என் அம்மா



அம்மாவோடு சேர்ந்து பார்த்த 2 ஆயிரம் படங்கள்!

தயாரிப்பாளர், திரைப்பட ஆர்வலர், ஆய்வாளர், எழுத்தாளர், ‘யு டி.வி.’ மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தென்னக தலைமை அதிகாரி... இப்படிப் பன்முகங்கள் கொண்டவர் ஜி.தனஞ்செயன். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவர்.  ‘‘எனக்குக் கிடைத்த அத்தனை வெற்றிகளுக்கும் பின்னால் இருப்பவர்கள் பெண்கள் மட்டுமே’’ என்கிறார் தனஞ்செயன்.  இன்று திரைப்படத்துறையில் இயங்கி வரும் தனக்கு, அன்றைக்கே அஸ்திவாரமிட்டவர் தன் அம்மாதான் என்பதில் தனஞ்செயனுக்கு தாங்க முடியாத பெருமையும் கூட! சினிமா குறித்த சிறந்த எழுத்துக்கான (பிரைடு ஆஃப் தமிழ் சினிமா) தேசிய விருதையும் அம்மாவுக்கே சமர்ப்பித்த படி பேச ஆரம்பிக்கிறார்.

‘‘மூணு ஆம்பளைப் பசங்களுக்கு அப்புறம் பிறந்தவன் நான். எனக்கப்புறம் ஒரு தங்கச்சி. ஆனாலும், எங்கம்மாவுக்கு நான்தான் செல்லம். எங்களோட பூர்வீகம் செஞ்சி அகரம்னு ஒரு சின்ன கிராமம். அது ஆந்திரா பார்டர்ங்கிறதால அம்மா நல்லா தெலுங்கு பேசுவாங்க. அம்மாவுக்கு ரொம்ப சின்ன வயசுலயே கல்யாணமாயிருச்சு. அவங்க அற்புதமான சினிமா ரசிகை. என் அண்ணன்கள் மூணு பேருக்கும் சினிமா பிடிக்கவே பிடிக்காது. அதனால, தியேட்டருக்கு போக ஒரு ஆண் துணை வேணும்னு, என்னோட மூணாவது வயசுலேருந்து அம்மா என்னையும் சினிமா பார்க்கக் கூட்டிட்டுப் போக ஆரம்பிச்சாங்க. எனக்கும் அது பிடிச்சிருந்தது. ஊத்துக்கோட்டையிலயே மூணு தியேட்டர் இருக்கும்.

அதுல தமிழ், தெலுங்குனு மாத்தி மாத்தி படங்கள் ஓடும். ஒரு படம் அதிகபட்சமா மூணு நாள் ஓடினாலே பெரிசு. அதுலேயும் பழைய படங்களாத்தான் இருக்கும். ஸ்கூல் விட்டு வந்ததும் படிப்பெல்லாம் முடிச்சிட்டு, ஈவினிங் ஷோ பார்க்க அம்மாவும் நானும் கிளம்பிடுவோம். என்னிக்காவது விசேஷம்னா மட்டும்தான் தியேட்டருக்கு போக மாட்டோம். என்னோட 3 வயசுலேருந்து 12 வயசு வரை கிட்டத்தட்ட 2 ஆயிரம் படங்கள் பார்த்திருப்பேன்!’’வியப்பில் வாய் பிளக்க வைக்கிறது தனஞ்செயன் சொல்லும் தகவல்.

அப்பா திட்ட மாட்டாரா?


‘‘திட்டாம இருப்பாரா? ‘புள்ளையைக் கெடுக்கறே’னு அம்மாவைத் திட்டுவார் அப்பா. அவங்க அதைக் காதுலேயே போட்டுக்க மாட்டாங்க.  வரிசையா நாலு ஆம்பளைப் புள்ளைங்க...

அப்புறம் ஒரு பொண்ணு... எப்படிக் கரையேத்தப் போறோம்கிற கவலை அப்பாவுக்கு. அப்பா விவசாயம்தான் பார்த்துக்கிட்டிருந்தார். மிடில் கிளாஸ் குடும்பம்தான். ஆனாலும், நான் ஆசையா கேட்ட எதையும், அம்மா இல்லைன்னு மறுத்ததில்லை. விளைச்சல் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் விற்பனைக்கு அனுப்பறதுக்கு முன்னாடி, அதுலேருந்து கொஞ்சம் கொஞ்சம் எடுத்து என்கிட்ட கொடுத்து, ‘போய் வித்துக்கோ’னு சொல்லுவாங்க அம்மா.

