ததும்பி வழியும் மௌனம்



அரிசிக் கிண்ணத்தில் நிறைந்த பூக்கள்



இன்று நிலைமையே வேறு. அபாகஸ் கிளாஸ் முடிக்கும் ஒரு குழந்தை, அதே ஷார்ட்ஸ் பனியனோடு பரதநாட்டிய வகுப்புக்குச் செல்கிறது. அல்லது இசைக்
கருவி வகுப்புக்குச் செல்கிறது. அல்லது சதுரங்க விளையாட்டுப் பயிற்சிக்கோ, நீச்சல் பழகவோ செல்கிறது. ‘அபாகஸ்ஸின் கணித மனம் உடனே நடனத்திலும் இசையிலும் லயிக்குமா’ என்றால், ‘லயிக்காது’ என்று சொல்லும் அறிவியல் உண்மையும் இல்லை... ‘லயிக்க முடியாது’ என்று சொல்லும் வாழ்வியல் கட்டாயமும் இல்லை... ஆனாலும், ‘லயிக்குமா’ என்று நாம் கேட்க நம் தலைமுறை ஆட்களுக்கு ஒரு வாழ்வியல் அனுபவப் பின்னணி உள்ளது.

கலையில் ஈடுபடும் கலை மனசு, கலையைத் தவிர வேறொன்றிலும் ஈடுபடாது... தன் கலையைத் தாண்டி வெளியில் ஓர் உலகம் இயங்குகிறது என்பதை உணரவும் செய்யாது... இதுவே முந்தைய தலைமுறை வரை வாழ்ந்த கலைஞர்களின் நிலையாக இருந்தது. அரிதாரம் பூசிப் பழகிய முகமும் கால்களில் சலங்கைக் கட்டி ஆடிய கால்களும் வாழ்நாள் முழுக்க அந்தக் கலைக்கு மட்டுமே தங்களை ஒப்புக் கொடுத்திருக்கின்றன.

எங்களுடைய தொண்டை மண்டலத்தில் ஊருக்கு ஒரு கூத்துப்பட்டறை, நாடக மன்றங்கள் இருந்த காலங்கள் இன்னும் என் நினைவில் இருக்கின்றன. கூத்துக் கலைஞர்கள் மறக்காமல் நினைவில் இருக்கக் காரணம் அவர்களின் தோற்றம். நான் நான்காவதோ ஐந்தாவதோ படித்த நேரமது. பெண் நடையின் சாயலில் நடக்கும் ஒரு கூத்தாடி எங்கள் ஊரில் இருந்தார். தலைமுடியை நீளமாக வளர்த்து கொண்டை போட்டிருப்பார். நடை, உடை, பாவனைகள் பெண் தன்மையுடன் இருக்கும். அவர் எப்பொழுதும் எங்கள் பள்ளிக்கு எதிரே இருக்கும் பெட்டிக்கடையில்தான் உட்கார்ந்திருப்பார். வாயில் வெற்றிலையை குதப்பிக் கொண்டே இருப்பார். அதனால் உதடுகள் எப்போதுமே சிவந்த நிறத்தில்தான் இருக்கும்.

மாநிறத்தில் இருக்கும் அவரின் உடல்வாகுக்கு சிவந்த உதடுகள் பொருத்தமில்லாமல் அழுக்கான ரோஸ் மிட்டாய் வண்டியில் முன்னால் பளிச்சென நீட்டிக் கொண்டிருக்கும் ரோஸ் மிட்டாயைப் போல தனியாகத் தெரியும்.உடலுக்குப் பொருந்தாமல் அடர்த்தியான நீளமான கருங்கூந்தல் அவருக்கு இருக்கும்.
வெற்றிலை இல்லாத நேரங்களில் கொட்டைப் பாக்கைப் போட்டு ஊற வைத்துத் தின்று கொண்டிருக்கும் அவரை, பள்ளியின் இடைவேளை மணி அடிக்கும் 11 மணிக்கு சூழ்ந்து கொள்வோம். அருகே நெருங்க பயம் இருந்தாலும், அவரின் தோற்றத்தின் வித்தியாசம் எப்போதும் எங்களை ஈர்த்துக்கொண்டே இருக்கும். முதலில் தள்ளி நின்று பார்த்த நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அருகே சென்றுவிடுவோம். பின்னால் நீளமாகத் தொங்கும் அவரின் கோடாலி முடிச்சுப் போட்ட சடை முடியைத் தொட்டுப் பார்ப்போம். ஒவ்வொரு வராகத் தொடும்போது அவர் அமைதியாக இருப்பார்.

