கமலுடன் டூயட்



புதுக் குரலில் பூரிக்குது பொண்ணு

சரண்யா கோபிநாத்

உலகநாயகன் கமலுடன்   நடிப்பது எத்தனை கஷ்டமானதோ, அதைவிட சவாலானது அவருடன் சேர்ந்து பாடுவது. அறிமுகப் பாடலிலேயே அப்படியொரு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது சரண்யா கோபிநாத்துக்கு. ‘உத்தம வில்லன்’ படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ‘லவ்வா... லவ்வா...’வில் கமலுடன் சேர்ந்து டூயட் பாடியிருக்கிறார் சரண்யா.

‘‘நீங்கதான் பாடினீங்களா... ரொம்ப நல்லாருக்கு...’ என்கிற கமலின் பாராட்டு வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்லி சிலிர்த்துக் கொண்டிருக்கிறார் சரண்யா.‘‘பின்னே... கமல் சாரை பார்க்கிறதே பெரிய விஷயம்னு நினைச்ச எனக்கு அவர்கூட பாடறதுக்கு வாய்ப்பு கிடைச்சது மட்டுமில்லாம, பாராட்டும் கிடைச்சது சாதாரண விஷயமா என்ன? அதான் அப்பப்ப என்னையே கிள்ளிக் கிள்ளிப் பார்த்துக்கறேன்...’’ - புதுக் குரலில் பூரிக்குது பொண்ணு.


‘‘அப்பா கோபிநாத், ரிட்டயர்ட். அம்மா மீரா, டிசைனர். நான் அவங்களுக்கு ஒரே பொண்ணு. எனக்குப் பெரிய மியூசிக் பின்னணி எல்லாம் இல்லை. ஸ்கூல்ல மியூசிக், டிராமா போட்டிகள்ல கலந்துக்கிட்டுப் பாடுவேன். வீட்ல இருக்கும் போது சும்மா பாடிக்கிட்டே இருப்பேன். எல்லாரும் ரசிப்பாங்க. பாராட்டுவாங்க. மத்தபடி நான் முறைப்படி பாட்டெல்லாம் கத்துக்கலை. இப்பதான் நாலஞ்சு வருஷமா ஒழுங்கா பாட ஆரம்பிச்சிருக்கேன். ஹிந்துஸ்தானி கத்துக்கறேன். இங்கிலீஷ் தியேட்டர் ஜாம்பவான் மித்ரன் தேவநேசனோட இறுதிச் சடங்குல பாடினேன். அப்ப நிறைய பேரோட அறிமுகம் கிடைச்சது. அது மூலமா ‘மெட்ராஸ் மியூசிகல் அசோசியேஷன்’ சார்பா பிரபல இசைக்கலைஞர் அகஸ்டின் பால் நடத்தற கொயர்ல சேர்ந்தேன்.

அதுக்கப்புறம் நிறைய நிறைய பாடற வாய்ப்பு வந்தது. இளையராஜா சார் உள்பட நிறைய மியூசிக் டைரக்டர்ஸுக்கு பேக்கிங் பாடியிருக்கேன். என்னோட அறிமுகங்கள் அதிக மாகிட்டே போச்சு. ட்ரூப்ல நான் பாடறதைப் பார்த்த பலரும், தனியா பாடலாமேனு அட்வைஸ் பண்ணினாங்க. நானும், என்னோட நாலு ஃப்ரெண்ட்ஸும் சேர்ந்து ‘க்ரோமோசோல்’னு ஒரு பேண்ட் ஆரம்பிச்சோம். பேண்ட் சார்பா எங்கே போனாலும் நாங்க பாடற ‘பீஃப் பிரியாணி’ங்கிற பாட்டு, பயங்கர பாப்புலர் ஆச்சு. ‘மெட்ராஸ் மார்க்கெட்’னு ஒரு போட்டியிலயும் அந்தப் பாட்டைப் பாடினோம். அதைக் கேட்டுட்டு, மியூசிக் டைரக்டர் ஜிப்ரானோட மேனேஜர் கூப்பிட்டார். ஜிப்ரான் சாரோட மியூசிக்ல ‘ஜில்’னு ஒரு தெலுங்கு படத்துல ‘ஏமயிந்தி வாலா’னு ஒரு பாட்டு பாடற வாய்ப்பு வந்தது. அந்தப் பாட்டு செம ஹிட். அதே படத்துல ‘பூரி மசாலா’னு இன்னொரு பாட்டும் பாடியிருக்கேன். ஜிப்ரான் சார் ஆபீஸ்லேருந்து மறுபடி போன்...

