வானவில் சந்தை



உடலில் உறுதி கொள்!

சமீபத்தில், இளம் தொழில் முனைவோருக்கான உணவு மற்றும் வாழ்க்கைமுறை என்ற தலைப்பில் நடந்த ஒரு நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். பேச்சாளர் சொன்னதில் முக்கியமானது என்று நான் கருதியதை ஒரு தோழியிடம் சொன்னபோது அவர் கொந்தளித்து விட்டார். பேச்சாளர் சொன்னது இதுதான். முன்பெல்லாம் வீட்டில் பெண்கள் செய்த வேலைகளே அவர்களை உடல்நலத்துடன் வைத்திருந்தது என்றும் சிறிய வீட்டு வேலைகளே சிறிய அளவிலான உடற்பயிற்சிதான் என்றும் சொன்னார்.

உதாரணத்திற்கு, ஜமுக்காளத்தை மடிப்பதையே ஒருவர் ஒரு யோகாசனத்தைப் போல செய்ய வேண்டும் என்றார். கேட்பதற்கு நன்றாகத்தான் இருந்தது. இதையும் சொன்னபோது தோழி, ‘‘இப்ப, பரவலாக யூனிசெக்ஸ் (ஆண், பெண் இருபாலரும் செல்லும் உடற்பயிற்சிக் கூடம்) ஜிம் வந்துருச்சு. இப்ப போயி காமெடி பண்ணிக்கிட்டிருக்கீங்க” என்றார். உண்மைதான்.

பெரும்பாலான வீடுகளில், கணவன்-மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் போது கூட, கணவனுக்கு மட்டுமே உடல் நலம் தேவையானது என்பது போல காலையில் எழுந்து அவர் மட்டுமே உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்வதைக் காணலாம். உண்மையில் பெண்கள், தங்கள் குடும்பத்து ஆண்கள் அளவிற்காவது உடல் நலம் பேணுவது குறித்து சிரத்தை எடுக்கிறார்களா?

மதுரையில் உடற்பயிற்சிக் கூடம் வைத்திருக்கும் நண்பர் ஒருவரிடம் பேசியபோது, ட்ரெட்மில் (மெல்லோட்டம் செய்யும் கருவி) போன்ற சிலவற்றையே பெண்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றும், வெயிட் லிஃப்டிங் (பளுதூக்கும் பயிற்சிகள்) போன்றவை ஆண்களுக்கானது என்ற எண்ணமே பெரும்பாலும் இருக்கிறது என்றார். அவரிடம், பெண்கள் வீட்டிலிருந்தபடியே பயிற்சி செய்யும் வகையில் அமைந்த சில அடைப்படைக் கருவிகளைப் பரிந்துரைக்கச் சொன்னேன். அவை கீழே...

1. ட்ரெட்மில் (மெல்லோட்ட கருவி)

மிகவும் பிரபலமான கருவி. மேல் நடுத்தர வர்க்க வீடுகளில் கிரைண்டருக்கு அடுத்தபடி பிரபலமானது இது என்றார் நண்பர் கிண்டலாக. இவற்றை மோட்டார் வைத்தது, மோட்டார் வைக்காதது என இரண்டாகப் பிரிக்கலாம். மோட்டார் வைக்காதது தோராயமாக ஏழாயிரம் ரூபாயிலிருந்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரையில் கிடைக்கிறது. காமாச்சி (Kamachi), காஸ்கோ (Cosco), லைஃப்லைன் (Lifeline), விவா (Viva), கோபோ (KOBO) போன்ற பல பிரபலமான பிராண்டுகள் உள்ளன.

நடை, ஓட்டம் தவிர வேறு சில உடற்பயிற்சிகளும் செய்யச் சாத்தியமுள்ள வகையில் கூட ட்ரெட்மில்கள் கிடைக்கின்றன. மோட்டார் வைத்த ட்ரெட்மில்கள் பதினைந்தாயிரம் ரூபாயிலிருந்து கிட்டத்தட்ட ஆறு லட்ச ரூபாய் வரையில் பரவலான விலையில் கிடைக்கின்றன. அதில் கிடைக்கும் வசதியைப் பொறுத்து விலை கூடும். இதில் ஆஃப்டன் (Afton), ப்ரோ பாடிலைன் (Pro Bodyline), வீவா (Viva), சோல் (Sole), நார்டிட்ராக் (Norditrak) போன்ற பல பிரபலமான பிராண்டுகள் போட்டியிடுகின்றன.