எங்க வீடு கஷ்டப்பட்டாலும் நான் சுகமாவே இருந்திருக்கேன். எருமைப்பால்ல உறை ஊத்தின கட்டித் தயிரை எடுத்து வச்சு, ‘எனர்ஜி வரும்’னு எனக்குக் கொடுப்பாங்க. அப்பாவுக்குக்கூட கொடுக்க மாட்டாங்க. ‘அம்மாவும் புள்ளையும் வீட்ல தனி ராஜ்யமே நடத்தறாங்க’னு அப்பா சத்தம் போடுவார்!’’‘‘ஸ்கூல் விட்டு வந்ததும் அம்மா முந்தானையைப் பிடிச்சுக்கிட்டு, அவங்க பின்னாடியே நின்னுட்டிருப்பேன். ஆனாலும், படிப்புல நான் பயங்கர சுட்டி. ஸ்கூல்ல டீச்சர் பாடம் எடுக்கிறதுக்கு முன்னாடியே படிச்சு முடிச்சிடுவேன்.  எங்க கிராமத்துல அப்ப எல்லாம் போஸ்ட்மேன்தான் நியூஸ்பேப்பர் கொண்டு வருவார். அதையும் முதல்ல நான் வாங்கிப் படிச்சிட்டு, மத்தவங்களுக்கு செய்திகள் சொல்வேன்.

அதனால எனக்கு ‘அதிகப்பிரசங்கி’, ‘முந்திரிக்கொட்டை’னு நிறைய பட்டப்பெயர்கள் உண்டு. என்னை அப்படியெல்லாம் கூப்பிடறதுல அம்மாவுக்கு ரொம்பப் பெருமையும்கூட!ப்ளஸ்டூவுல மாவட்டத்துலேயே முதலாவதா வந்தேன். எனக்கு இன்ஜினியரிங் படிக்கணும்னு ஆசை. ரெண்டு அண்ணன்கள் சென்னையில இருந்தாங்க. ஒரு அண்ணன் மட்டும் அப்பாவுக்கு உதவியா விவசாயம் பார்த்துக்கிட்டிருந்தார். உரம் தெளிக்கிறது, தண்ணி பாய்ச்சறதுனு நானும் அவங்களுக்கு உதவியா இருந்திருக்கேன். அண்ணன் கூட இருந்து நானும் விவசாயத்தைப் பார்த்துக்கணும்னு அப்பா ஆசைப்பட்டார். எனக்கு அதில சம்மதமில்லை. வீட்ல பெரிய சண்டை ஓடிட்டிருந்தது. இப்படியே போயிட்டிருந்தப்ப ஒருநாள் அம்மா அவங்களோட 10 சவரன் நகையை என்கிட்ட கொடுத்து,
‘நீ வீட்டை விட்டு ஓடிடு’ன்னாங்க.

எனக்கும் அதுதான் சரியாப்பட்டது. சென்னையில எங்களுக்கு ஒரு வீடு இருந்தது. அந்த சாவியையும் என்கிட்ட கொடுத்து அனுப்பி வச்சாங்க. சென்னையில எங்கண்ணன்கிட்ட ‘என்னை எப்படியாவது இன்ஜினியரிங் படிக்க வை’னு கெஞ்சினேன். அதுக்குள்ள விஷயம் தெரிஞ்சு அப்பாவும் சென்னைக்கு வந்துட்டார். அம்மாவுக்கு செம திட்டு விழுந்திருக்கு. ‘நான் உன்னைப் படிக்க வைக்கிறேன். ஆனா, நகையைத் திருப்பித் தா’னு கேட்டார் அப்பா. அப்பா மனசு மாறினபோது, இன்ஜினியரிங் காலேஜுக்கான அட்மிஷன் எல்லாம் முடிஞ்சு போச்சு.

