என் இனிய எந்திரா...
அழகு நிலையங்களில் அழகுக் கலை நிபுணர்கள் ப்ளீச், ஃபேஷியல் போன்றவற்றைச் செய்யும்போதும், பல்வேறு விதமான மின்னணு  உபகரணங்களைக் கையாளுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அந்த உபகரணங்களின் பெயர் மற்றும் அவை எதற்கு  பயன்படுத்தப்படுகின்றன என்கிற விபரங்கள் எதுவும் நமக்கு தெரியாது. அவற்றை தெரிந்துகொள்ளவும் நாம் நினைப்பதில்லை. மின்னணு  உபகரணங்கள் பற்றிய கேள்விகளோடு அழகுக் கலை நிபுணரும், ‘ப்யூட்டி டச் & ஸ்பா’ என்கிற நிறுவனத்தை இயக்கி வருபவருமான ரக்  ஷய லதாவை அணுகியபோது…

நீங்கள் பார்லர்களில் பார்க்கும் மெஷின்கள், முகத்தில் இருக்கும் அதிகப்படியான சோர்வைக் குறைத்து, முகத்தை மினுமினுப்பாக  ஆக்குவதோடு, கண் மற்றும் வாய் பகுதிக்குக் கீழ் இருக்கும் கருவளையங்கள், சுருக்கம், மேலும் கன்னங்களில் உள்ள கருப்புத் தழும்பு, மரு,  மங்கு, கரும்புள்ளிகள் போன்றவற்றை குறைக்கவும், சருமத்தை மெருகூட்டவும், தோலில் இருக்கும் எலாஸ்டிசிட்டி தன்மையினை  அதிகப்படுத்தவும் பயன்படுகிறது. மெஷின்களை பயன்படுத்துவதால் தோலில் சுவாசத்தன்மை அதிகமாகி ஆக்ஸிஜன் அளவும் அதிகமாகும்.  ரத்த ஓட்டம் சீராகும்.

இதன் விளைவாக தோல் புத்துணர்வோடு மிளிர்வதோடு, முகம் கூடுதலான மினுமினுப்புடன் காட்சி தரும்.  பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் இந்த வகை மெஷின்களை பயன்படுத்தி தங்களை அழகுபடுத்திக்கொள்வதாலே எப்போதும் வயது  தெரியாமல் இளமையாகவே தோற்றம் அளிக்கின்றனர். மேலும் மெஷின்களைப் பயன்படுத்தியே முகத்தை லிப்ட் செய்ய முடியும்  என்பதால் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய அவசியம் இல்லை.மெஷின்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், அவற்றைக் கையாளத்  தெரிந்தவர்கள், அதற்கென பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் மட்டுமே முறைப்படியான சிகிச்சையை  செய்தல் வேண்டும்.

கெல்வானிக் மெஷின் (Galvanic machine)


இது மசாஜ் கொடுப்பதற்கெனப் பயன்படும் பிரத்யேக மெஷின். இதில் நிறைய மாடல்கள் தற்போது வருகின்றன. முகத்திற்கு சீரம், ஜெல்  என எதையாவது அப்ளை செய்த பிறகே இந்த மெஷினை பயன்படுத்தி மசாஜ் கொடுத்தல் வேண்டும். பெரும்பாலும் முகத்தில் அதிகமாக  சுருக்கம் உள்ளவர்களுக்கே பயன்படுத்தப்படுகிறது. சுருக்கம் மட்டுமல்லாமல், முகத்தில் இருக்கும் மங்கு, தழும்புகள், கரும்புள்ளிகள்  இவற்றை நீக்கவும், இவை வருவதற்கு முன்பே வராமல் தடுப்பதற்கும் பயன்படுகிறது. இந்த மெஷினை உபயோகிக்கும்போது, பாசிட்டிவ்  அண்ட் நெகட்டிவ் எனர்ஜி இரண்டும் இதில் வெளிவரும். இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சிகிச்சை எடுப்பவரின் இயல்பான  நிறத்தை மீட்டெடுக்க முடியும்.

அல்ட்ரா சோனிக் மெஷின் மற்றும் சூப்பர் சோனிக் மெஷின்


இவை இரண்டும் ஒன்றே. இவற்றில் 5 இன் 1, 3 இன் 1, 2 இன் 1 எனப் பல வகை உள்ளன. இந்த வகை மெஷின் நமது தோலுக்கு  அடியில் 5 மில்லிமீட்டர் வரை உள் சென்று அதிர்வு அலைக் கதிர்களை ஆழமாக உட்செலுத்தும். அப்போது முகத்தில் உள்ள தசையின்  நிறத்திண்மை (டோனிங்)  அதிகம் ஆகி முகத்திற்கு புத்துணர்வு கிடைக்கும். ஒரு சிலருக்கு கன்னங்கள் ஒட்டியே இருக்கும். இந்த வகை  மெஷின்கள் மூலமாக, அவர்களின் ஸ்கின்னை உப்பின மாதிரியாக தசைகள் மற்றும் தோலை மேல்நோக்கி உப்பி வரும்படி (லிஃப்ட்)   செய்யலாம். வயது முதிர்வின் காரணமாக முகத்தில் தொங்கும் சதைகளை அறுவை சிகிச்சை செய்யாமலே இந்த வகை மெஷின்களைக்  கொண்டு ஸ்கின் லிஃப்ட் செய்ய இயலும்.சூப்பர் சோனிக் மெஷினில் 5 வண்ணங்களில் பட்டன் இருக்கும். ஒவ்வொரு நிறத்துக்கும்  ஒவ்வோர் அளவு அதில் ஏற்கனவே பொருத்தப்பட்டிருக்கும். சிகிச்சைக்கு வருபவர்களின் வயதை அறிந்து, அதற்கேற்ப வண்ண  பட்டன்களை அழுத்தி மின் அதிர்வு அலைகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

