வாழ்வென்பது பெருங்கனவு



கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்

தான் கண்ட கனவுகள் எவை, அவை நிறைவேறினவா இல்லையா என்பது குறித்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் நாகை மாவட்டம்  சிக்கவலம் கிராமத்தில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராகவும், திராவிடர் கழகத்தின் மாநில மகளிர் பாசறையின் செயலாளராகவும்  இரு தளங்களில் பயணிக்கும்   கோ.செந்தமிழ்ச்செல்வி. “மனித வாழ்வு பிறப்பு என்னும் தொடக்கத்தையும், இறப்பு என்னும் முடிவையும்  கொண்டிருந்தாலும் இரண்டுக்கும் இடையே நாம் வாழும் நாட்களில் எத்தனையோ தேடல்கள். அந்த தேடல்களை நாம் பல பெயரிட்டு  அழைக்கலாம்.
தேடல் என்பதற்குள் சொல்லும், செயலும் இணைந்திருக்கும்.நம் எண்ணங்கள், ஆசைகள், குறிக்கோள்கள், கொள்கைகள்,  இலக்குகள் போன்றவற்றிற்கான தேடல்களே கனவுகளாக இருக்க முடியும். கனவு என்ற சொல்லை உச்சரிக்கும்போது அய்யா அப்துல்  கலாம் அவர்களின் கனவு பற்றிய வார்த்தைகளை எப்படி நினைக்காமல் இருக்க முடியும். தூங்கும்போது வருவதல்ல கனவு. தூங்காமல்  இருக்கச் செய்வதே கனவு என்றார்.

குழந்தைப் பருவத்தில் கனவு என்று நாம் சொல்வது, தூங்கும்போது ஏதோ ஒரு செயல் நடப்பது போல நாம் நினைத்துக் கொள்வது. அது  நனவிலி நிலையில் நம் மனம் நினைக்கும் ஏதோ  ஒன்றைப் பொருத்தது அந்தக் கனவு. அது தூங்கி எழுந்தவுடன் கனவு கலைந்து விடும்.  நானும் அது போல் பல கனவுகளை கண்ட அனுபவம் உண்டு. சிறு வயதில் நான் செய்த தவறை என் அப்பாவிடம் காட்டிக் கொடுத்த  கனவு. நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது, மிட்டாய் வாங்க கடைக்குச் சென்றேன். ஆனால் என் அப்பாவுக்கு கடைக்குச் சென்றால்  பிடிக்காது. நாங்கள் வீட்டை விட்டு, தனியாக செல்லுமிடம் பள்ளிக்கூடம் மட்டுமே. என் அப்பா வெளியூர் சென்றிருந்தபோது, அப்பா  இல்லை என்ற தைரியத்தில் கடைக்குச் சென்று விட்டேன்.

ஆனால் நான் கடையில் நிற்கும் போது, எங்கள் வீட்டிற்கு வரும் அப்பாவின் நண்பர் அதைப் பார்த்து விட்டார். ‘அப்பா வரட்டும் நான்  சொல்லி விடுகிறேன், நீ கடைக்கு வந்தாய் என்று’ என என்னிடம் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு சென்று விட்டார். அன்று நான்  அடைந்த பயத்தை இன்றும் நினைத்துப் பார்க்க முடிகிறது. அன்று இரவிலிருந்தே தூங்கும்போது அதே நினைவு. அவர் வந்து அப்பாவிடம்  சொல்வது போலவும், அப்பா என்னை அடிப்பது போலவும் பகலில் நினைவு. இரவில் கனவு. ஒரு நாள் தூக்கத்தில் கனவில் நான்  உளறுகிறேன். அப்பா என்னை அடிக்காதீங்க. கடைக்குப் போக மாட்டேன்.
இதே வார்த்தைகளை திரும்ப திரும்ப சத்தமாக சொன்னபோது,  பக்கத்தில் படுத்திருந்த அம்மா, அப்பா இருவரும் எழுந்து, ‘ஏம்மா என்ன தூக்கத்தில் என்ன உளறுகிறாய்’ என எழுப்பிக் கேட்ட போது, நான்  நடந்ததை கூறினேன். உடனே அப்பா என்னை தட்டிக் கொடுத்து, செய்த தவறை எண்ணி பயப்படுகிறாய், வருந்துகிறாய். அது போதும்.  நான் உன்னை அடிக்கவில்லை என சொன்னார்கள். நான் இன்னமும் பெற்றோருக்கு கீழ்படிதல் என்ற தளத்தில், என்னிடம் படிக்கும்  மாணவர்களிடமும், என் குழந்தைகளிடமும் இந்த கனவை பகிர்வதுண்டு.

