கலப்பட தேனுக்கு நிரந்தர தீர்வு



தேன் என்பது நம்முடைய பாரம்பரிய உணவுப் பொருளாகும். அதில் கலப்படங்கள் அதிகமாகிக் கொண்டே போவதால் அதற்கு முற்றுப்புள்ளி  வைக்கும் விதமாக மத்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தேன் பிரியர்களுக்கு  மகிழ்ச்சி தரக்கூடியதாக அமைந்துள்ளது.மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட ஓர் அற்புத உணவுப் பொருள் தேன் ஆகும்.
தேனை  உட்கொள்ளும் மனிதன் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததாக பல ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. இந்தியாவில் 30 லட்சம் தேனீ  வளர்ப்பு குழுக்கள் மூலம் ஆண்டுக்கு 90 ஆயிரம் டன் தேன் தயாராகிறது. இதில் தண்ணீர் அளவு 17 முதல் 70 சதவிகிதம், சர்க்கரை  அளவு 40 முதல் 80 சதவிகிதம். மேலும் சிலிக்கா, மாங்கனீஸ், தாமிரம், கால்சியம், குளோரின், பொட்டாசியம், கந்தகம், பாஸ்பரஸ்,  மெக்னீசியம், அலுமினியம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கி உள்ளன.

பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில்  இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன. தூய தேனில் தண்ணீர் உட்பட  வேறு எந்தப் பொருட்களும் கலந்திருக்காது. பொதுவாக சுத்தமான தேன் மஞ்சள் நிறத்தில் காணப்படும். அதில் வெள்ளை நிறம்  வருவதற்காக பல்வேறு கலப்படப் பொருள் கலக்கப்படுகிறது. அது உடலுக்கு நன்மை செய்வதை விட தீமையே செய்யும். தேன் மற்றும்  தேன் பொருட்களில் கலப்படத்தை தடுக்க மத்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது  உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.

தேன் மற்றும் தேன் பொருட்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு சுக்ரோஸ், குளுக்கோஸ், மகரந்த அடர்த்தி உள்ளிட்ட 18 அம்சங்கள் இடம்  பெற்றிருக்க வேண்டும். சுக்ரோஸ் அளவு அதிகபட்சம் 5 சதவிகிதத்திற்குள் இருக்க வேண்டும். ஒரு கிராம் தேனில் அதிகபட்ச ஈரப்பதம் 20  சதவிகிதம், மகரந்த அடர்த்தி 25 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேனின் உபபொருட்களான தேனீ மெழுகு, ராயல் ஜெல்லி  ஆகியவற்றுக்கும் தர நிர்ணய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தேன் என்ற பிராண்டில் விற்பனை செய்யப்பட்டால் அதில்  உணவுப்பொருள் சேர்க்கைகள் எதுவும் இடம்பெறக் கூடாது.

தேனின் மூலக்கூறுகளில் தரம் குறையும் வகையில் சூடுபடுத்தவோ அல்லது பதப்படுத்தும் முறைகளையோ கையாளக்கூடாது. குறிப்பிட்ட  மலர்கள் அல்லது தாவரங்களில் இருந்து எடுக்கப்பட்ட தேன் எனில் உற்பத்தி செய்யும் இடம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும்  லேபிள் மீது அச்சிடப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.ஆண்டுக்கணக்கில் ஆனாலும் கெட்டுப் போகாத ஓர் அற்புதம் தேனாகும்.  தற்போதைய சூழ்நிலையில் வளர்ப்புத் தேனீக்கள் மூலம் கிடைக்கும் தேன் பெருகிவிட்டதால் வியாபார சந்தையை பெருக்குவதற்காக  பல்வேறு நிறுவனங்கள் கலப்படத் தேனை அதிகளவில் புழுக்கத்தில் விட்டுள்ளது. மத்திய உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் இந்த  அறிவிப்பை எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொண்டு எது நல்ல தேன்..? எது கலப்படத் தேன் என்று தரம் பார்த்து வாங்குவது நம்  ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

எது நல்ல தேன்?

ஒரு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்ப வேண்டும். அதில் ஒரு சொட்டு தேனை விடவேண்டும். தண்ணீரில் கரைந்தால் அது கலப்படத் தேன்.  கரையவில்லை என்றால் சுத்தமான தேன் ஆகும்.

மூன்று வகை தேனீக்கள்

தேனீக்களில் ராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ என மூன்று வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உடல்  அமைப்பைப் பெற்றுள்ளன. இந்த மூன்று தேனீக்களின் கூட்டணியில் உருவாவதுதான் தேன் கூடாகும்.

- எம்.எஸ்.மணியன்