சாக்லெட் பைத்தியம்



சாய்னா நெஹ்வால்

சீன ஓபனில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் உற்சாகமாக இருந்தார் சாய்னா. உலக தரவரிசையில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ள நிலையில், விரைவில் நம்பர் 1 வீராங்கனை ஆக முடியும் என்கிறார் மிகுந்த நம்பிக்கையுடன்.10 ஆண்டுகளாக கோபிசந்த் அகாடமியில் பயிற்சி பெற்று வந்த நிலையில், சமீபத்தில் தனது புதிய பயிற்சியாளராக விமல்குமாரை நியமித்துக் கொண்ட சாய்னா, இப்போது ஹைதராபாத்துக்கும் பெங்களூருக்கும் ஷட்டில் அடித்துக் கொண்டிருக்கிறார்.

சாய்னா குடும்பமே சீன ஓபன் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அம்மா உஷா ராணிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. வீட்டுக்கு வருகிற விருந்தினர்களுக்கெல்லாம் மலர்ந்த முகத்துடன் ஸ்வீட் கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தார்.


‘‘பயிற்சியாளரை மாற்றுவது என்று சாய்னா முடிவு செய்தபோது எங்களுக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ‘கோபி சார் அளவுக்கு முழு அர்ப்பணிப்போட வேறு யாராலும் பயிற்சி அளிக்க முடியாதே’ என்று பயந்தோம். சாய்னா மட்டும் உறுதியாக இருந்தாள்’’ என்றார் அப்பா ஹர்வீர்.சீன ஓபன் வெற்றி சாய்னாவிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர முடிந்தது.

2013ல் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் ஏமாற்றமடைந்திருந்த அவர், இப்போது மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியுள்ளார். பயிற்சியாளரை மாற்றியது பற்றி ஹர்வீர் பேசிக் கொண்டிருந்ததை கேட்டதும், எங்கள் உரையாடலில் இணைந்து கொண்டார்.

‘‘ஆசியப் போட்டிக்கு சில வாரங்களே இருந்த நிலையில், எனது புதிய பயிற்சியாளராக விமல்குமார் சாரை நியமித்தபோது எல்லோருமே அது தவறான முடிவு என்றே விமர்சித்தார்கள். அப்பா,  அம்மாவுக்குக் கூட அதில் திருப்தி இல்லை. ரொம்பவே பயந்தார்கள். ஆனால், அந்த கடினமான முடிவுக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக நினைக்கிறேன். உள்ளூர் வீராங்கனைகளின் சவாலை முறியடித்து சீன ஓபன் பட்டத்தை வென்றது, எனது முடிவு சரியானதுதான் என்று நிரூபித்துவிட்டது.

அது சுயநலமான முடிவு என்பதில் சந்தேகமில்லை. வேறு வழியில்லாமல்தான் கோபி சார் பயிற்சியில் இருந்து விலக முடிவு செய்தேன். கடந்த ஆண்டு பெரிதாக சாதிக்க முடியாத போது மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

முன்னணி வீராங்கனைகளுடன் மோதும் ஆட்டங்களில் ஏதோ ஒன்று குறைவதாக உணர்ந்தேன். எனது ஆட்டத்தில் தேக்கம் ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. கோபி சார் பயிற்சியில் எந்தக் குறையும் இல்லை. எல்லா பெரிய பிளேயர்களுமே அவரிடம் பயிற்சி பெறுவதால் எனக்குக் கூடுதலாக நேரம் ஒதுக்க அவரால் முடியவில்லை. அதனால் தான், உடனடியாக பயிற்சியாளரை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

விமல் குமார் சாரிடம் சேர்ந்த பிறகு, மனதளவிலும் கொஞ்சம் ரிலாக்ஸாக முடிந் தது. கொஞ்ச நேரமே பயிற்சி செய்தாலும், அதில் ஆட்டத்திறனை மேம்படுத்துவதிலும் சின்னச் சின்ன குறைகளை சரி செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பார் விமல் சார். 2016 ஒலிம்பிக் போட்டிக்கு நல்ல ஃபிட்னஸ் தேவை.

அதை மனதில் வைத்தே இப்போது பயிற்சி செய்கிறேன். இந்த வருஷம் முடிவதற்குள் எப்படியாவது டாப் 5 வீராங்கனைகளில் ஒருவராக இடம் பிடித்துவிட வேண்டும் என நினைத்தேன். அது நிறைவேறிவிட்டது. அடுத்து நம்பர் 1 இடத்தை பிடிப்பதுதான் லட்சியம். புத்தாண்டில் அதுவும் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சீனாவின் டாப் 3 வீராங்கனைகளுக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டும். தொடர்ச்சியாக பல தொடர்களில் அவர்களை வீழ்த்தினால்தான் முதலிடத்துக்கு முன்னேற முடியும் என்பதையும் உணர்ந்திருக்கிறேன். ஆனாலும், லட்சியத்தை அடையாமல் விடமாட்டேன்’’ என்றார் சாக்லெட் சுவைத்தபடி.

‘‘ஏய்... நீ என்ன சாக்லெட்டா உள்ள தள்ளிட்டிருக்கே. அப்புறம் எப்படி ஃபிட்னஸ் மெயின்டெய்ன் செய்ய முடியும்?’’ என்று செல்லமாகக் கடிந்தபடி, சாய்னாவிடம் இருந்து அதைப் பிடுங்க முயற்சித்தார் உஷா. அவரிடமிருந்து தப்பி ஒரு குழந்தை மாதிரி துள்ளி ஓடினார் சாய்னா.

