மேற்குலகின் மையம்



சரஸ்வதி சீனிவாசன்

அமெரிக்கப் பயணக் கட்டுரை

மினி தொடர்


மினியோபோலிஸில் இருந்தவற்றைப் பார்த்து முடித்து பின், வேறு சில இடங்கள் பார்க்க முடிவெடுத்தோம். அதனால் இயற்கை எழில்  கொஞ்சும் துளுத்திற்கு கிளம்பினோம். முழுவதும் துறைமுகம் அமைந்த இடம் துளுத். நகருக்குள் பார்க்க வேண்டிய இடங்களுக்கு சில  மணிகள் கார் சவாரி செய்தால் போதும். ஆனால் துளுத்துக்குச் செல்ல கிட்டத்தட்ட கனடாவின் அருகில் வரை செல்ல வேண்டும். நீண்ட  தூர கார் பயணம். எனவே துணிமணிகள் பேக்கிங் செய்து கொண்டு இரவு தங்குவதற்கும் வசதிகள் செய்துகொண்டோம். முடிந்தவரை நல்ல  உணவு வகைகள் தயார் செய்துகொண்டும் சில உணவு வகைகளை சூடு செய்து சாப்பிட  வசதியாக எலக்ட்ரிக் ஸ்டவ் ஒன்றும் எடுத்துச்  சென்றோம். இப்பொழுது அங்கே தங்குவதற்கான வசதிகள் எல்லாம் அங்குள்ளன. சில காலங்கள் முன்பு அப்படிப்பட்ட வசதிகள் எதுவும்  அங்கு இல்லாத போதும் அங்குள்ள இயற்கையை ரசிப்பதற்காகவே மக்கள் இரவு கூடாரங்கள் அமைத்துத் தங்குவார்கள் என்று  சொல்லப்படுகிறது.

பொதுவாக, இங்கு நாம் பார்க்கப் போகும் அனைத்து இடங்களையும் இணையதளத்தில் பதிவு செய்துவிட்டால் போதும். நம் காரியங்கள்  சுலபமாகவும் விரைவாகவும் நடக்கும். அனைத்தும் உடனுக்குடன் செயல்படும். அங்கு சென்றபின் நாம் எதற்காகவும் தேடி அலையத்  தேவையில்லை. சில நேரங்களில் நாங்கள் கிளம்பும்முன் எல்லாம் பதிவாகி இருக்கிறதா? எத்தனை மணிக்கு அங்கு இருக்க வேண்டும்  என்பது போன்ற விஷயங்களை போனில் சரிபார்த்துவிட்டுத்தான் போவோம். ஒவ்வொரு பிரிவிற்கும் தரப்பட்டுள்ள நம்பர்களை அழைத்தால்  நமக்குள்ள சந்தேகங்களை தெளிவாக விளக்கிவிடுவார்கள்.நமக்குக் கோடை விடுமுறை வந்தால், வெளியூரிலிருந்து சென்னை வரும்  மக்கள் மெரீனா பீச்சிலும் வி.ஜி.பி.யிலும் எப்படி கூடுவார்களோ அதைப்போல் இங்கே பல மடங்கு கூட்டம் கூடுகிறது.

இங்கே உலகப் பிரசித்திப் பெற்ற ஒரு இடம் என்றால், அது லேக் சுப்பீரியர். இந்த லேக் சுப்பீரியர் வடஅமெரிக்காவின் மிகப்பெரிய ஏரி.  அதன் கிரிஸ்டர் கிளியர் தண்ணீர் அப்படி ஒரு அழகு. இதன் நீலநிற நீர் அப்படியே வானம் நீரில் மிதப்பது போன்று காட்சி தரும். இதன்  அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அந்த நீல ஏரி நீர் பேக்கிரவுண்டில் யாராவது புகைப்படம் எடுக்க மறப்பார்களா? அதில்  மாலை நேர சூரியன் மறைவது மற்றுமோர் அழகு. மினசோட்டாவைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஏரிகள் காணப்பட்டாலும் லேக் சுப்பீரியரின்  அழகே தனிதான்.இளம் வயது மாணவர்கள், புதுமணத் தம்பதியர், வெளியூரிலிருந்து வந்தவர்கள் எல்லாம் குழுவாக ஒன்று சேர்ந்து கூடிக்  கொண்டாடுவதற்கு ஏற்ற இடம். அப்படி ஒர் இயற்கைக் காற்றுடன் கூடிய ரம்மியமான சூழ்நிலையில் வசித்து, அந்த இயற்கைக் காற்றை  சுவாசித்தால், நம் உடல்நலக் கோளாறுகளே பறந்துபோகும். அப்படியே உடல்நலக் கோளாறு இருந்தாலும் அத்தகைய சூழலில் நம்  உடல்நலம் பற்றி யோசிக்கவே மாட்டோம். அங்கு இப்பொழுது நிறைய ஹோட்டல்கள், அடுக்குமாடிக் கட்டடங்கள், பங்களாக்கள், தங்கும்  விடுதிகள், ஏரி வீடுகள் என சுற்றிலும் நிறைய தங்குமிடங்கள் உள்ளன. முன்கூட்டியே புக் செய்துவிட்டு சென்றால், தங்குமிடம் வசதியாக  அமைந்துவிடும். வாடகைக் கார்களும் சுலபமாகக் கிடைக்கும்.

