நீராலானது இவ்வுலகு




சென்னை முதல் கேரளா வெள்ள எச்சரிக்கைகள்

கடவுளின் தேசத்தில் ‘கடவுளின் கோபத்தின்’ காரணமாக வெள்ள பேரழிவு நிகழ்ந்துள்ளதாக சிலர் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.  அவர்களின் பகுத்தறியும் திறன் அவ்வளவுதான். அவர்களின் குறைபட்ட அறிவியல் மனப்பாங்கின் நிலை அவர்களை அப்படி பேச  வைக்கிறது. கேரளத்தில் நிகழ்ந்துள்ள மாபெரும் வெள்ள பாதிப்பின் காரணத்தை நாம் அறிவியல் அடிப்படையில் ஆராய்வதே தற்போதைய  தேவை.
அப்படி செய்தால் மட்டுமே இது போன்ற நிகழ்வில் இருந்து நம்மை நாம் தற்காத்து கொள்ள முடியும். இந்திய வானியல்  துறை   வெளியிட்டு  இருக்கின்ற அறிக்கையின்படி, கேரளாவில் சராசரியாக பெய்யும் மழையை விட 8 மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது.  காசர்கோடு மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களும் சராசரியை விட குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிக மழையை பெற்றுள்ளன.  அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 35 மடங்கும், கொல்லத்தில் 15 மடங்கும் சராசரியை விட அதிக மழை பெய்துள்ளது. இடுக்கியில் 206.4  மி.மீ மழையும் காசர்கோட்டில் 67 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

இதுவரை இந்த மழை வெள்ளத்தின் காரணமாக சுமார் 327 நபர்கள் உயிரிழந்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. பல லட்ச மக்கள்   முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலைமை சரியாக எவ்வளவு மாதங்கள் என்பதை கணக்கிடமுடியாது என்றும் ஏற்பட்டுள்ள  பொருட்சேதம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த மழை வெள்ளப் பேரழிவு கேரள மாநிலத்திற்கு  முதல் முறையாக இருக்கலாம், ஆனால் இத்தகைய நிகழ்வுகளை இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் தொடர்ச்சியாக சந்தித்து  வந்துள்ளன. கடந்த ஜூலை மாதத்தில் புவனேஸ்வர் நகரும், கடந்த வாரத்தில் யமுனையில் ஏற்பட்ட வெள்ளத்தால் டெல்லி நகரமும்  பாதிக்கப்பட்டன. மும்பை நகரம் அடிக்கடி திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நகரமாகிவிட்டது, 2017ஆம் ஆண்டு பெங்களூரு நகரமும்,  சென்னை 2015லும், ஸ்ரீநகர் 2014 ஆம் ஆண்டும்  திடீர்  வெள்ளத்
தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

தீவிர காலநிலை நிகழ்வுகள்

சென்னை முதல் கேரளாவரை நிகழ்ந்துள்ள மழை வெள்ள நிகழ்வை “தீவிர காலநிலை நிகழ்வுகள்” (extreme climate events) என்று  கூறுகிறார்கள். வெப்பக் காற்று, வறட்சி, சூறாவளிகள் போன்ற இயற்கைச் சீற்றங்களின் ஒரு வகையானதே மழை வெள்ள நிகழ்வும். இவை  ஒன்றும் உலகம் இதுவரை கண்டிராத நிகழ்வு அல்ல. ஆனால் இந்த இயற்கை சீற்றம் முன்பு பல ஆண்டுகள் இடைவெளியில் நிகழ்ந்தன.  தற்போது இவை குறைந்த இடைவெளியில் நிகழ்கின்றன. இதற்கு காரணம் புவி வெப்பமாகி வருவதும்,  அதன் காரணமாக நிகழ்ந்து  வருகின்ற காலநிலை மாற்றமும்தான். காலநிலை மாற்றம் காரணமாக நிகழ்ந்து வரும் இயற்கை சீற்றங்கள் – தீவிர காலநிலை நிகழ்வுகள்  என்று கூறலாம்.

