துணிந்து சொல்



பா.ஜ.க வின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பயணித்த விமானத்தில் பா.ஜ.கவை எதிர்த்து முழக்கமிட்ட மாணவி சோபியாவை  காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான அரசியல் கட்சிகள் கண்டன அறிக்கை விடுத்தன. பல்வேறு  அமைப்புகளும் கைது நடவடிக்கைக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஜனநாயகத்தில் ஓர்  அரசியல் கட்சி குறித்த விமர்சனங்களை எழுப்புவது சட்ட விரோதமா என்கிற கேள்வி பொதுச்சமூகத்தினரிடையே  எழுந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து சமூக செயற்பாட்டாளர் கல்பனா கருணா கரனிடம் கேட்டபோது, “ஜனநாயக நாட்டில் ஒரு அரசியல் கட்சி பற்றி  ஒருவர் தன்னுடைய விமர்சனத்தை முன்வைப்பது என்பது அரசியல் சாசனம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய அடிப்படை உரிமை. தான்  சார்ந்த கட்சியின் மீது எழுப்பப்படும் விமர்சனத்திற்கு சரியான பதில் அளிப்பதே அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களின் கடமையே தவிர  தன்னுடைய அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி கைது செய்யச்சொல்வது இல்லை. பாரதிய ஜனதா கட்சியின் கடந்த கால செயல்பாடுகள்  சகிப்புத்தன்மை இல்லாத ஒரு கட்சி என்பதை மிகத் தீவிரமாக உணர்த்தி வருகிறது.அதன் வெளிப்பாடுதான் தமிழிசை சௌந்தர்ராஜனின்  செயலில் பார்க்க முடிந்தது.

ஓர் அரசியல் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் தமிழிசை சோபியாவின் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லியிருக்கலாம் அல்லது  சோபியா கூறிய கருத்து குறித்து விவாதித்து இருக்கலாம். அதை விட்டுவிட்டு என்னிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்தை  பயன்படுத்தி நான் யார் என்று காட்டுகிறேன் என்பது போல நடந்துகொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது. கூடுதலாக இனி யாரும் பாரதிய  ஜனதா கட்சியை பற்றி விமர்சிக்கவே கூடாது என்று அச்சுறுத்துவதைப்போல் சோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்குவது போன்ற  முயற்சிகளில் ஈடுபட்டது அவர்களின் அதிகார வன்மத்தை வெளிப்படையாகக் காட்டியிருக்கிறது. இவர்களின் இத்தகையஒடுக்கு  முறைகளுக்கு பிறகுதான் இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் விஸ்வரூபம் எடுத்தது. அடக்குமுறைகளுக்கு எதிராக அனைவரும்  தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் நிலை எப்படி இருக்கிறது என்பதை  அக்கட்சி உணர்ந்திருக்கும்” என்கிறார் கல்பனா கருணாகரன்.

- ஜெ.சதீஷ்