திரைகடலோடிய புகழ்



சர்வதேச புகழ்பெற்ற ‘போர்ப்ஸ்’ பத்திரிகை 2017ம் ஆண்டுக்கான உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. சொத்து மதிப்பு, சமூகத்தில் அவர் களின் மதிப்பு, அரசியல், நிர்வாகம், சார்ந்திருக்கும் தொழிலில் அவர்கள் செய்த சாதனை ஆகியவற்றின் அடிப்படையில் பல துறைகளில் சக்தி வாய்ந்த பெண்களை தேர்ந்தெடுத்து ஒவ்வோர் ஆண்டும் பட்டியல் வெளியிடுகிறது. இதில் இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த 5 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

உலகின் சக்திவாய்ந்த பெண்மணியாக ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் தேர்வாகியுள்ளார். தொடர்ந்து 12-வது ஆண்டாக உலகின் சக்தி வாய்ந்த பெண்மணியாக அவர் முதலிடம் பிடித்திருக்கிறார். இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே 2-வது இடத்தில் உள்ளார். பில்கேட்ஸ் ஃபவுண்டேஷன் தலைவர் மெலிண்டா கேஷ் 3-வது இடத்திலும், ஃபேஸ்புக் சி.ஓ.ஓ. ஷெர்ல் சான்ட்பெர்க் 4-வது இடத்திலும், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. மேரி பாரா 5-வது இடத்திலும் உள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் 19வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்தியாவின் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கித் தலைவர் சந்தா கோச்சர் 32-வது இடத்திலும், ஹெச்.சி.எல். தலைமை நிர்வாக அதிகாரி ரோஷினி 57-வது இடத்திலும், பயோகான் நிறுவனத் தலைவர் மஜூம்தார் ஷா 71-வது இடத்திலும், இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை தலைவர் ஷோபனா பார்டியா 92-வது இடத்திலும், நடிகை பிரியங்கா சோப்ரா 97-வது இடத்திலும் உள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி 11-வது இடத்தில் உள்ளார். அதேபோல் மற்றொரு அமெரிக்க வம்சாவளி பெண்ணான ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே 43-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் 32-வது இடத்தில் இருப்பவர் சந்தா கோச்சர். ஜோத்பூரில் வளர்ந்து மும்பையில் வசிக்கிறார். 55 வயது நிறைந்த இவர் ஐ.சி.ஐ.சி.ஐ.ன் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். இந்தியாவின் பொருளாதாரத் துறையில் பல வீழ்ச்சிகளில் இருந்து தனது நிறுவனத்தை தடுத்து நிறுத்தியவர். இவர் இந்திய அரசின் மிகச் சிறந்த விருதான பத்மபூஷண் விருதையும் பெற்றிருக்கிறார்.

சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 92-வது இடத்தைப் பிடித்துள்ளார் ஷோபனா பார்டியா. ஹிந்துஸ்தான் டைம்ஸின் உரிமையாளரும், தொழிலதிபர் கே.கே. பிர்லாவின் மகளும் ஜி.டி.பிர்லாவின் பேத்தியுமான ஷோபனா பார்டியா ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை எடிட்டோரியல் இயக்குனர் மற்றும் தலைவராக இருக்கிறார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் மின்ட் பத்திரிகைகளை இந்நிறுவனம் வெளியிடுகிறது.

ஷோபனாவின் தலைமையில் இந்நிறுவனம் தனது செயல்பாடுகளை விரிவடையச் செய்து தொடர்ந்து பல தளங்களில் இயங்கி வருகிறது. எஃப்.எம் ரேடியோ, இணைய தளம், வேலை வாய்ப்பு தளம், சினிமா தளம், மற்றும் சமூக தளம், டிஜிட்டல் மீடியா என்று பல பிரிவுகளைக் கொண்டு இயங்கி வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு ‘மின்ட் ஏசியா’ எனும் பிசினஸ் வார இதழையும் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தினார் ஷோபனா பார்டியா.

97-வது இடத்தைப் பெற்றிருக்கும் பிரியங்கா சோப்ரா உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய நடிகை ஆவார். 2000ல் உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா, பாலிவுட், ஹாலிவுட் என இரண்டிலும் புகழ் பெற்ற முன்னணி நடிகை. குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ணத் தூதுவராகவும் செயல்பட்டு வருகிறார். ‘ஃபேஷன்’ படத்திற்காக தேசிய விருதை வென்றவர். ‘குவாண்டிகோ’ ஆங்கில சீரியலில் நடித்ததன் மூலம் அமெரிக்க தொலைக்காட்சித் தொடரில் இடம் பெற்ற முதல் இந்திய நடிகை எனும் சிறப்பும் இவருக்கு உள்ளது.

சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 57-வது இடத்தைப் பிடித்திருக்கும் ரோஷினி மல்ஹோத்ரா பிரபல தொலைக்காட்சியில் செய்தி தயாரிப்பாளராக பணியைத் துவக்கியவர். பின்னர் தனது தந்தை ஷிவ் நாடாரின் ஹெச்.சி.எல். நிறுவனத்திலேயே பணியாற்றினார். ஹெச்.சி.எல். எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இவர் இருக்கிறார்.

71-வது இடத்தை பிடித்திருக்கும் மஜூம்தார் ஷா தனது 25-வது வயதில் பயோகான் நிறுவனத்தை ஆரம்பித்தார். சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான பல விருதினைப் பெற்ற இவருக்கு, உலகின் சக்தி படைத்த பெண், சிறந்த பெண் தொழிலதிபர் போன்ற விருது களை சர்வதேச பத்திரிகைகளான டைம்ஸ், ஃபோர்ப்ஸ், ஃபைனான்ஸியல் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் கொடுத்திருக்கின்றன.

இந்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். சமூக சேவைக்காக 200 கோடிக்கு மேல் செலவு செய்திருக்கும் இவர், தான் இறந்த பிறகு தன்சொத்தில் 75 சதவிகிதத்தை சமூக சேவைக்கு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

- மகேஸ்வரி