ஹை ஃப்ரீக்வென்சி மெஷின்

இந்த மெஷின் கரும் புள்ளிகள் மற்றும் முகப்பரு தழும்புகளை சரி செய்ய பயன்படுகிறது. எண்ணெய்ப் பசையுள்ள தோலை வறண்ட  சருமமாக மாற்றலாம். இந்த  இயந்திரத்தை இயக்கும்போது மட்டும் மெல்லிய இரைச்சல் வரும். அதிர்வு சற்றே அதிகமாக இருக்கும்.  இதில் நான்கு முதல் ஐந்து இணைப்புகள் உண்டு. யாருக்கு எந்தவிதமான சிகிச்சை தேவையோ, அந்த இணைப்பை பயன்படுத்தி  பயன்படுத்தலாம். பெரும்பாலும் தோலின் மினுமினுப்புக்காகவும் தலையில் இருக்கும் பொடுகை சரிசெய்யவும் பயன்படுகிறது.

கன் ஷூட் மெஷின்

காது, மூக்கு குத்தவும், பெண்கள் காது மடல்களின் பக்கங்களில் வரிசையாகத் துளையிட்டு ஆபரணங்களை அணியவும் கன் ஷூட் மெஷின்  பயன்பாட்டில் உள்ளது. துளையிடும் இடத்தில் ஜெல் அப்ளை செய்து கன் ஷூட் பாயின்டில் கம்மலை வைத்து ஷூட் செய்வார்கள். இது  காதில் தேவையான இடத்தில் சரியாக பொருந்திவிடும். ஒருவாரம் தாங்கிக்கொள்ளும் அளவில் இயல்பான வலி மட்டுமே இருக்கும். இது  உடல்களில் அணிகலன்களை அணிய விடும்புபவர்கள் துளையிடுவதற்கான ஒரு எளிய முறை. அவ்வளவே.

ஃபேஸ் ஸ்டீமர் மற்றும் ஹெட் ஸ்டீமர் மெஷின்


இது ஆயில் மசாஜ், ஹேர் ஸ்பா இதெல்லாம் செய்யும்போது பயன்படுத்தப்படுகிறது. தலைக்கு நன்றாக மசாஜ் கொடுத்த பிறகே ஹெட்  ஸ்டீமர் செய்யப்படும். இதன் விளைவாக தலையில் இருக்கும் துளைகள் திறந்து நாம் பயன்படுத்தும் எண்ணெய், க்ரீம் போன்றவை இறங்கி  கொஞ்சம் ஆழமாக சுத்தம் செய்யும். 5 முதல் 7 நிமிடங்கள்வரை மட்டுமே ஹெட் ஸ்டீமரை பயன்படுத்த வேண்டும். ஸ்டீமர்  இல்லாதவர்கள் டர்க்கி டவலை சுடு தண்ணீரில் நனைத்து தலையில் கட்டி வைக்கலாம். வீட்டில் பயன்படுத்துவதற்கென குட்டி குட்டி  ஸ்டீமர்கள் இப்போது சந்தைகளில் கிடைக்கின்றன. ஃபேஸ் ஸ்டீமர் என்றால் 2 முதல் 3 நிமிடங்கள் கொடுத்தாலே போதும். பொடுகு  உள்ளவர்கள் தலைக்கு ஸ்டீமர் எடுக்காமல் இருப்பதே மிகவும் நல்லது.

யாரெல்லாம் மெஷின்களை பயன்படுத்துதல் கூடாது?


இதய நோயாளி, இதய பலவீனமானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள், பய உணர்வு கொண்டவர்கள், உயர் ரத்த அழுத்தம்  கொண்டவர்கள், முகத்தில் காயங்கள் உள்ளவர்கள், உடலில் ஏதாவது உலோகம் பயன்படுத்தி இருப்பவர்கள், உதாரணத்திற்கு பல்லுக்கு  பதிலாக செயற்கை முறையில் உலோகத்தால் செயப்பட்ட பல்  பயன்படுத்தியிருப்பவர்கள், முகத்திற்கு கெமிக்கல் ஃபீலிங் செய்தவர்கள்  பயன்படுத்தக் கூடாது. மிகவும் லேசான மின் அலைகள் மெஷின்களில் இருந்து வெளிப்படுவதால், உடம்பில் எந்தவகையான உலோக  ஆபரணங்கள், சேஃப்டி பின்கள், மெட்டல் ஹேர் கிளிப்புகள் போன்றவற்றை அணிந்து மேலே உள்ள மெஷின்களை பயன்படுத்துதல்  தவறான செயல்.மெஷின்களை பயன்படுத்துவதோடு நிறுத்தாமல், சத்தான காய்கறிகள், கீரைகள், பழங்கள் மற்றும் பழச்சாறுகளையும்  தினமும் உணவில் மாற்றி மாற்றி எடுப்பதன் மூலமாகவே இயற்கை அழகும் இணையும்.

- மகேஸ்வரி
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்