‘‘இப்படித்தாங்க... டோர்னமென்ட் எதுவும் இல்லேன்னா இஷ்டத்துக்கு சாப்பிடுவா. சாக்லெட், ஐஸ்க்ரீம்தான் அவளோட ஃபேவரைட். ஆனா, போட்டிக்கு தயாராகற நேரம் வந்துட்டா எல்லாத்தையும் நிறுத்திடுவா. ஜெயிக்கணும், சாதிக்கணும்கிற வெறி இருக்கறதாலதான் அது முடியுது’’ என்று பேச்சைத் தொடர்ந்தார் அப்பா ஹர்வீர்.‘‘சின்ன வயசுல சரியான சாக்லெட் பைத்தியம்.

ஒளிச்சு வச்சு சாப்பிடுவா. 2005ல அவளுக்கு உடல் பரிசோதனை செஞ்சாங்க. ஓவர் வெயிட்டா இருந்தா. தொடைப் பகுதில அதிக கொழுப்பு சேர்ந்திருக்கிறதா டாக்டர் சொன்னார். ரிப்போர்ட் பார்த்ததுமே கோபி சாருக்கு பயங்கர கோபம் வந்துடுச்சு. ‘டயட் எல்லாம் பார்த்துப் பார்த்துதானே கொடுக்கறீங்க. அப்புறம் எப்படி இந்த மாதிரி வெயிட் போடறா’ன்னு கத்தினார்.

அப்போதான் தினாஸ் வெர்வத்வாலா என்கிற ஃபிட்னஸ் டிரெய்னர் அமெரிக்காவுல படிப்ப முடிச்சுட்டு ஹைதராபாத் வந்திருந்தார். அவங்ககிட்டே சாய்னாவ அனுப்பி வச்சார் கோபி சார். 2008 வரைக்கும் அந்தம்மாதான் சாய்னாவ பார்த்துகிட்டாங்க. ‘என்ன சாப்பிடணும், எதை சாப்பிடக் கூடாது’ங்கிறத ரொம்ப ஸ்ட்ரிக்டா சொல்லுவார் தினாஸ். அப்படியும் சாய்னா வெயிட் குறையற மாதிரியே தெரியல. ‘டயட்லயும் பிரச்னை இல்லை. ஹார்மோன் கோளாறும் எதுவும் இருக்கிற மாதிரி தெரியல.

நமக்குத் தெரியாம எதையோ சாப்பிடுறா’ன்னு சந்தேகப்பட்டாங்க. அதனால, எங்க டோர்னமென்ட்டுக்கு போனாலும் டிரெய்னரும் கூடவே போக வேண்டிய கட்டாயம். மூணு வருஷம் தினாஸ் ரொம்பவே கஷ்டப்பட்டாங்க.  

‘சிக்கன் ரெகுலராக எடுத்துக்கோ’ என்பார். ஆனா, சாய்னாவுக்கு நான்வெஜ் என்றாலே பிடிக்காது. கோபி சார் வற்புறுத்தினால் மட்டும் கொஞ்சம் சாப்பிடுவா.

‘என்ன சாய்னா... நேற்று கோழிக்கறி சாப்பிட்டயா’ன்னு தினாஸ் கேட்டால், ‘சாரி மேடம் மறந்துட்டேன். இன்னிக்கு கண்டிப்பா சாப்பிடுறேன்’னு சமாளிப்பா.

அப்புறம் சாய்னாவுக்காக டெய்லி சிக்கன் சமைக்க ஆரம்பிச்சா உஷா. அதிலும் பிரச்னை வந்துச்சு. நெறைய எண்ணெய் விட்டு டேஸ்டா சமைப்பா. ‘அதனாலதான் எடை குறையலே, எண்ணெயை சுத்தமா தொடாதீங்க. வேக வச்சு, கிரில் பண்ணிக் கொடுங்க’ என்பார் தினாஸ்.

வெளியூர் போகும்போது சாய்னா ரூம்லயே அவங்களும் தங்குவாங்க. ‘முதல் முதல்ல அவளோட சேர்ந்து தங்கினப்போ, சாய்னா சரியான சோம்பேறிப் பொண்ணுன்னுதான் நெனச்சேன். டிரெஸ்ஸெல்லாம் அப்படி அப்படியே போட்டு வச்சிருப்பா. ‘புரோட்டீன் அதிகமா சேர்த்துக்கோ’ன்னு சொன்னால், மேகி நூடுல்ஸ் சாப்பிட்டுட்டு படுத்துப்பா. எப்போ பார்த்தாலும் போன்ல மெசேஜ் பண்ணிட்டிருப்பா.

நான் தூங்கின பிறகு சாக்லெட் எடுத்து சாப்பிடுவா. இப்படி இருந்தா, பெருசா எப்படி சாதிக்க முடியும்? நீ சுத்த வேஸ்ட் அப்படி இப்படின்னு சொல்லி அவளுடைய பழக்க வழக்கங்களை மாத்தினேன். ஆனாலும், சாய்னாவோட கேரக்டர்ல பெரிய மாற்றம் எதுவுமில்ல. எதைப் பத்தியும் கவலைப்பட மாட்டா. பாட்டு கேக்குறது ரொம்ப பிடிக்கும். ஐபாட், ஹெட்போன் சகிதமா அலைவா’ என்று சொல்வார் தினாஸ்.இப்பவும் அப்படித்தான். ஆனா, போட்டிக்கு தயாராகணும்னு வந்துட்டா எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சுட்டு முழு மூச்சா இறங்கிடுவா. அதுதான் அவளோட ஸ்பெஷல்!

‘‘கொஞ்ச நேரமே பயிற்சி செய்தாலும், அதில் ஆட்டத்திறனை மேம்படுத்துவதிலும் சின்னச் சின்ன குறைகளை சரி செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டும்...’’

சங்கர் பார்த்தசாரதி

(காத்திருப்போம்!)