளையும் எண்ணெய்களையும் பரிந்துரைக்கும் டாக்டர்  அட்கின்ஸ் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நுண்ணூட்டச்சத்துகள் போன்றவைக்கு காய்கறிகள், பழங்களையும் பரிந்துரைக்கிறார். உடலின்  மொத்த கலோரி தேவையில் இருபது சதவீதத்தை நிறைவுற்ற கொழுப்புகள் வழங்குவதாக இருக்க வேண்டும் அதுவே சிறந்த உணவு  என்கிறார் அட்கின்ஸ். சர்க்கரை நோய் கட்டுப்பட அட்கின்ஸ் டயட் நல்ல வழிமுறைதான் என்றாலும் அது மட்டுமே சர்க்கரை நோயைக்  கட்டுப்படுத்தாது. உடற்பயிற்சி, போதுமான ஓய்வு, தொடர் மருத்துவப் பரிசோதனைகள் அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள்.

பக்தவச்சல பாரதி தொகுத்த தமிழர் உணவு


மானுடவியல் சார்ந்த ஆய்வு நூல்களைத் தமிழில் எழுதுபவர்களில் பக்தவச்சல பாரதி முன்னோடியானவர். தமிழ் நிலத்தின், தமிழ்  மக்களின் வாழ்வை மானுடவியல் நோக்கில் ஆய்வு செய்து இவர் எழுதிய நூல்கள் ஒவ்வொன்றுமே ஒரு பொக்கிஷம். அந்த வகையில்  இவர் தொகுத்த தமிழர் உணவு என்ற நூலும் முக்கியமானது.தமிழ் சமூகம் என்பது எப்போதும் ஒன்று அல்ல. காலங்களுக்கு ஏற்ப பல்வேறு  மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தன்னைத் தகவமைத்துக்கொண்டே வந்த இனம் நாம். காலங்கள் மாற மாற நம்முடைய உணவுப்  பழக்கவழக்கங்களும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. இந்த நூலில் அப்படியான பல்வேறு வகையான உணவுப் பழக்கங்கள் பற்றி 35  சுவாரஸ்யமான கட்டுரைகள் உள்ளன.இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு ஆய்வாளர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் எழுதியுள்ளார். இதனால், இந்த நூல்  பன்முகத்தன்மையோடு உணவு, சமூகம், அரசியல், வரலாறு எனப் பலதரப்பட்ட தளங்களையும் தொட்டுச்செல்வதாக உள்ளது.இதில் உள்ள கட்டுரைகளை நிலமும் உணவும், சமூகமும் உணவும், சமயமும் உணவும் என மூன்று பகுப்புகளாகப் பிரித்துள்ளார்  பக்தவச்சல பாரதி.

இந்த நூலில் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதியுள்ள ‘கம்பங்கஞ்சியும் உளுந்தங்களியும்’ கட்டுரை சிறுதானியங்கள், பயறுகள் சார்ந்த உணவுப்  பழக்கத்தை அதன் பின்னால் இயங்கும் சமூக அரசியலை சிறப்பாக விவரிக்கிறது. வட்டார உணவுகளின் சிறப்புத்தன்மையை பல  கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. காவேரியின் வண்டல் உணவு, முல்லை நதிச் சமையல், கஞ்சியும் வெஞ்சனமும், வாசச் சமையலும்  ஊசக் கறியும், உள்ளது கொண்டு உண்ணுதல், இஸ்லாமியர் உணவு போன்ற கட்டுரைகளும் சுவாரஸ்யமானவை. இதைத் தவிர புலம்பெயர்  சமையல், செட்டிநாட்டு உணவு போன்ற வட்டார சமையல் பற்றிய கட்டுரைகளும் உள்ளன.

இந்த நூலை ஏன் படிக்க வேண்டும் என்று ஒருவர் கேட்டால், வெறுமனே நம் முப்பாட்டன்கள் உண்ட உணவைத் தெரிந்துகொள்ள மட்டும்  அல்ல. நாம் உண்ண வேண்டிய உணவைத் தேர்ந்துகொள்ளவும் இதைப் படிக்க வேண்டியது அவசியம் என்று சொல்லலாம். உணவு என்பது  எப்படி சமூக அரசியலோடு தொடர்புடையது என்ற பார்வையை வளர்த்துக்கொள்ளவும் இந்த நூல் வழியமைக்கிறது.