பொதுவாக அமெரிக்காவில், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இடங்களிலெல்லாம் நீச்சல் குளங்கள் இருக்கும். இயற்கை  காட்சிகளுக்கிடையே திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு வந்து திருமணம் செய்து கொள்கின்றனர். வேறு அலுவலக  சந்திப்புகள், கேளிக்கை விருந்துகள் என பலவித சிறப்பு நிகழ்வுகளும் இங்கே நடத்துவார்களாம். மிகப்பெரிய நீலவண்ண ஏரி லேக்  சுப்பீரியர் என்பது. இங்கே நிறைய சுரங்கப் பாறைகள் உண்டு. மிகவும் உயர்வான பாறைக் கற்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இது மட்டுமா? பார்ப்போருக்குப் பிடித்துப்போகும் கப்பல் துறைமுகம் மிகவும் அழகாகக் காட்சி தருகிறது. நாள் முழுவதும் நீர்ப்பயணம்  செய்வதற்கான அத்தனை வசதிகளும் இங்கே  எளிதாகக் கிடைக்கின்றன.

அத்தகைய காட்சிகளைப் பார்த்ததில் எனக்கு நகரவே மனம் வரவில்லை. என் மகனோ, ‘‘அம்மா இன்னும் எவ்வளவு இருக்கு பார்ப்பதற்கு’’  என்று உற்சாகப்படுத்தி அவ்விடத்திலிருந்து என்னைக் கிளப்பினான். அந்த லேக் வாக் சுகமான நடை. மேலும் மேலும் நடக்க தூண்டும்.  இங்குள்ள மீன்பிடித்துறையை மிகவும் பிரபலமானதாகக் கூறுகிறார்கள். துளுத்தையே இருப்பிடமாகக் கொண்ட பலர் இங்கே  மீன்பிடித்தொழிலில் சிறப்பாக ஈடுபட்டிருக்கிறார்கள்.  புதிய முறைகளையும், பலவிதமான தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி மீன்பிடித்  தொழில் நடைபெறுவதாகவும்  அம்மக்கள் கூறுகிறார்கள். மாலை வேளைகளில் சூரிய அஸ்தமனம் முடிந்து, சந்திரன் ஒளி நீரில்  படும்பொழுது அதன் அழகே தனி. மேகக் கூட்டங்களின் செம்மையான நிறம் அற்புதம் போன்று காட்சி தரும். அந்த நேரத்தில் ஜில்லென்ற  ஏரி நீரில் படகு சவாரிக்கென்று போட்டி போடுகிறார்கள். இதை முக்கூடல் எனலாம்.காரணம் ஒருபக்கம் மினசோட்டா, இங்கு லேக்  சுப்பீரியர், மற்றொரு புறம் விஸ்கான்சின். இங்குள்ள மீன்கள் பாதுகாப்பான முறையில், பத்திரமாக பதப்படுத்தப்படுவதாகவும்  சொல்கிறார்கள்.

நீரோட்ட சவாரி அரை நாள் மற்றும் முழு நாளுக்கும் நடைபெறுகிறது. வீட்டை மறந்து, வீட்டுப் பிரச்னைகளை மறந்து, ஏதோ ஒரு  கனவுலகில் இருப்பது போல் இருந்தது.சிலர் அங்கு இரவு முழுவதும் தூங்காமல் படகு சவாரி மேற்கொண்டார்கள். வெகு அருகில் கப்பல்  தளங்களைப் பார்த்து ரசிப்பதற்காகக்கூட சிலர் இங்கே வருவதுண்டு. அட்லாண்டாவிலிருந்தும் இங்கே கப்பல்கள் வருவதாகச்  சொல்கிறார்கள். துறைமுகம் அருகே அவ்வளவு அற்புதமான அக்வேரியம் அமைந்துள்ளது. சரித்திர மற்றும் சுற்றுலா சம்பந்தப்பட்ட  விஷயங்களும் இங்கே ஏராளம். புத்தகக் கண்காட்சியும் இருந்தது. பிட்கர்ஸ் அருங்காட்சியகம் மற்றும் மிருகக்காட்சி சாலையும் உண்டு.  இந்த சுற்றுலாவைப் பொறுத்தமட்டில் கல்வி, இலக்கியம் சம்பந்தப்பட்ட அழகிய சுற்றுலாவாகவே அனைவருக்கும் அமையும்.