வேற வழியில்லாம தியாகராஜா காலேஜ்ல பி.எஸ்சி. மேத்ஸ் சேர்ந்தேன். கம்ப்யூட்டர் சயின்ஸும் படிச்சேன். படிச்சு முடிச்சதும் ஏஷியன் பெயின்ட்ஸ் கம்பெனில நல்ல வேலை. 5 வருஷம் ஹைதராபாத்ல வேலை பார்த்தேன். 25 வயசுல எனக்கு திடீர்னு மறுபடி படிக்கணும்னு ஒரு ஆசை வந்தது. ‘எம்.பி.ஏ. படிக்கப் போறேன்’னு சொன்னப்ப, அப்போவோட மறுபடி சண்டை... ‘எப்போதும் உனக்குனு கையில கொஞ்சம் காசு வச்சுக்கோ’னு அம்மா சொல்லிக் கொடுத்திருந்த பழக்கம்தான்.

அப்பவும் எனக்கு கை கொடுத்தது. 4 ஆயிரம் ரூபாய் சம்பளம் அந்தக் காலத்துல ரொம்பப் பெரிசு. ‘எம்.பி.ஏ. என்ட்ரன்ஸ் எழுதப் போறேன்’ னதும், அம்மா ஊரை விட்டு என்கூட வந்து இருந்தாங்க. ஸ்கூல் படிக்கிற பிள்ளையைத் தயார்படுத்தற மாதிரி காலையில 5 மணிக்கு என்னை எழுப்பி விட்டுப் படிக்க வைப்பாங்க. 9 மணிக்கு வேலைக்குப் போவேன். இப்படிக் கஷ்டப்பட்டு படிச்சு என்ட்ரன்ஸ்ல பாஸ் பண்ணினேன். வேலையை விட்டேன். மும்பைக்கு போனேன். என் கேரியர் நான் எதிர்பார்த்த மாதிரியே அமைஞ்சது. அதுல அம்மாவுக்கும் ரொம்ப சந்தோஷம்.

சின்ன வயசுல எனக்குள்ள சினிமா ஆசை துளிர்த்ததுலேருந்து இன்னிக்கு என் கேரியரே சினிமா சம்பந்தப்பட்டதா மாறின வரை, என்னோட எல்லா வெற்றிகளுக்கும் பின்னால இருக்கிறவங்க எங்கம்மாதான்...’’நெகிழ்வும் மகிழ்வும் கலந்து கட்டி வருகின்றன தனஞ்செயனிடமிருந்து.‘‘அம்மா விருப்பப்படியே எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. என் மனைவி லலிதாவை மருமகள்னே சொல்ல மாட்டாங்க. மகள்னுதான் சொல்வாங்க. ரெண்டு பேரும் அவ்வளவு ஒற்றுமை!’’

தன் அம்மா பற்றி, தனஞ்செயன் அடுத்து சொன்ன தகவல் ஆச்சரிய ரகம்! ‘‘இந்த வயசுலயும் என் அம்மாவோட சினிமா ரசனை மட்டும் மாறவே இல்லை. எல்லா படங்களையும் பார்த்துடுவாங்க. சமீபத்துல அம்மாவும் நானும் டி.வி.யில ‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படம் பார்த்தப்ப எனக்கு பழைய நினைவுகள் வந்திருச்சு. அம்மாவுக்கு ரத்தம், அடிதடி, வெட்டு, கொலைனு எப்போதும் வன்முறை பிடிக்காது. கிளைமாக்ஸ் சுபமா இருந்தாதான் அம்மாவால ரசிக்க முடியும். அம்மா பிள்ளையான எனக்கும் அதே தாக்கம் உண்டு. நான் சம்பந்தப்பட்ட படங்கள்லேயும் பெரும்பாலும் அதெல்லாம் இருக்காது...’’

பெற்ற அம்மா மட்டுமல்ல... தன் அண்ணிகளையும் அம்மாவுக்கு இணையாகவே வைத்திருக்கிறார். ‘‘அம்மாவுக்கு இணையா என்னை அதே அன்பையும் பாசத்தையும் கொட்டி வளர்த்ததுல என்னோட பெரிய அண்ணிக்கும் பங்குண்டு. அவங்க இப்ப உயிரோட இல்லை. அவங்களையும் நான் அம்மானுதான் கூப்பிடுவேன். அவங்களும் என்னை அவங்களோட முதல் பையன்னுதான் சொல்வாங்க. அடுத்த அண்ணிகளும் பாசத்துக்குக் குறை வைக்கலை. அவங்களுக்கு அடுத்து என் மனைவி. எல்லா விஷயங்களுக்கும் நான் அவங்களை சார்ந்திருக்கிற அளவுக்கு அன்பால என்னைக் கட்டிப் போட்டவங்க. அடுத்து என்னோட ரெண்டு மகள்கள்... காலேஜ்ல படிக்கிற போதும் சரி, இப்ப இண்டஸ்ட்ரியிலயும் சரி... எனக்கு நண்பர்களைவிட தோழிகளே அதிகம்.
 