அடுத்து திட்டமிட்ட கனவு வாழ்க்கையின் சில கட்டங்களில் சொல்லொனா  மகிழ்ச்சியை தரும். குறிப்பாக அளவுக்கு அதிகமாக நேசிக்கும்  காதலர்கள், நண்பர்கள், குடும்ப உறவுகளில் இவ்வகை கனவு மிக சுவாரஸ்யமாக இருக்கும். இந்த கனவுகளுக்குள் ஒரு வரம்பு இருக்காது.  அதீத கற்பனை இருக்கும். அவர்களுக்கு பிடித்த பொருளையோ, ஆடையையோ, அவர் களுக்கே தெரியாமல் நாம் அதை வாங்கி,  அவர்களிடம் கொடுக்கும் முன்பு, கற்பனையில் கனவாக காண்பது இருக்கிறதே! சொல்ல முடியாது அதை. உணர்ந்தால் தெரியும்.
லட்சியக் கனவு என்பது மாணவப் பருவ இறுதியில் அவர்களின் மீதியுள்ள   வாழ்க்கைக்கான பொருளாதாரத் தேடலாக இருக்கும். என்  வாழ்க்கையிலும் இந்த கனவுக்கான தேடல் இருந்தாலும், என் கனவைவிட, என் அப்பாவின் கனவு என்னை மாற்றியமைத்தது.  மாற்றிக்கொள்ளச் செய்தது. ஆம்! எந்த ஒரு தொழிலையும், பொருளாதாரத்தோடு மட்டுமல்லாமல் மனிதம் காக்கின்ற செயலாகவும் செய்ய  வேண்டுமென்ற கனவு. என்னுள் மேலோங்கியபோது நான் ஒரு  செவிலியர்  ஆக கனவு கொண்டிருந்தேன்.

என்னோடு பிறந்தவர்கள் ஒரு தங்கை. ஒரு தம்பி. குடும்பத்தில் நான்தான் முதல் குழந்தை. ஆகவே என் அம்மாவோடு, அம்மாவுக்குத்  துணையாக அதிகம் வெளியில் செல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்படியாக உறவினர்களை, ஊர், உறவுகளை நோயுற்ற காலத்தில் பார்க்கச்  சென்றபோது, நோயாளிகளுக்கு மருத்துவத்தோடு அன்பும், அரவணைப்பும் தேவை என்பதை உணர்ந்தேன். என் எதிர்காலக் கனவாகவும்  அதைக் கொண்டேன். ஆனால் அது நனவாகும் நிலையில் வாய்ப்புகள் இருந்தும், என் அப்பா ஆசிரியர் என்பதால், அவர் கனவு என்னை  ஆசிரியராக்க வேண்டும் என்பதாக இருந்ததால், என் கனவு மாற்றியமைக்கப்பட்டது. என் அப்பா சொன்ன ஆசிரியர் பணிக்குள்ளும் அதே  மனிதம் இருப்பதை அவர் உணர்த்தியபோது என் கனவு ஆசிரியர் என்னும் லட்சியத்தை நோக்கி பயணித்தது. ஆசிரியர் பயிற்சி  தொடங்கும்முன், என் தந்தை கொடுத்த ஆசிரியருக்கான வரையறையும் நான் ஆசிரியர் பயிற்சி படித்த திருச்சி நாகம்மை ஆசிரியர் பயிற்சி  நிறுவனம் தந்திட்ட நெறிகளும் என்னை கடைசி வரை, மனிதம் உள்ள ஆசிரியராகவும், மாணவர்களிடம் மனிதம் வளர்க்கின்ற  ஆசிரியராகவும் வழிநடத்தும் என்பதில் ஐயமில்லை.

ஆசிரியர் பயிற்சியின் இடையிடையே நான் கேட்ட, வாசித்த, தந்தை பெரியாரின் பெண்ணுரிமை கருத்துகள், தாலி அற்ற சுயமரியாதை  திருமணம் என்னும் கனவை என்னுள் விதைத்தது. அந்த வயதில் அந்த கனவும் நிறைவேறியது. அந்த கனவு நிறைவேறியது என்னோடு  ஆசிரியர் பயிற்சி பயின்ற இதே கொள்கை கொண்ட ஒரு மனிதரால் இருவரும் படிக்கின்ற காலத்தில் ஏற்பட்ட கொள்கை ஒற்றுமையால்,  பணியேற்ற பின் நட்பு தொடர்ந்து திருமணத்தில் முடிந்தது.என்னுடைய எஞ்சிய வாழ்நாளில், பெருங்கனவாக நான் காண்பது, மனிதம்  போற்றும் இரு பணிகளையும் திறம்பட ஆற்றுவதே ஆகும். நான் என் வாழ்நாள் கனவாக நினைப்பது பொருளாதாரத் தேடலல்ல. பெண்  சமூகம் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்பதற்கான தேடல். உயிருள்ளவரை இத்தளத்தில் பயணிப்பேன்.”

-தோ.திருத்துவராஜ்