கோடையில் ஏரி நடைப்பயணம் 8 மைல்கள் நடந்தாலும் துளிகூட சிரமம் தெரியாது. அப்படியொரு மகிழ்ச்சியான அனுபவம். வழிகளில்  ரெஸ்டாரெண்டுகள் இருந்தன. இதை ட்ரெயில் சிட்டி என்று கூட சொல்வார்களாம். எனக்கு மிகவும் பிடித்தமான ஈங்கர் டவர் (Enger  Tower) ஸ்பிரிட் மவுண்டன் (Spirit Mountain) போன்றவற்றை விட்டு நகர முடியாமல் நின்றேன். மிகச்சிறந்த கோடை வாசஸ்தலம்  என்றுகூட இதைச் சொல்லலாம். கப்பலுடன் அழகான புகைப்படங்கள் எடுக்கலாம். நடைப்பயிற்சி மட்டுமில்லாமல், ஐஸ் நடைப்பயிற்சியும்  உண்டு. இங்குள்ள வளைந்து செல்லும் மலைப்பகுதிகளில் சைக்கிள், பைக் ஓட்டமும் நடைபெறுகிறது. கார் ரேஸ், சைக்கிள் ரேஸ்களுக்கு  பயிற்சி எடுப்பார்கள். இங்கே மிகவும் பிரபலமான இரும்புத்தாது பாறைகள் நிறைய இருக்கின்றன. ஒரு பாறையில் அமைக்கப்பட்டுள்ள  லைட் ஹவுஸ் பிரமாதம். இந்த லைட்ஹவுஸ்-ல் ஒரு தனிச்சிறப்பைக் கண்டேன். அதன் மேல்பாகம் நாம் பயன்படுத்தும்ஹரிக்கேன்  விளக்கு போன்றே தோற்றமளித்தது. நான் பார்த்தவரை இங்குள்ள பல ஹோட்டல்களில், நிறைய ஹரிக்கேன்  விளக்குகள் போன்ற  விளக்குகள் உள்ளன.

ஏரிகள் பல கொண்ட நகரங்களில் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட நகரமாக இருக்கிறது துளுத். இப்போதும்எவ்வளவோ வசதிகள்  இங்கே வந்த பிறகும், சிலர் கூடாரம் அமைத்துத் தங்கி இயற்கை எழிலை ரசிக்கவே விரும்புகிறார்கள். குளிர்கால ஐஸ்  விளையாட்டுக்களும் நிறைய உண்டு. குழந்தைகளுக்கும் பலவித ஊக்கம் தரும் விளையாட்டுக்கள் உண்டு. மனிதவளத்துறையின் மூலம்  குழந்தைகளின் மூளைக்கு வளர்ச்சியைத் தரக்கூடிய விஷயங்களை கண்டறிந்து அதன் அடிப்படையில் விளையாட்டுக்களை  வடிவமைத்திருக்கிறார்கள். இவை அறிவியல், தொழில் நுட்பம், கணிதம் போன்றவற்றில் ஆர்வத்தை ஏற்படுத்தி குழந்தைகள் வாழ்வில்  முன்னேற்றத்தைத் தரும். இயற்கைச் சூழலில் தியேட்டர் வசதி, திருவிழா பார்க், இசைக் கச்சேரிகள் என அனைத்தும் களை கட்டுகின்றன.  கடலில் சிறிய விமானம் பார்க்க அசத்துகிறது.

உன்னிப்பாக பார்த்தால் பறவையின் கண்கள் போன்று அது காணப்படுகிறது. அதற்கும் அனுமதி பெற்றுச் சென்று பார்வையிடலாம்.உள்ளே அமைக்கப்பட்ட தண்ணீர்க்குளம் குழந்தைகளுக்கான நீச்சல் குளமாக அமைந்துள்ளது. வெளியில்  திறந்தவெளி நீச்சல் குளமும்  உண்டு. மற்ற இடங்களைப் போன்றே அழகிய வண்ணமயமான ரோஸ் கார்டன் உண்டு. இவ்வளவு எழிலான துளுத்-ல் ஹெலிகாப்டர்  ரைடும் உண்டு. குறைந்த பணத்தில், நிமிட நேரத்தைப் பொறுத்து, ஹெலிகாப்டரில் சுற்றி ஜாலியாகப் பார்க்கலாம். இங்குள்ள சிறப்புக்களை  அவ்வளவு சுலபமாக எழுதிவிட முடியாது. இங்கே செல்ல வாய்ப்பு கிடைத்தால் அதை நழுவ விடவே கூடாது. துளுத் சென்று வந்தபிறகு,  இரண்டு நாட்களுக்கு நான் என் வேலைகளையே மறந்து விட்டேன். அந்த இடத்தைப் பற்றிய நினைவிலே மிதந்து கொண்டிருந்தேன்.

(பயணம் தொடரும்!)

எழுத்து வடிவம்: ஸ்ரீதேவி மோகன்