தண்டவாளம் ஏறிய சாதனைஆவடியில் இருக்கும் ஆலிம் முகமது சாலிஹ் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சேர்ந்து ‘ஸ்மார்ட் இந்தியா  ஹேக்கத்தான் (Hackathon) 2018’ இறுதிப்போட்டியில் முதல் ரன்னர் அப் பரிசை தட்டி வந்து சாதனை புரிந்திருக்கிறார்கள். ஒரு லட்சம்  மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் 12000 குழுக்கள் இடம்பெற்றிருந்தன. இதுதான் உலகளவில் நடைபெற்ற மிகப்பெரிய  ஹேக்கத்தான். இந்திய அரசாங்கத்தால் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்று சாதனை புரிந்ததை குறித்து மாணவிகள் கௌசாரி தபுசம்  மற்றும் சுமனா நம்மிடம் பகிர்ந்து கொண்டவை...

“ஆண்டுதோறும் நடைபெறும் உலகின் மிகப்பெரிய ஹேக்கத்தான் போட்டிகள், மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக  நிகழ்ந்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழில்நுட்ப மாணவர்கள் தங்கள் தொழில்நுட்பத்திறனை  வெளிப்படுத்தும் தளமாக இது திகழ்கிறது.இதுவரை ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் சாஃப்ட் வேர் சொலூயூசன்’ போட்டிகள்தான்  நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. இந்த 2018ல் தான் முதல் முறையாக ஹார்டுவேருக்கான ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் ஹார்டுவேர்  சொலூயூசன்’ நடத்தப்பட்டது. இது தேசிய அளவிலான போட்டி. ஆவடியில் இருக்கும் ஆலிம் முகமது சாலிஹ் காலேஜ் ஆஃப்  இன்ஜினியரிங்கில் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்தோம். எங்களுடைய ஜூனியர்  மாணவர்களோடு இணைந்து இந்த ப்ராஜெக்டை ஆரம்பித்தோம். இது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாகத்தான் இருந்தது. இந்தப் போட்டிகள்  வேறு மாநிலங்களில் நடக்கும் என்பதால் பலர் பின்வாங்கினார்கள்.

ஒரே எண்ணமும் சிந்தனையும் திறனும் உடைய நாங்கள் ஒரு குழுவாக ஒன்று சேர்ந்தோம். மொத்தம் எங்கள் குழுவில் ஆறு பேர். நாங்கள்  இருவர் மட்டும் பைனல் இயர். எங்கள் குழுவைச் சேர்ந்த நௌசத் சாகிப், முகமது இப்ராஹிம், அமீரத் உதீன், முகமது சல்மான் ஆகியோர்  எங்கள் ஜூனியர்ஸ். இதில் நௌசத் சாகிப்தான் எங்கள் குழுவின் தலைவர். ‘எம்பளஸ்’ என்பது எங்கள் குழுவின் பெயர். முதல்ல  எங்களுக்குள் சேர்ந்து ஹார்டுவேர் சொல்யூசன் ஐடியாவை உருவாக்கினோம். கல்லூரியில் முதலில் ஒப்புதல்  வாங்கினோம். அதன்  பின்னர் எங்கள் கல்லூரியும், பேராசிரியர்களும் எங்கள் ப்ராஜெக்ட்டை நாங்கள் செய்ய மிகவும் உதவியாக இருந்தார்கள். இந்த ப்ராஜெக்ட்  உருவாக்க இரவு பகல் பாராது பணியாற்றி இருக்கோம். எங்கள் கல்லூரி நிறுவனமும் எங்களுக்கு உதவியாக இருந்தது.இந்த ஹேக்கத்தான்  போட்டிக்கு மொத்தம் 12000 ப்ராஜெக்ட் பேப்பர்கள் (ஹார்டுவேர் சம்பந்தப்பட்ட மாடல்கள்) சப்மிட் செய்யப்பட்டன. அதாவது 12000  குழுக்களில், ஒவ்வொரு குழுவிலும் 6 பேர்.

அதில் சில சுற்றுகளுக்குப் பின் 700 பேப்பர்கள் செலக்ட் செய்யப்பட்டன. பின்னர் 600. இப்படி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்ற தேர்வில்  ஃபில்டர் செய்யப்பட்டன. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இறுதிப்போட்டிக்கு டாப் 31 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒவ்வொரு  கட்டமாக நாங்கள் தேர்வாகி டாப் 31 குழுவில் இடம்பெற்றோம். பத்து மையங்களில் இந்தத் தேர்வுகள் நடந்தன. இந்த இறுதிப்போட்டி  மொத்தம் 5 நாட்கள் நடைபெற்றன. எங்களுக்கு கோயம்புத்தூரில் உள்ள ‘ஏசிடி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி’  கல்லூரியில் நடைபெற்றது. அங்கே இண்டன்ஷிப் மாதிரி. எங்களுக்கு லேப் வசதிகள் எல்லாம் தரப்பட்டன. எங்கள் ப்ராஜெக்டை  விஷுவலாக ஒப்படைக்க அந்த லேப் வசதிகள் எங்களுக்கு உதவியாக இருந்தன.