2. பயிற்சி சைக்கிள்கள்

சைக்கிள்கள் ஓட்டுவது முன்பெல்லாம் நடுத்தர வர்க்கத்தின் இயல்பான போக்குவரத்து நடைமுறைகளில் ஒன்றுதான். ஆண், பெண் பேதமில்லாமல் பள்ளிக்கூடத்திற்கு சைக்கிளில் செல்வது சாதாரணம். ஸ்கூட்டர் போன்ற இருசக்கர மோட்டர் வாகனங்களின் பெருக்கம் இதைக் கொஞ்ச கொஞ்சமாக இல்லாமல் ஆக்கிவிட்டிருக்கிறது. குறிப்பாக நகரச் சாலைகளில் சைக்கிளில் செல்வது மரண பயம் ஏற்படுத்துவது. பெருநகரங்களில் நடந்து செல்பவருக்கும் சைக்கிளில் செல்பவருக்கும் எந்த மரியாதையும் இல்லை. இதில் எப்படி சைக்கிளில் பள்ளி செல்ல பிள்ளைகளை நிர்ப்பந்திப்பது? ஆக, சைக்கிள்கள் இப்போது உடற்பயிற்சி சாதனங்கள் ஆகிவிட்டன!

ஆயிரத்தைநூறு ரூபாயிலிருந்து மூன்று லட்ச ரூபாய் வரையிலான விலையில் இவை கிடைக்கின்றன. கோபோ (KOBO), லைஃப்ஸ்பான் (Lifespan), காஸ்கோ (Kosco), காமாச்சி (Kamachi), லீவே (Leeway) என்று பல போட்டியாளர்கள் உள்ளனர். ஓட்ட நல்ல இடம் இருந்தால் ஒரு சைக்கிளை வாங்கி ஓட்டுவது சிறப்பு. இவற்றில் பணத்தை முதலீடு செய்யுமுன் சில முக்கியமான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

* எதற்காக அதைப் பயன்படுத்தப் போகிறோம் என்கிற தெளிவு அவசியம். உதாரணமாக, நடைப் பயிற்சிக்குத்தான் என்றால் அதற்குத் தேவையான கருவியை மட்டும் வாங்குவதே சிறந்தது. தேவையில்லாத வீண் செலவை அது குறைக்கும். எடைக்குறைப்பு, ஓட்டம் போன்றவற்றிற்காக என்றால் அதற்கான தோதான கருவியை தேர்ந்தெடுக்க வேண்டும். தேவை குறித்த முன் சிந்தனை வேண்டும்.

* கருவியின் தரம், கட்டுமானம், சேவைத்தரம், நீடித்துழைக்கும் பண்பு ஆகியவை குறித்த விசாரணை வாங்கும் முன் தேவை. பல கடைகளில் ஏறி இறங்குவதும் நேரில் செய்முறை விளக்கம் காண்பதும் முக்கியம். அதனாலேயே இவற்றை ஆன்லைனில் வாங்குவது பொருத்தமானதல்ல. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்தபின் வேண்டுமானால் ஆன்லைனில் விலை குறைவாகக் கிடைத்தால் வாங்கலாம்.

* மோட்டார் சக்தி குறைந்தபட்சம் 1.5HP லிருந்து 2.5HP சக்தி வெளிப்படுத்தும் மோட்டாரை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் பயிற்சி செய்பவரின் எடை கூடக்கூட ஓட்டம் லகுவாக இருக்காது. சில மோட்டார்கள் சத்தம் போடும். டிசி மோட்டார்கள் சத்தம் போடாது.

* கேரன்டி மற்றும் வாரன்டி - குறைந்தபட்சம் ஒரு வருடம் காலத்திற்காவது வாரன்டி இருக்க வேண்டும்.

* கூடுதல் வசதிகள்  கடும் போட்டியின் காரணமாகவும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும் இக்கருவிகள் அளிக்கும் வசதிகள் நாள்தோறும் கூடிக்கொண்டே போகின்றன. வசதிகளை உடல்நலம் சார்ந்தவை, உடல்நலம் சாராதவை என இரண்டாகப் பிரிக்கலாம். உடல்நலம் சார்ந்த வசதிகளில் முதன்மையானது, எல்.ஈ.டி. திரையில் எரிக்கப்படும் கலோரியின் அளவு, இதயத்துடிப்பு, ஓட்டத்தின் வேகம், எடுத்துக்கொள்ளப்பட்ட காலம், ஓடிய தூரம் முதலானவை காட்டப்படுவது.

இது செய்த உடற்பயிற்சி குறித்த அளவுகளை நிர்வகிப்பதற்கு உதவும். முன்னேற்றத்தையும் அளவிட முடியும். அதே நேரம் உடல்நலம் சாராத வசதிகளையும் இக்கருவிகள் அளிக்கின்றன. ஐபாட் போன்ற mp3 இசைக்கருவிகளை இணைத்துக் கொள்ளும் வசதியும், இசை கேட்கத் தோதான வகையில் ஸ்பீக்கர்களும் கொண்ட ட்ரெட்மில்களும் சந்தையில் கிடைக்கின்றன. தேவையா இல்லையா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

(வண்ணங்கள் தொடரும்!)