ஷைனி தைரியத்தால் ஜொலிக்கும் பெண்



ஷைனி பெயருக்கேற்றபடி உலகளவில் மின்னுகிறார். சோசியல் மீடியாக்களில் இவர் குறித்த செய்தி பகிரப்படுகிறது. மீடியாக்களின் வெளிச்சத்தில் ஜொலிக்கும் அவரது புன்னகையில் வலிமையின் அழகை தரிசிக்க முடிகிறது. அப்படி என்ன செய்தார் ஷைனி? ஷைனி ராஜீவ் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள சித்தன்வேலிக்கரா பகுதியைச் சேர்ந்தவர்.

கணவர் ராஜீவ், ஒரு மகன், மகள் என வாழ்ந்து வருகிறார். மகன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டும், மகள் 9ம் வகுப்பும் படித்து வருகின்றனர். பி.ஏ. பி.எட். படித்திருக்கும் ஷைனி பஞ்சாயத்தில் அட்டண்டராகப் பணிபுரிந்தவர். அரசு வேலையில் சேர வேண்டும் என்பதற்காக கேரளா ஸ்டேட் பப்ளிக் சர்வீஸ் கமிசன் தேர்வு எழுதி வந்தார். அரசு வேலைக்கான இவரது தேர்வுப் பயணத்தில் இப்போது எர்ணாகுளத்தில் உள்ள மதுபானக் கடையில் விற்பனையாளர் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுபானக் கடையில் முதல் பெண் விற்பனையாளராக ஷைனி நியமிக்கப்பட்டதற்கு பின் ஒரு பெரிய போராட்டமே நடந்துள்ளது. அதை அவரே சொல்கிறார்... ‘‘கேரளாவில் உள்ள மதுபானக் கடையில் விற்பனையாளர் வேலைக்கு கேரள பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 2010ல் தேர்வு நடத்தியது. அதில் என்னோட சேர்ந்து நிறையப் பெண்கள் தேர்வு எழுதினாங்க. அதுல என்னோடு எட்டுப் பேர் தேர்ச்சி அடைஞ்சோம். சீக்கிரம் வேலை கிடைச்சிடும்னு சந்தோஷப்பட்டோம். ஆனா, அது வரைக்கும் மதுபானக் கடையில பெண்கள் வேலை பார்க்கலைன்றதுக்காக எங்களுக்கு வேலை தராம இழுத்தடிச்சாங்க.

கேரள உயர்நீதிமன்றத்துல என்னோடு தேர்வான எட்டு பேரும் சேர்ந்து வழக்குப் போட்டோம். அரசு வேலை எல்லாருக்கும் பொதுவானதுதானே? பெண் என்பதற்காக வேலை கொடுக்காம இருக்கிறதை எப்படி ஏத்துக்க முடியும்? அந்த வழக்கில் எங்களுக்கு நியாயம் கிடைச்சிருக்கு. அரசுப் பணியில வாய்ப்பு கொடுக்க ஆண், பெண் பேதம் பார்க்கக் கூடாது. எங்களுக்கு மதுபான விற்பனைக் கூடத்துல விற்பனையாளர் வேலை தரச் சொல்லி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு போட்டுச்சு. அதன்படி முதல் பெண் விற்பனையாளரா எனக்கு போஸ்டிங் போட்டிருக்காங்க.

கேரளாவுல கடந்த 33 வருஷமா அரசு மதுபான விற்பனைக் கழகம் நடந்திட்டிருக்கு. கேரளாவுல அரசு மதுபான விற்பனைக் கழகத்துல 350க்கும் மேல கடைகள் இருக்கு. இதுவரைக்கும் இதுல ஆண்கள் மட்டுமே விற்பனையாளரா இருந்திருக்காங்க. இவங்களும் எக்சாம்ல பாஸ் பண்ணித்தான் இந்த வேலைக்கு வந்திருக்காங்க. பெண்கள் இந்தத் துறைக்கு வரலாம்னு முடிவு பண்ணினோம். ஆண், பெண் சமம்னு பேசுறோம். சம உரிமை கேட்டுப் போராடுறோம். ஆனா வாய்ப்புள்ள இடங்கள்ல நாம அமைதியா இருந்துட்டா உரிமைகள் எப்படிக் கிடைக்கும்?

ஆணால முடியுற விஷயம் பெண்ணால முடியாதுன்றதை என்னால ஏத்துக்க முடியாது. ஆணுக்கு இணையா எல்லாத் துறைகள்லயும் பெண்கள் வரணும். அதனாலதான் மதுபானக்கடைல விற்பனையாளர் பணிக்கு தேர்வு எழுதினோம். பெண்கள் உரிமை எடுத்துக்க முன்வந்தாலும் யாரும் உடனே கொடுத்துட மாட்டாங்கன்றது எங்க விஷயத்துல இருந்தே புரிஞ்சுக்கலாம். கேரள அரசாங்கம் நடத்துன தேர்வுல பாஸாயிருந்தாலும் வேலை கொடுக்க தயங்கினாங்க. பெண் திறமையைத் தாண்டி உரிமைக்காக போராட வேண்டிய நிலையில்தான் இருக்கிறாள்.

போராட்டத்துக்கு அப்புறம் கிடைச்ச வாய்ப்பு இது. முதல் நாள் வேலைக்குப் போனப்போ ரொம்ப சந்தோஷமா இருந்தது. மதுபானக்கடைல நான் பார்க்குறது க்ளெரிக்கல் வொர்க் தான். எந்த வேலைலயும் பெண்களுக்கு அரசு பாதுகாப்புக் கொடுக்குது. பெண்கள் தைரியமாகவும், தன்னம்பிக்கையாகவும் வெளியில வரணும். சவாலான துறைகள்ல இருக்கிற அரசு வேலைகளுக்கு பெண்கள் வரணும். நாம துணிஞ்சு வந்தா இந்த சமூகம் நமக்கு பாதுகாப்பு கொடுக்கும்.

எந்தப் பிரச்னை வந்தாலும் நம்மால சந்திக்க முடியும் என்கிற தைரியம் கண்டிப்பா பெண்களுக்கு வேண்டும். தைரியமான பெண்களை இந்தச் சமூகம் கொண்டாடும், பாதுகாக்கும். நான் முயற்சி பண்ணினேன். துணிஞ்சுதான் இந்த வேலைக்கு வந்தேன். மதுபானக் கடையில் வேலை பார்க்கும் முதல் பெண்ணுன்ற அடையாளம் எனக்கு கிடைச்சிருக்கு.

நான் ஒரு ரோல்மாடல் பெண்ணா மாறியிருக்கேன்றது அவ்வளவு சந்தோஷமான விஷயம். பெண் என்பதை ஒரு குறையாக நினைத்து பெண் எந்த இடத்திலும் தயங்க வேண்டியதில்லை. ஆண் செய்யும் எந்த வேலையையும் ரொம்பத் திறமையா பெண்களாலயும் செய்ய முடியும். அந்த நம்பிக்கை வேணும்’’ என்கிறார் ஷைனி.

- யாழ் ஸ்ரீதேவி