இப்படி பெண்கள் சூழ வளர்ந்ததாலயும் வாழ்ந்துக்கிட்டிருக்கிறதாலயும் எனக்குள்ள பெண்மைக்கான மென்மையான மனசு உண்டு. அப்படி இருக்கிறதுல எனக்குப்
பெருமைதான்...அப்பா இறந்தப்ப அது என்னைப் பெரிசா பாதிக்கலை. எனக்கும் அப்பாவுக்குமான உறவு அத்தனை இணக்கமானதா இருந்ததில்லை. ஆனா, நாளைக்கு அம்மாவுக்கு ஏதாவது ஆயிடுமோங்கிற பயம் எனக்கு ரொம்ப உண்டு. அந்த இழப்பை எப்படித் தாங்கிக்கப் போறேங்கிற கவலையும் பெரிசா இருக்கு. ஏன்னா, அம்மா இல்லாத என் வாழ்க்கை சூன்யமானது...’’ - சொல்லி விட்டு அமைதியாகிறார் தனஞ்செயன்.

என் செல்ல ராஜா!


தனஞ்செயனின் அம்மா ஜெகதம்மாள்

‘‘எனக்கு 85 வயசுக்கு மேல ஆச்சு... பல விஷயங்கள் ஞாபகமில்லை. ஆனா, எனக்கும் என் மகன் தனஞ்செயனுக்குமான அன்பான தருணங்கள் மறக்கவே இல்லை. அவன் பிறந்த நொடியிலேருந்தே எனக்கு செல்லமாயிட்டான். இப்பவரை அப்படித்தான். என்னை அவனும் அவனை நானும் அவ்வளவு நல்லா புரிஞ்சு வச்சிட்டிருக்கோம்.

நானும் அவனும் பார்க்காத படங்களே இல்லை. வீட்ல எங்களைக் காணலைன்னா தியேட்டர்ல கண்டுபிடிக்கலாம்கிற அளவுக்கு வாரத்துல பல நாட்கள் தியேட்டர்ல இருப்போம். ‘எங்க பாட்டன் சொத்து’, ‘கங்கா’னு ரகளையான படங்களை நாங்க ரெண்டு பேரும் அவ்ளோ ரசிப்போம். எல்லா படங்களுக்கும் நாங்க ரெண்டு பேரும்தான் போவோம். அதிசயமா வீட்ல எல்லாரும் சேர்ந்து ‘பாசமலர்’ படத்துக்குப் போயிட்டு, குடும்பத்தோட தியேட்டர்ல உட்கார்ந்து அழுதது இப்பவும் மறக்கலை.

‘உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச சினிமாவுலதாம்மா இருக்கேன்’னு என் மகன் சொன்னா லும், என்கூட அவன் அதிக நேரத்தை செலவிடறதில்லைங்கிற வருத்தம்தான் எனக்குப் பெரிசா இருக்கு. வயசான காலத்துல அம்மாவை தனியா விட மனசில்லாம என்கூட வந்துடுனு கூப்பிடறான். ஆனாலும், அவங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போறாங்க. எல்லா வசதிகளோடவும் யாருமில்லாத தனிமையில இருக்கிறதுக்குப் பதில், என் வீட்டுக்காரர் ஞாபகமா அவர் வாழ்ந்த வீட்ல பொழுதைக் கழிக்கிறதுல எனக்கு சுகம். அதனால என் மகன் மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லை. அவன் எனக்கு மகன் இல்லை. என் ராஜா!

ஒருநாள் அம்மா அவங்களோட10 சவரன் நகையை என்கிட்ட கொடுத்து, ‘நீ வீட்டை விட்டு ஓடிடு’ன்னாங்க. எனக்கும் அதுதான் சரியாப்பட்டது...

பெண்கள் சூழ வளர்ந்ததாலயும் வாழ்ந்துக்கிட்டிருக்கிறதாலயும் எனக்குள்ள பெண்மைக்கான மென்மையான மனசு உண்டு. அப்படி இருக்கிறதுல எனக்குப் பெருமைதான்...

- ஆர்.வைதேகி
படங்கள்:மாதவன்