‘உத்தம வில்லன் படத்துல ஒரு பாட்டு... பாடுங்க... ஆனா, அது ஓ.கே. ஆகும்னு என்னால பிராமிஸ் பண்ண முடியாது’னு சொன்னார் ஜிப்ரான். அதுதான் ‘லவ்வா... லவ்வா...’ பாட்டு. ஏற்கனவே ஆண் குரல் ரெக்கார்ட் பண்ணியிருந்தாங்க. அது கமல் சார் பாடினதுனு அப்ப எனக்குத் தெரியாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம பாடிட்டு வந்தேன். ரொம்ப நாள் கழிச்சு, என் வாய்ஸ் ஓ.கே.ஆயிடுச்சுனு போன் வந்ததும் எனக்குத்தலை கால் புரியலை. அதைவிட சர்ப்ரைஸ், நான் கமல் சார் கூட பாடியிருக்கேங்கிற விஷயம்!’’ - மீண்டும் மீண்டும் சிலிர்க்கிற சரண்யா, இமான் இசையில் ‘வலியவன்’ படத்திலும், ஷாம் பெஞ்சமின் இசையில் ‘களவுத் தொழிற்சாலை’ படத்திலும்கூட பாடியிருக்கிறார்.

கோலிவுட்டிலோ, பாலிவுட்டிலோ ஃபேஷன் டிசைனராக கலக்க வேண்டியவர், இன்று பாடகியாக பிரபலமாகிக் கொண்டிருக்கிறார்.

‘‘ஆரம்பத்துல ஃபேஷன் டிசைனிங்ல இன்ட்ரெஸ்ட் இருந்தது. அதனால நிஃப்ட்டுல படிச்சிட்டு, பெங்களூரு மிந்த்ராவுல கொஞ்ச நாள் ஒர்க் பண்ணிட்டிருந்தேன். ஒவ்வொரு வீக் எண்டும் சென்னைக்கு வருவேன். கொஞ்ச நாள் அந்த வேலையோட சேர்த்து மியூசிக்கையும் பேலன்ஸ் பண்ணி சமாளிச்சிட்டிருந்தேன். ஒரு கட்டத்துல முடியலை. அதனால மனசே இல்லாம அந்த வேலையை ரிசைன் பண்ணிட்டு, சென்னையிலயே செட்டில் ஆயிட்டேன். இங்க இருந்தா மியூசிக்ல இன்னும் நிறைய சாதிக்கலாம்னு ஒரு நம்பிக்கை...’’ என்கிறவருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் முதல் சந்தோஷ் நாராயணன் வரை அத்தனை பேர் இசையிலும் பாட அவ்வளவு ஆசை.

அட்சர சுத்தமாக தமிழ் பேசுகிற சரண்யா வின் தாய்மொழி மலை யாளம்.‘‘மலையாளினு சொன்னா நம்ப முடியாத அளவுக்கு சூப்பரா தமிழ் பேசுவேன். ஆனாலும், எனக்கு என் தாய்மொழில ஒரு பாட்டாவது பாடணும்னு ஆசை. ஐம் வெயிட்டிங்...’’ என்கிறார் ஏக்கம் கலந்த குரலில்.

‘‘இளையராஜா சார் உள்பட நிறைய மியூசிக் டைரக்டர்ஸுக்கு பேக்கிங் பாடியிருக்கேன்...’’

கொஞ்ச நாள் ஃபேஷன் டிசைனிங் வேலையோட சேர்த்து மியூசிக்கையும் பேலன்ஸ் பண்ணி சமாளிச்சிட்டிருந்தேன். ஒரு கட்டத்துல முடியலை. அதனால மனசே இல்லாம அந்த வேலையை ரிசைன் பண்ணிட்டு, சென்னையிலயே செட்டில் ஆயிட்டேன்...’’