பாசிப் பருப்பு - கார்ன் ஃப்ளேக்ஸ்



டிக்கி பர்கர்

பர்கர் செய்ய 1 மணி நேரம்


என்னென்ன தேவை?


பாசிப் பருப்பு - 1/3 கப்
கார்ன்ஃப்ளேக்ஸ் - 1/2 கப்
கேரட் - 1
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பர்கர் பன் - 2
சீஸ் - 2 ஸ்லைஸ்
வெங்காயம் - 1
தக்காளி - பாதி
பால் - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 2 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பிரெட் தூள் -  1/4 கப்.

 எப்படிச் செய்வது?


பாசிப் பருப்பை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஊறும்போது கேரட்டை துருவிக் கொள்ளவும். பாசிப் பருப்பை ஒரு கடாயில் போட்டு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அளவாகச் சேர்த்து, குழையாமல் வேக வைத்து எடுக்கவும். கார்ன்ஃப்ளேக்ஸை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். வேக வைத்த பாசிப் பருப்பை, தண்ணீர் இல்லாமல் எடுத்து, ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, பொடித்த கார்ன்ஃப்ளேக்ஸ், கேரட் துருவல், கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக பிசையவும்.

பிசைந்த கலவையை சம அளவு உருண்டைகளாக உருட்டித் தட்டி வைக்கவும். ஒரு சிறிய கிண்ணத்தில் பாலை எடுத்து, அதில் இந்த பாசிப் பருப்பு டிக்கியை ‘டிப்’ செய்து, உடனே ரொட்டித் தூளில் பிரட்டவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, ரொட்டித் தூளில் பிரட்டியதை வைத்து, இரண்டு பக்கமும் சிறிது எண்ணெய் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வைத்து எடுக்கவும். சூடான டிக்கி தயார்!

பர்கர் பன்னை கூர்மையான கத்தியால் கீறவும். தனியாக வெட்ட வேண்டாம். சிறிது பிளந்து கொண்டால் போதும். அதற்குள் மூங் தால் டிக்கியை வைக்கவும். அடுத்து வெங்காயம் மற்றும் தக்காளியை  வட்டமாக நறுக்கி வைத்து, ஒரு சீஸ் ஸ்லைஸ் வைத்து மூடி பரிமாறவும். டொமோட்டோ கெட்சப் சரியான காம்பினேஷன்!

உங்கள் கவனத்துக்கு...


தேவைப்பட்டால் டிக்கியை டீப் ஃப்ரை செய்யலாம். பிரெட் தூளுக்குப் பதிலாக, 1/4 கப் கார்ன்ஃப்ளேக்ஸை பொடித்து அதில் பிரட்டி எடுக்கலாம்.