பயம் தெளிந்து ஆளாளுக்கு வேகமாக இழுக்கும்போது அவர் கழுத்து இழுபடும். வேட்டி அவிழ்ந்து விழ, ‘ஓ...’ என ஒரு கெட்ட வார்த்தையால் எங்களை தாக்க வருவதுபோல, எழுந்து நின்று துரத்துவார். கல் வீசுவதைப்போல கை உயர்த்தினாலே பறந்துபோகும் காக்கைகளைப் போல நாங்கள் ‘ஓ’ என்ற கூச்சலுடன் பள்ளி வளாகத்துக்குள் ஓடிப்போவோம்.

அவிழ்ந்த வேட்டியைக் கட்டிக்கொண்டு, பின் தலைமுடியை அவிழ்த்து நிதானமாக ஒரு தட்டு தட்டி கோடாலி முடிச்சு போட்டுக் கொண்டு, முழங்காலுக்கு மேல் வேட்டியை ஏற்றிவிட்டு குத்தங்கால் போட்டுக் கொண்டு வெற்றிலைப் போடத் தொடங்கும் அவர் தோற்றத்தை எங்களால் புரிந்து கொள்ளவே முடியாது.
அவரைப் பற்றிக் கேட்டால், அப்பா ஒரு கூத்துக் கதையைவிட விரிவாகச் சொல்வார். அதில் அந்த வயதில் எனக்குப் புரிந்தது... அவர் அரிச்சந்திரன் கதையில் சந்திரமதி வேஷம் கட்டுகிறவர் என்பதுதான். ‘சுடுகாட்டில் இறந்த மகனை தன் மடிமேல் போட்டுக் கொண்டு அவிழ்ந்து விரிந்த கூந்தலுடன் அவர் பாடி அழுதால் ஊரே அழும்’ என்று எங்கள் பக்கத்து வீட்டுப் பெரியம்மா சொல்லும். அவர் சந்திரமதி வேஷம் கட்டாமல் வேறு வேஷம் கட்டினால் இந்த முடியை என்ன செய்வார் என்றேன்.

அவர் சந்திரமதியாக மட்டும்தான் நடிப்பார். அரிச்சந்திரன் கூத்துப் போடவில்லை என்றால், அந்த நாட்களில் கூத்தில் மற்ற வேலைகளை செய்வாரே தவிர, வேறு வேஷம் போட மாட்டார் என்றார்கள். அவரை கடைசியாக எப்போது பார்த்தேன் என்பதே நினைவில் இல்லை. ஆனால், இன்றும் அரிச்சந்திரன் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் அவர் முகமே நினைவில் வருகிறது.

இவரைப் போன்ற பெரும்பான்மையான கலைஞர்கள் வருடத்தில் சில மாதங்களில் கிடைக்கும் சொற்ப ஊதியத்தை மட்டுமே பெறுபவர்கள். கூத்து இல்லாத நாட்களில் வெற்றிலைப் பாக்குப் போடக் கூட அடுத்தவர் கையை நாட வேண்டிய நிலையில் இருப்பார்கள். இவர்கள் பாடே இந்த நிலை என்றால் இவர்களின் குடும்பத்தின் கதையைச் சொல்ல வேண்டியதே இல்லை. வறுமையும் ஏழ்மையும் நிரந்தரம். கண்ணெதிரில் இவர்களும் இவர்களின் குடும்பமும் வறுமையில் வாடினாலும் வேறு வேலை பார்க்கப் போக மாட்டார்கள்.

அதனால்தான் அந்தக் காலத்தில் இசையையும் கூத்தையும் நடிப்பையும் வாழ்வாக்கிக் கொண்டவர்களின் வாழ்க்கை அந்திமக் காலத்தில் பெரும் துயரம் நிரம்பியதாக இருந்திருக்கிறது. அவர்களுக்குப் பின்னால் அவர்களின் கலைத்திறன் வாழ்ந்திருக்கலாம். ஆனால், அவர்களின் வாழும் காலத்தில் அவர்கள் நிம்மதியாக வாழவில்லை.பிரபலமான நடிகர்களுக்கும் இதே நிலைதான். அவர்கள் பிரபலமாக இருந்த காலத்தில் பணமும் புகழும் பேரும் இருந்தாலும் அவர்களால் அதை தக்க வைக்க முடிந்ததில்லை. கலைக்குக் கிடைக்கும் புகழ் எப்போதுமே நிரந்தரமல்ல. அது அடுத்த அடுத்த ஆளுமைகளை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டே இருப்பது. புகழ் இடம் பெயரும் போது பணமும் இடம் பெயர்ந்துவிடும். இன்றைய தலைமுறை போல சூதானமாக
இருந்தவர்கள் அல்ல நம் முன்னோடிகள்.

தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர். அவர் அளவுக்குப் பெயரும் புகழும் சம்பாதித்தவர்கள் அந்தக் காலத்தில் யாரும் இல்லை. திரைப்படத்தின் பட்ஜெட் 2 லட்ச ரூபாயாக இருந்த காலத்திலேயே, அவருடைய சம்பளம் ஒரு லட்ச ரூபாய். வரும் வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு, யார் தன்னுடைய பணத்தை நிர்வகிக்கிறார்கள் என்பதையெல்லாம் கவனிக்காமல் திரைப்படம் தந்த புகழின் உச்சியில் இருந்தார் திரையுலகின் முடிசூடா மன்னன். அன்று ஜெர்மனியின் ஓபல் கார் வைத்திருந்த சென்னையின் ஒன்றிரண்டு பேரில் அவரும் ஒருவர். அவரது ‘ஹரிதாஸ்’ படத்தின் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. இனிமேல் அதற்கான வாய்ப்பும் இல்லை. ஆம்... ஹரிதாஸ் படம் 3 தீபாவளிகளுக்கு  ஓடிய வெற்றித் திரைப்படம். ஏறக்குறைய 110 வாரங்கள் ஓடியதாம்! 

வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் வருவது வழக்கமே. பாகவதருக்கோ உச்சியும் பாதாளமுமான ஏற்றத்தாழ்வு வாழ்க்கையில். அவரைப் போல புகழின் உச்சியில் இருந்தவர்களும் இல்லை... கடைசி காலத்தில் வறுமையின் பிடியில் சிக்கி சென்னை அரசு பொது மருத்துவமனையில் அருகில் ஒருவருமே இல்லாமல் தனி ஆளாக செத்துப் போன பிரபலமும் இல்லை. பாகவதரின் கடைசி காலத்தின் கொடிய நாட்களை படித்தால் கலைஞர்கள் சபிக்கப்பட்டவர்களோ என்று தோன்றும். அவரைப் பீடித்த வறுமை அவருக்குப் பின்னும் அவர் குடும்பத்தைப் பிடித்தாட்டியது. இவர் வழியில் வாழ்வின் கடைசி நாட்களில் அடையாளமற்று செத்துப்போன தமிழ் நடிகர்கள் இரண்டு டஜன் பேரையாவது சொல்ல முடியும்.

கலைஞர்கள் திறமையற்றவர்களா? லௌகீக வாழ்வின் நுட்பங்களை அறியாதவர்களா? அறிந்தும் அதைப் பின்பற்ற முடியாதவர்களா? புகழும் பணமும் சேரும் போது அதை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளத் தெரியாமல் ஏன் இருந்தார்கள்? இப்படி இன்றைய நம் புத்திசாலித்தனத்தின் ஒளியில் இருந்து பார்க்கும் போது அபத்தமாகத் தோன்றினாலும், அன்றைய மனிதர்களே அப்படித்தான்... அதில் கலைஞர்கள் ஒருபடி மேலே நின்றவர்கள் என்று தோன்றுகிறது.
கலைஞர்கள் சந்தித்த புற வாழ்வின் நெருக்கடிகள் அவர்களின் கலை வாழ்வை பாதிக்க அவர்கள் ஒருபோதும் அனுமதித்ததே இல்லை.

உள்ளும் புறமும் கலையுணர்வு ததும்பத் ததும்ப வாழ்ந்திருக்கிறார்கள். தங்களின் வெற்றிலைச் செல்லங்கள் காலியாக இருந்தால் கூட சீவலையும் கொட்டைப்பாக்கையும் போட்டுக் குதப்பிக் கொண்டே தன்னைச் சுற்றி ஒரு ஜமாவை சேர்த்துக் கொண்டு இசையின் நுணுக்கங்களை மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்... ‘பூக்களையாவது சேகரிப்போம். அந்தக் கிண்ணத்தில் அரிசிதான் இல்லையே’ என்ற ஜப்பானிய ஜென் ஹைக்கூ கவிதை கலை மனசை அப்பட்டமாகச் சொல்கிறது.

இன்றைய தலைமுறையினர் கலை வாழ்க்கையை அர்ப்பணிப்பாக, சேவையாக மட்டும் பார்ப்பதில்லை. பல நேரங்களில் கலைக்கு ரசனையான அன்பு நிரம்பிய ஈரமான மனசு வேண்டும் என்பது கூட தேவையாக இல்லை. பெற்றோர் தங்களின் பிள்ளைகள் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படு
கிறார்கள். அதே நேரம் வசதியான பொருளாதார சிக்கல் இல்லாத வாழ்க்கைக்கு ஒரு வேலையும் தேவை என்று நினைக்கிறார்கள். இசையும்
நடனமும் தங்களுடைய பிள்ளைகளுக்குத் தெரியும் என்பது இன்று நடுத்தர குடும்பங்களின் பல பெருமைகளில் ஒன்றாக இருக்கிறது.

