செய்து பாருங்கள்



இறால் வடை

என்னென்ன தேவை?

கடலை மாவு அல்லது பொட்டுக்கடலை மாவு - 1 கப்,
சுத்தம் செய்த பொடியான வெள்ளை இறால் - 1 கைப்பிடி அளவு,
முட்டை - 1,
மஞ்சள் தூள் - சிறிது,
மிளகுத்தூள், மிளகாய்த்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம்,
பச்சைமிளகாய் - தலா 1,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?


கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி இறால், மஞ்சள் தூள் போட்டு 2 நிமிடம் புரட்டி எடுக்கவும். முட்டையில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து  நன்றாக அடித்துக் கொள்ளவும். பாத்திரத்தில் வதக்கிய இறால், முட்டை கலவை, மற்ற அனைத்து பொருட்களையும் போட்டு நன்றாக  கலந்து சிறு சிறு வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்ெதடுத்து பரிமாறவும்.

சுறா குழம்பு

என்னென்ன தேவை?

பால் சுறா - சிறியது 1,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள், மிளகுத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் - தலா 1,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
புளிக்கரைசல் - 1 கப்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - 1 கப்,
சாம்பார் வெங்காயம் - 10,
பூண்டு - 5 பல்,
நல்லெண்ணெய் - 50 கிராம்,
கடுகு, வெந்தயம், சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு.

எப்படிச் செய்வது?


சுறாவை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேகவைத்து தோல் நீக்கிக் கழுவி, உதிர்க்காமல் சிறு துண்டுகள் போடவும். கடாயில்  நல்லெண்ணெயை காயவைத்து கடுகு, வெந்தயம், சீரகம் தாளித்து சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி நறுக்கிய வெங்காயம்,  தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு போட்டு  வதக்கி 1½ கப் தண்ணீர், புளிக்கரைசல் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். சுறாத் துண்டுகளை போட்டு இறக்கி மல்லித்தழை,  கறிவேப்பில்லை தூவி இட்லி, பூரி, சப்பாத்தி, சாதத்துடன் சூடாக பரிமாறவும்.

இறால்-உருளைக்கிழங்கு குழம்பு

என்னென்ன தேவை?


இறால் - 1 கப்,
உருளைக்கிழங்கு அல்லது முருங்கைக்காய் அல்லது வாழைக்காய் - 1,
வெங்காயம், தக்காளி - தலா 1, இ
ஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
புளிக்கரைசல் - 1 கப்,
கல் உப்பு - தேவைக்கு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவைக்கு,
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
தூள் உப்பு - தேவைக்கு,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
கசகசா - 1 டீஸ்பூன்,
கடுகு, வெந்தயம், சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்,
கடலை எண்ணெய் - 25 கிராம்.

எப்படிச் செய்வது?

தேங்காய்த்துருவல், கசகசாவை சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, வெந்தயம், சீரகம்,  கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி நன்றாக வதக்கி நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கு  சேர்த்து வதக்கவும். பின்பு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு கிளறி கல் உப்பு, தேவையான அளவு  தண்ணீர் ஊற்றி மூடவும். பாதி வெந்ததும் புளிக்கரைசல் சேர்க்கவும். குழம்பு தளதளவென்று கொதிக்கும் பொழுது இறாலை சேர்க்கவும்.  பின்பு தேங்காய் விழுதை தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றி கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி நுரைக்கட்டும் பொழுது இறக்கவும்.  

வாளை மீன் வறுவல்


என்னென்ன தேவை?

வாளை மீன் - 1,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 5,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
மஞ்சள் தூள் - சிறிது,
சின்ன வெங்காயம் - 5,
தக்காளி - 1,
செக்கு கடலை எண்ணெய்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெங்காயம், தக்காளியை சேர்த்து அரைக்கவும். தேங்காய், பச்சைமிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில்  எண்ணெயை காயவைத்து அரைத்த வெங்காய விழுது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி மஞ்சள் தூள், உப்பு,  தேங்காய் விழுது, 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்பு மீன் துண்டுகளை போட்டு தண்ணீர் வற்றும் வரை திருப்பி போட்டு  சிவக்க எடுக்கவும். சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் பரிமாறவும்.

- சு.கெளரிபாய், பொன்னேரி.