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அமைப்பு, இனி வருகின்ற காலங்களில் தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகமாகும் என்றும், சில  மணி நேரத்தில் அதிகமான மழைப்பொழிவு நிகழ்ந்து திடீர் வெள்ளம் ஏற்படும் என்றும் கூறுகிறது. இந்தியாவில் இத்தகைய நிகழ்வுகள்  அதிகம் நிகழக் கூடும் என்னும் எச்சரிக்கையை கடந்த ஆண்டு  காந்திநகரிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் தந்தது. 2050ம்  ஆண்டுக்குள் புவியின் வெப்ப அளவு 1.5 முதல் 2 டிகிரி அளவிற்கு உயரக் கூடும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்படி வெப்ப  நிலை அதிகமாகின்றபோது இந்தியாவில் இதைப்போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகமாகும் என்றும் அதுவும் குறிப்பாக “குறுகிய  நேரத்தில் அதிகம் மழை பெய்யும்”  தீவிர நிகழ்வுகள் இந்தியாவில் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் மூன்று மணி நேரத்தில் மிக அதிக மழை பெய்யக்கூடிய தீவிர நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் பல மடங்கு அதிகரிக்கும்  என்றும் இவற்றை தாங்கக்கூடிய வகையில் நம்முடைய நகர வடிவமைப்புகள் இருக்கவேண்டுமென்றும் வலியுறுத்துகிறது ஆய்வு.கேரளாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இயற்கை சீற்றம் எதிர்பார்த்ததுதான் என்கிறார் சூழலியல் விஞ்ஞானி மாதவ் காட்கில். இவர்தான்  மேற்குத்தொடர்ச்சி மலைகளை பாதுகாப்பதற்கான அறிக்கையை தயாரித்த குழுவின் தலைவர். காட்கில் தலைமையிலான குழு கொடுத்த  அறிக்கையை நிராகரித்த மத்திய அரசு, கஸ்தூரிரங்கன் தலைமையில் மற்றொரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவும் தன்னுடைய  அறிக்கையை சில வருடங்களுக்கு முன்பே கொடுத்துவிட்டது. இந்தக் குழுவின் அறிக்கையும் கூட முழுவதுமாக அமல்படுத்தப்படவில்லை. காட்கில் சமர்ப்பித்த அறிக்கையை நடைமுறைப்படுத்தி  இருந்தால் இந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்காது என்று சூழலியல் அறிஞர்கள் கருத்து கூறியுள்ளனர்.

“இப்போது கேரளாவிலுள்ள நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், இது முழுமையாக மழையினால் ஏற்பட்டது அல்ல என்றும்  அதிகமானது மனித தவறுகளால்தான்” என்கிறார் காட்கில். “அறிவியல்பூர்வமற்ற முறையில் நிலமும் மண்வளமும் பயன்படுத்தப்பட்டதும்,  நீர்நிலைகளையும் சதுப்புநிலங்களையும் ஆக்கிரமித்து அந் நிலங்களின் பயன்பாட்டை மாற்றியதும்தான் முக்கிய காரணம்” என்கிறார் அவர்.

என்ன செய்ய வேண்டும்?


இந்தியாவில் உள்ள பல நகரங்கள், பல பகுதிகள் இத்தகைய தொடர் தீவிர இயற்கை சீற்றங்களை சந்தித்து வருகின்றன. இவற்றை  தனித்த நிகழ்வாக நாம் கருத கூடாது. அதுவே பல ஆய்வுகள் நமக்கு தரும் பாடம். இத்தகைய நிகழ்வுகளை நாம் தடுத்துவிட முடியாது.  ஆனால் அதனை முன்பே கண்டறிய முடியும், பாதிப்புகளை குறைக்க முடியும். இத்தகைய மாற்றங்களோடு இயைந்து வாழ கற்க வேண்டிய  காலகட்டத்திலும் நாம் இருக்கின்றோம். இதுவே  காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச அமைப்பு கூறுகின்றது.

இந்தியாவில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நம் மத்திய, மாநில அரசுகள் எத்தகைய தயாரிப்பு நிலையில் உள்ளன? விவாதிப்போம்.அதிலும் குறிப்பாக காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படக் கூடிய மழை வெள்ளப் பேரழிவுகளை எதிர்கொள்ள நமது மத்திய, மாநில  அரசுகள் தயார் நிலையில் உள்ளனவா? இதற்கான பதிலை இந்திய தணிக்கைத் துறை தந்துள்ளது. கடந்த வருடம், இந்தியாவில் வெள்ள  பாதிப்புகளை தடுப்பதற்கான திட்டங்கள் (Schemes for Flood Control and Flood Forecasting) எந்த அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளன   என்பதை இந்திய தணிக்கை குழு ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 17 மாநிலங்களில்  இந்த ஆய்வு  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆய்வில் தெரியவந்துள்ள விவரங்கள்

    
1.இந்தியாவில் சுமார் 45.64 மில்லியன் ஹெக்டேர் நிலம் வெள்ள ஆபத்து உள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.

2. பல மாநிலங்களில் வெள்ளத் தடுப்பு குறித்த திட்டங்கள் தயாரிக்கப்படவே இல்லை. திட்டங்கள் உள்ள போதிலும் அவை  அமல்படுத்தப்படாத நிலையும் உள்ளது. மேலும் மத்திய அரசு, வெள்ள பாதிப்பு தடுப்புத் திட்டங்கள் மற்றும் வெள்ள கண்காணிப்பு  போன்றவற்றிற்கு தேவையான நிதியை மாநில அரசுகளுக்கு  அளிக்காமல் உள்ளது.  பல மாநிலங்
களில் திட்டங்கள் குறைபாட்டோடுதான் உள்ளன.

(நீரோடு செல்வோம்!)