உணவு விதி 12


சாப்பிடும் முன்பும்; சாப்பிட்டதும் நீர் பருகாதீர்கள். இந்த விதி மிகவும் முக்கியமானது. இப்போது பலரும் உணவு மேசையில் அமர்ந்த  பிறகுதான் தண்ணீரையே தொடுகிறார்கள். இது மிகத் தவறான பழக்கம். ஒருவர் சராசரியாக இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர்  தினசரி பருக வேண்டும். அதே சமயம், உணவு மேசையில் அமர்ந்ததும் தண்ணீர் பருகுவதும் உணவு உண்ட உடனே பருகுவதும் கூடாது.  இதனால், உணவில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நீரால் அடித்துச்செல்லப்பட வாய்ப்புள்ளது. மேலும், உடல் உஷ்ணமாகி செரிமானம்,  பைல்ஸ் போன்ற தொந்தரவுகளும் வரும். உணவு உண்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பும், உண்ட பிறகு இருபது நிமிடங்கள் கழித்தும்  நீர் பருகலாம். மிகுந்த அவசியம் எனில் உணவு வேளையின்போது அரை டம்ளர் பருகலாம். தவறு இல்லை.


தேன்… கசக்கும் கலப்பட ரகசியம்

இந்தக் காலத்தில் தேனில் சுத்தமான தேன் என்பதே இல்லை என்று துணிந்து கூறலாம். மலைத் தேன், கொம்புத் தேன், பொந்துத் தேன்,  புற்றுத் தேன், மனைத் தேன் என இயற்கையாகக் கிடைத்த தேனை பலவகைப்படுத்தி வைத்திருந்தனர் நம் முன்னோர். ஆனால், தற்போது  தேனீ வளர்ப்பு மூலம் தேன் எடுக்கப்பட்டாலும் சுத்தமான தேன் கிடைப்பது குதிரைக்கொம்புதான். சர்க்கரைப் பாகு, சுகர் சிரப் உட்பட  பல்வேறு இனிப்பு ரசாயனங்கள் கலந்த தேனைத்தான் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்கூட விற்கின்றன. துளித் தேனை ஒரு பிளாட்டிங்  காகிதத்தில் விடும்போது தண்ணீர் போல் அது காகிதத்தில் கரைந்தால் அது கலப்படத் தேன். அதே போல் தெளிவான தண்ணீரில் தேன்  துளிகளை விடும்போது, கம்பி போல் சீராக கீழிறங்கும். நீரில் கரைந்துகொண்டே சென்றால் அதுவும் கலப்படத் தேன்தான்.

எக்ஸ்பர்ட் விசிட்


நாம் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக நமக்காக எப்போதும் துடித்துக்கொண்டிருப்பது நம் இதயம் மட்டும்தான். அந்த இதயத்தை  இதமாக வைத்திருக்கத் தேவையான டயட் டிப்ஸ்களைத் தருகிறார் இந்தியாவின் புகழ் பெற்ற டயட்டீஷியன் கீதா ஷெனாய். ரிபைண்டு கார்போஹைட்ரேட் எனப்படும் செயற்கை சர்க்கரைப் பொருட்களைத் தவிர்த்திடுங்கள். இன்சுலினையும் ட்ரைகிளிசரேட்டையும்  சட்டென அதிகரித்து சர்க்கரை நோயை உருவாக்கி, இதயத்தை தாக்கும் மோசமான உணவுகள் அவை.எண்ணெயில் பொரித்த உணவுகளை  இயன்றவரை தவிர்த்திடுங்கள். ஆசைக்கு சிறிது சாப்பிடலாம் தவறு இல்லை. அடிக்கடி அவற்றைச் சாப்பிடுவது தவறு.

ஆடை நீக்கப்பட்ட பாலில் டீ, காபி, தயிர், மோர், பனீர் தயாரித்து உண்ணுங்கள். ப்ராசஸ் செய்யப்பட்ட சீஸ், மயோனைஸ் போன்றவற்றை  அறவேதவிர்த்திடுங்கள். முழுதானியங்கள், பருப்புகள், கோதுமை, மல்டி க்ரைன் ரொட்டி ஆகியவற்றைச் சாப்பிடுங்கள்.தினசரி உணவில்  வெந்தயம், ஃபிளக்ஸ் விதைகள் போன்றவை இருக்கட்டும்.மீன், கோழி போன்ற வெள்ளை இறைச்சிகளை உண்ணலாம். ஆடு, பன்றி  போன்றவற்றை அளவாகச் சாப்பிடலாம். விலங்குகளின் ஈரல், கிட்னி, மூளை போன்ற உறுப்புகளை அளவாகச் சாப்பிடுங்கள். அதுதான்  நமது இதயத்துக்கு நல்லது.காய்கறிகள், பழங்கள், தானியங்களை நிறைய சாப்பிடுங்கள்.

-இளங்கோ கிருஷ்ணன்