குழந்தைக்குப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்பதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் விடுமுறை நாள் முழுக்க தனி வகுப்புகளில் திணிக்கப்படுகிறார்கள். காலையில் 7 மணிக்கு இந்தி வகுப்பு, 11 மணிக்கு கீபோர்ட் வகுப்பு, மதியம் 2 மணிக்கு பரதநாட்டியம் வகுப்பு, மாலையில் ஏதோ ஒரு விளையாட்டுப் பயிற்சி என்று சனி, ஞாயிறுகளிலும் குழந்தைகள் மூச்சுத் திணற வகுப்புகளுக்குச் செல்கிறார்கள்.

இந்தக் குழந்தைகள் பலரிடம் பேசியிருக்கிறேன். ‘வாய்ப்பாட்டு கத்துக்கிறயா? பரவாயில்லையே... நீயா விரும்பி என்னென்ன பாட்டு பாடிக்குவ’ என்று கேட்டால், நிறைய குழந்தைகள் ‘வகுப்பில் மட்டும்தான் பாடுவோம்’ என்றே சொல்லியிருக்கின்றன. ‘யாருடைய பாடல்களை விரும்பி கேட்பீர்கள்’ என்ற கேள்விக்கு பெரும்பாலும் திரைப்படப் பாடல்களே பதிலாக இருந்திருக்கின்றன. தன்னுடைய குரல் வளம் பற்றியோ, பாடுவதன் பரவசம் பற்றியோ அந்தக் குழந்தைகளின் நடத்தையில் வெளிப்படுவதில்லை. இடை நகரங்களில் இன்னும் நிலை மோசம்.

பரதநாட்டியம் ஆடுபவரின் உடல் நாளாக நாளாக தனக்குள்ளாகவே எப்போதும் ஓர் அபிநயத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும். அபிநயத்தின் வெளிப்பாடாக நடையில் துள்ளலும் நளினமும் வெளிப்படும். இன்றைக்கு பரதநாட்டியம் கற்றுக் கொள்ளும் பல மாணவிகளும் பள்ளி ஆண்டு விழாக்களில் அரங்கேற்றம் செய்துவிடுகிறார்கள். அவர்களின் நடனங்கள் என்ன வகை என்றே தெரியவில்லை. பாவம் பிள்ளைகள்... அவர்களை ஒன்றும் குறை சொல்ல முடியாது. திரைப்படப் பாடல்கள் என்றாலும் பரவாயில்லை... நாயக, நாயகியின் நடன அசைவுகளை பிரதிபலிக்கலாம். பரத நாட்டியம் என்றால் இன்றும் ‘அழகு மலராட அபிநயங்கள் கூட’ பாடலும் ‘ஓம் நமச்சிவாய’வும்தானே?

நன்றாகப் படித்து வேலைக்குப் போன பிறகு எதற்காவது உதவும் என்று பேருக்குக் கலையை கற்றுக் கொடுக்கும் பெற்றோரின் எச்சரிக்கை உணர்வில் குழந்தைகளிடம் கலை உணர்வே இல்லாமல் போகிறது. ‘கலை என்பது கற்றுக் கொள்வது மட்டுமல்ல... வாழ்வது’ என்பதை உணர முடியா தலைமுறை நம் முன்னே நிற்கிறது. கலையை வாழ வைத்து மடிந்து போன நம் முன்னோடிகளுக்கு அன்றாட வாழ்வின் மகிழ்ச்சிகள் கிட்டாமல் போயிருக்கலாம். அவர்களிடம் பணம் நிலைத்து நிற்காமல் போயிருக்கலாம். ஆனால், காலத்தை வென்று நிற்கும் அபூர்வ  ரசனையான நாட்களை அவர்கள் காலடியில் வைத்திருந்தார்கள்.
கலையும் அவர்களின் நிழலாக அவர்களின் காலடியில்தான் இன்னும் சுருண்டு படுத்திருக்கிறது.




அந்தக் காலத்தில் இசையையும் கூத்தையும் நடிப்பையும் வாழ்வாக்கிக் கொண்டவர்களின் வாழ்க்கை அந்திமக் காலத்தில் பெரும் துயரம் நிரம்பியதாக இருந்திருக்கிறது. அவர்களுக்குப் பின்னால் அவர்களின் கலைத்திறன் வாழ்ந்திருக்கலாம். ஆனால், அவர்களின் வாழும் காலத்தில் அவர்கள் நிம்மதியாக
வாழவில்லை.

கலைஞர்கள் திறமையற்றவர்களா? லௌகீக வாழ்வின் நுட்பங்களை அறியாதவர்களா? அறிந்தும் அதைப் பின்பற்ற முடியாதவர்களா? புகழும் பணமும் சேரும் போது அதை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளத் தெரியாமல் ஏன் இருந்தார்கள்?

(நிறைய பேசுவோம்...
நிறைவாகப் பேசுவோம்!)