சீக்ரெட் கிச்சன்



ஆந்திரா ஸ்பெஷல்  பருப்புப் பொடி

மழைக்காலம் முடிந்து, இதோ குளிர் ஊடுருவத் தொடங்கிவிட்டது. சோம்பலான பொழுதுகள் அதிகம் கொண்ட இந்த மாதங்களில் சில நேரம் சமைக்கவும் தயக்கம் வரும். ‘ஒரு ரசமோ துவையலோ கூட போதும்’ என்று தோன்றும். இப்படியான காலத்தில் கை கொடுக்கவே படைக்கப்பட்டவை பொடி
வகைகள்!

சூடான சாதத்தில் பருப்புப் பொடி தூவி, நெய் விட்டு பிசையும் போதே பசி பெருகும்!

இந்தியா முழுவதும் ஏராளமான வகைகள் கிடைத்தாலும், தென்னிந்திய சமையலுக்கு என்றுமே பல சிறப்புகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை... ஒன்று போல மற்றொன்று இருக்காது... ‘ஃபுல் மீல்ஸ்’ எனப்படும் மதிய உணவை ரசித்து  உண்ணவே விதவிதமான வகைகளை விரும்பிப் படைக்கும் அம்மாக்கள்...

கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய 4 மாநில மக்களின் மதிய உணவானது கண்ணுக்கும் விருந்து அளிக்கும். கேரளாவில் அதிக அளவு தேங்காய் பயன்பாட்டின் காரணமாக தேங்காயின் சுவை மேலோங்கி இருக்கும்... வயிற்றுக்கு அதிகம் கெடுதல் செய்யாது. கர்நாடகாவில் இனிப்புச் சுவை சற்று தூக்கல். தமிழகத்திலோ எல்லாமே அளவோடு அமிர்தமாக இருக்கும். மிளகாய்களுக்குப் பெயர் போன குண்டூரைக் கொண்ட ஆந்திராவிலோ, இவற்றை எல்லாம் தாண்டிய தனிச் சுவை மிக்க காரசார சமையல் பிரசித்தம்.

ஆந்திர உணவின் காரம் சாப்பிட்டு பழகியவர்களுக்கு, நம் உணவு சிறிது தன்மையாகவும், கேரளா மற்றும் கர்நாடக உணவுகள் குழந்தைகளுக்கோ என்றும் தோன்றலாம். மிளகாய் பயன்படுத்தும் அதே அளவு, ஆந்திராவில் கீரையையும் பயன்படுத்துகின்றனர். ‘புளிச்சகீரை’ எனப்படும் கோங்குராவில் செய்யப்படும் தொக்கும் துவையலும் பொடியும் இன்றெல்லாம் சாப்பிட வைக்கும் சுவை கொண்டது. தலைவாழை இலையில் ஓர் ஓரத்தில் தொடங்கி, இலை முழுவதும் நிரம்பித் ததும்புவது உணவு மட்டுமல்ல... அவர்களின் அன்பும்தானே?

ஆந்திர மக்கள் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும், கையோடு எடுத்துச் செல்லும் பொருட்களில் இடம்பெறுவது கோங்குரா தொக்கு, ஆவக்காய் ஊறுகாய் மற்றும் பருப்புப் பொடி ஆகிய மூன்றும்தான். சூடான சாதத்தில் பருப்புப் பொடி தூவி, நெய் விட்டு பிசையும் போதே பசி பெருகும். ஆந்திரா உணவகங்களில் இந்தப் பொடி (Kandi Podi) வைக்கப்படாத மேஜையே இல்லை. இப்பொடியை ஆங்கிலத்தில் விசித்திரமாக நிuஸீ றிஷீஷ்பீமீக்ஷீ என்றே அழைக்கின்றனர்!
நம் ஊரிலும் பலவிதமாக பருப்புப் பொடி செய்தாலும், ஆந்திரச் செய்முறையை அறிந்து, சுவையில் வித்தியாசம் காட்டலாம், வாருங்கள்!



ஆந்திரா ஸ்பெஷல் பருப்புப் பொடி சீக்ரெட் ரெசிபி

என்னென்ன தேவை?

துவரம் பருப்பு - 1/4 கப்
கடலைப் பருப்பு - 1/4 கப்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10
காய்ந்த கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - கால் டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் பருப்பு வகைகளை தனித்தனியாக நன்கு வாசம் வந்து சிவக்கும் வரை வறுத்து எடுக்கவும்.சீரகத்தையும் வெறும் கடாயில் வறுக்கவும்.சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயும்  கறிவேப்பிலையும் சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும்.சிறிது ஆற விட்டு, உப்பு சேர்த்து அனைத் தையும் அரைத்து, காற்று புகாமல் பாட்டிலில் மூடி வைக்கவும்.


பூண்டு பருப்புப் பொடி

என்னென்ன தேவை?

துவரம் பருப்பு - 1/4 கப்
கடலைப் பருப்பு - 1/4 கப்
பாசிப் பருப்பு - 1/4 கப்
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 8 பல்
காய்ந்த மிளகாய்  - 10
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - சில துளிகள்.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் பருப்பு வகைகளை தனித்தனியே நன்கு வாசம் வரும் வரை சிவக்க வறுக்கவும்.சீரகத்தையும் தனியே வறுக்கவும்.எண்ணெய் விட்டு, மிளகாய் போட்டு, நன்கு சிவக்க வறுத்து, அந்தச் சூட்டில் கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து சிறிது வறுக்கவும்.நன்கு ஆறியதும் அனைத்தையும்  சேர்த்துப் பொடித்து சூடான சாதத்தில் நெய்யுடன் சேர்த்து பரிமாறவும்.

உங்கள் கவனத்துக்கு...

பாசிப் பருப்பு சேர்த்தும், பொடியுடன் சிறிது எள் வறுத்தும் சேர்க்கலாம். மணமும் சுவையும் கூடும்.மிக நைசான பொடியாக அரைக்க வேண்டாம்.இந்தப் பொடிகளுடன் சிறிது கருப்பு உளுந்தும் புளியும் சேர்த்தும் அரைக்கலாம். இட்லிப் பொடியாக உபயோகிக்கச் சிறந்தது.கருப்பு உளுந்து, கருப்பு எள் - இரண்டும் கலந்தும் செய்யலாம்.கொள்ளு (கானம்) சேர்த்துச் செய்தால் இன்னும் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.

வல்லாரை, தூதுவளை, முடக்கத்தான், பிரண்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை உலர வைத்து, வறுத்து, பொடியாக்கிச் சேர்த்தும் பருப்புப் பொடி செய்யலாம்.
நிறைய கறிவேப்பிலை வறுத்துச் சேர்த்து, கறிவேப்பிலைப் பொடியாகவும் செய்யலாம்.கூட்டு, அப்பள வடாம்கள் சரியான ஜோடிப் பொருத்தம். வத்தக்குழம்பைத் தொட்டுக்கொண்டே கூட, இதை ஒரு பிடி பிடிக்கலாம். சாம்பார், மோர்க்குழம்பும் ஓ.கே!குழந்தைகளுக்கு பருப்புப் பொடி சாதமாக டிபன்பாக்ஸுக்கும் கொடுக்கலாம். ஆறினாலும் ருசியாகவே இருக்கும்.அதிக காரம் விரும்பாதவர்கள் இட்லி, தோசைக்கு மிளகாய் பொடிக்குப் பதிலாக இதையே பயன்படுத்தலாம்.

கிச்சன் கிங்: அடுத்த இதழில்...