நாங்கள் தயாரிக்கும் இந்த ப்ராஜெக்ட்டுகளுக்கான பேடன்ட் உரிமையை எங்கு வாங்குவது போன்ற பல தகவல்கள் குறித்து ஒவ்வொரு  பிரிவாக எங்களுக்கு நிறைய வகுப்புகள் நடத்தப்பட்டன. நான்கு வருடங்கள் படித்து கற்றுக்கொள்ள முடியாத சில விஷயங்களை  பிராக்டிக்கலாகப் பார்க்கும்போது, செய்யும்போது நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த விஷயங்களை பார்க்கும் போது  பயங்கர ஆர்வமாக இருந்தது. அது ஒரு முழுமையான வாழ்வியல் அனுபவம். இந்த மாதிரி விஷயங்கள் பொறியியல் கல்லூரி  மாணவர்களுக்கு அவர்களுடைய கல்லூரியிலே கிடைத்தால் இன்னும் பொறியியல் படிப்பு ஆர்வம் கொள்ளக்கூடியதாய் இருக்கும் என்று  தோன்றியது. எங்கள் தீம் Import Substitution.நாம் நாட்டில் இல்லாத தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களை இறக்குமதி செய்வதற்குப்  பதிலாக நாமே உருவாக்குவது. அதாவது இறக்குமதி செய்ய வேண்டிய விஷயங்களை ரீப்ளேஸ் செய்வது.

பொதுவாக ரயில்வே ட்ராக் லைனை செக் செய்ய கேங் மேன் தினமும் வெகு தூரம் நடக்க வேண்டி இருக்கும். பல மைல் தூரம் நடந்து  தண்டவாள விரிசல்களை கண்டறிய வேண்டி இருக்கும். அப்படி கண்காணித்தாலும் சில நேரங்களில் தவறு நேர்ந்து விடுதல் உண்டு.  அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. நாங்கள் கண்டறிந்திருப்பது ரயில்வே ட்ராக் லைன் மானிட்டர். ரயில்வே லைனில் நகர்ந்து  சென்று எந்த இடத்தில் விரிசல் என்பதை கண்டறிந்து அந்த குறிப்பிட்ட இடத்தின் லோகேஷன் மற்றும் விரிசல் விழுந்த இடத்தின்  படத்தினை அனுப்பி வைக்கும். இந்த ரயில் தண்டவாளத்தில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டறியும் பிரிவில் மாற்று இறக்குமதி தீமில்  ஸ்மார்ட் சோலார் ரயில்பாதை தவறு கண்டறியும் முறையினை செயல்படுத்தி முதல் ரன்னர்அப் இடத்தையும் ரூ. 75,000 பரிசுத்  தொகையையும் வென்றோம்.ரயில் பாதைகளில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் மனிதர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது நேரம் மற்றும் உழைப்பின் அடிப்படையில் செலவீனமாகவும் கடினமாகவும் திகழ்கிறது.இப்பிரச்சனைகளுக்குத் தீர்வாக மல்டிபிள்  சென்சார்கள் கொண்டு சிக்கல்கள் ஏதுமின்றி பொருத்தமான இ-வெஹிகிள் (e-vehicle) உதவியுடன் ரயில் தண்டவாளத்தில் ஓடவிடப்  படுகிறது. இந்த வெஹிகிளின் பெயர் Inspectroid. இது ரயில்வேஸ் டெவலப்மென்டுக்கு உதவும்.இது சென்சார்கள் மற்றும் வீடியோ கேமரா  உதவியுடன் ரயில் தண்டவாளத்தில் ஏற்படும் பிரச்னைகளை கண்டறியும்.ஜிபிஎஸ் அமைப்பானது தவறு நேர்ந்த இடத்தை (தண்டவாளத்தில்  விரிசல் விழுந்துள்ள இடத்தை) கண்டறிந்து பராமரிப்புக் குழுவிற்கு எச்சரிக்கையும் செய்கிறது. அதன் பின்னர் குறிப்பிட்ட இடம் தெரிந்த  பின் அதனை சரி செய்வது சுலபம்.

மேலும் இந்த சாதனம் தரவுக் குறிப்புகளை பதிவு செய்யும் முறையானது பின்வரும் காலங்களில் உதவிகரமாக திகழும். இந்த வெஹிகிள் ரீசார்ஜபிள்தான்.எங்களுடைய ப்ராஜெக்ட் குறைந்த செலவிலான ப்ராஜெக்ட் தான்.  இந்தப் போட்டியில் பங்கேற்றபோது இறுதியாண்டு  படித்துக்கொண்டிருந்தோம். இப்போது கல்லூரி முடித்துவிட்டோம். இனி இந்த ப்ராஜெக்டை இண்டஸ்ட்ரி லெவலுக்கு எடுத்துச் செல்ல  வேண்டும். அப்போது தான் இது முழுமை அடையும். நிறைய மாறுதல்கள் செய்ய வேண்டி இருக்கும்.அதற்கான நிதி உதவ  கேட்டிருக்கிறோம். பேடண்ட் உரிமை வாங்கிவிட்டு வேலைகளை தொடரவேண்டும். முதலமைச்சர் கூப்பிட்டு பாராட்டினாங்க. அரசிடம்  உதவி கேட்டிருக்கிறோம்’’ என்கிறார்கள்.

                          
- ஸ்ரீதேவி மோகன்